கொழும்புப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு
இலங்கையில் மதங்களை அடிப்படையாக வைத்து பிறரை தாழ்த்தவும் அடக்கவும் முயல்கின்றார்கள் என்பதற்கு 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நலல உதாரணம். மதத்தின் பெயரைக் கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் உண்மை மற்றும் அதன் பின்னணி குறித்து இன்னும் வெளிப்படுத்தப்படாமலிருப்பது ஏன் ? சுயநலம் எம்மை ஆட்சி செய்கின்றமையே இவ்வாறு உண்மைகள் வெளிப்படுத்தப்படாமலிருப்பதற்கான காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
மதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரை தாழ்த்தி பிரிதொருவர் முன்னேறுவதற்கு முயற்சிக்கின்றனர். பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதன் மூலம் இந்த நிலைமையை மாற்ற முடியாது.
தம்மை தாழ்த்திக் கொண்டு ஏனையோரை மேம்படச் செய்தால் மாத்திரமே சமூகம் தூய்மையானதாகும் என்றும் பேராயர் வலியுறுத்தினார்.
நத்தார் தினத்தை முன்னிட்டு ராகமை – தேவத்தை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தற்போது ஒழுக்கமற்ற சமூகமே உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏனையோருக்கு என்னவானாலும் அது குறித்து எனக்கு கவலையில்லை. நான் மாத்திரம் சிறப்பாக வாழ்ந்தால் போதும் என்ற நிலைமையே காணப்படுகிறது.
மக்களை இன்று போட்டித்தன்மையான நாட்டுக்குள் சமூகம் தள்ளுகின்றது. நேர்மை முற்றாக இல்லாமல் போயுள்ளது.
சிறிய மட்டத்தில் உள்ளவர்கள் முதற்கொண்டு உயர் பதவி வகிப்பவர்கள் என அனைவரும் மோசடிக்காரர்களாகவே உள்ளனர்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் 80 சதவீதம் வனப்பகுதி காணப்பட்டது. தற்போது அது 16 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. உயர்மட்டத்திலுள்ளவர்கள் முதற்கொண்டு சிறியவர்கள் அனைவரும் மரங்களை வெட்டுகின்றனர்.
அழகிய இலங்கையின் சுற்றாடலை சீரழித்தது அரசியலாகும். சுற்றாடலை யாரும் மதிப்பதில்லை.
எவ்வளவேனும் இலஞ்சம் கிடைக்கப் பெறுகிறது என்றால் , சூழல் மாசடைந்தால் எனக்கென்ன என்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர்.
இலங்கையில் நான்கு பிரதான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. எனினும் மதத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.
நாம் எந்தவொரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ஏனையோரை புறந்தள்ளி நாம் முன்னோக்கிச் செல்வதற்கே முயற்சிக்கின்றோம். ஆனால் தம்மை தாழ்த்திக் கொண்டு ஏனையோரை மேம்படச் செய்தால் மாத்திரமே சமூகம் தூய்மையானதாகும்.
பாராளுமன்றத்தில் சட்டமொன்றை தயாரிப்பதன் மூலம் அதனைச் செய்ய முடியாது. நாம் ஏனையோர் மீது குற்றஞ்சுமத்துகின்றோம். ஆனால் எமது வாழ்க்கை மாற்றிக் கொள்வதற்கு நாம் முயற்சிப்பதில்லை.
அழகிய பசுமையான இலங்கை காடழிப்பின் காரணமாக இன்று வரண்ட பாலைவனமாகியுள்ளது. திறந்த பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் உள்நாட்டு உற்பத்திகள் முடங்கிப் போயுள்ளன. இதே நிலைமை தொடர்ந்தால் இலங்கையை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் 269 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. அவர்களது உயிர் எதற்காக பறிக்கப்பட்டது? மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டாமையினாலா? மதங்கள் காணப்படுவது மனிதர்களைக் கொல்வதற்காக அல்ல. அவர்களை வாழ வைப்பதற்காகும். மதத்தின் பெயரில் மனிதன் கொல்லப்பட்டால் அந்த மதம் தேவையற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான உண்மை , அதன் பின்னணி குறித்து இன்னும் கண்டு பிடிக்க முடியாமருப்பது ஏன்? சுயநலவாதம் எம்மை ஆட்சி செய்கின்றமையே இதற்கான காரணமாகும்.
சமூக மாற்றத்திற்கு நாம் செல்ல வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சுயநலத்தையும், பாவங்களையும் தோற்கடிக்க உதவுமாறு கோருகின்றேன்.