இதன் காரணத்தினால் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் இவ்விதமான சமையல் அடுப்புகளைப் பயன்படுத்துவதை பலர் தவிர்த்துக் கொள்ளவே விரும்புகின்றனர். இன்னும் பலர் மின்சார மற்றும் மண்ணெண்ணெய் சமையல் அடுப்புகளைப் பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்திய அதிகாரிகள், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறியவுமென விஷேட குழுவொன்றை நியமித்தார்கள். அக்குழுவினர் இச்சம்பவங்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை குழுவின் தலைவரான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகேவினால் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் குறித்த குழுவின் உறுப்பினரான மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் குறிப்பிடுகையில், ‘இந்நாட்டில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளில் தீ பரவல் மற்றும் வெடிப்பு சம்பங்கள் 847 இவ்வருடம் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் காயமடைந்துமுள்ளனர். 18 சம்பவங்களில் சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ‘இச்சம்பவங்களில் 797 லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புகளிலும் 50 வெடிப்புச் சம்பவங்கள் லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டர்கள் பயன்படுத்தப்படும் அடுப்புகளிலும் ஏற்பட்டிருக்கின்றன என்று கூறியுள்ள அவர், இவ்வருடம் நவம்பர் மாதம் வரையும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் 28 இலட்சம் சமையல் எரிவாயு சிலிணடர்களையும் லாஃப் எரிவாயு நிறுவனம் 2 இலட்சத்து 80 ஆயிரம் சிலிண்டர்களையும் சந்தைப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்
அதேநேரம் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புக்களில் இவ்வாறு தீ பரவல் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் ஏற்படக் காரணமாக அமைந்திருக்கும் விடயம் சரியாக அடையாளம் காணப்பட்டு அவ்விடயத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும். அதன் ஊடாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கக் கூடியதாக இருக்கும்.
அத்தோடு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படும் சமையல் அடுப்புக்களில் இவ்வாறு தீ பரவல் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் ஏற்படுவதன் காரணத்தைக் கண்டறியவும் தவறக் கூடாது. அவற்றில் சதி, சூழ்ச்சிகள் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பன குறித்தும் ஆராய வேண்டும். அவ்வாறான தீய செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பின் எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு அவ்வாறான மோசடியான நடவடிக்கைகளில் எவராவது சம்பந்தப்பட்டிருப்பின் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.