அகன்று பரந்த உரோமை இராச்சியத்தின் சீசர் அரசனாகபதவியேற்ற போது அவன்
தன்னை சாம் பிராந்தியத்தின் செசார்என்றும் யூலியஸ் தெய்வத்தின் மகன்என்றும் தந்தையர் நாட்டின் தந்தைஎன்றும் குருக்களின் முதல்வன் என்றும்அழைத்துக் கொண்டான்.
அவன் தனது ஆளுகைக்கு உட்பட்ட நாட்டின் மக்கள் தொகையை கணக்கிடுமாறு ஆணை பிறப்பித்தான்.
ஆணையை நிறைவு செய்யவே சூசை மாதவன் நிறைமாத தாய்மை நிலை அடைத்திருந்த அன்னை மரியாளை அழைத்துக் கொண்டு கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.
அங்கு விண்ணவர் பண்ணிசைக்க, அதிசய விண்மீன் சாட்சியம் வழங்க, மேய்ப்பர்கள் உலகம் எதிர்பார்த்த நற்செய்தியைப் பெற இறைமகன் கன்னி மரியாள் வயிற்றில் அவதரித்தார்.
கடவுள் தம் மக்களை பாவம் எனும் இருளில் இருந்தும் அடிமை வாழ்வில் இருந்தும் விடுவிக்க தொடக்க காலம் முதல் பல இறைவாக்கினர்கள் வழியாக முயற்சித்தார்.ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் தன் ஒரே மகன் வழியாக அந்த மீட்பு எனும் பேரொளியை அளிக்கின்றார். ஆனால் நாமோ அவரது அன்பை உதறித் தள்ளி விட்டு இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இஸ்ராயேல் மக்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள் ஆனால் பாவம் என்ற புதரில் வாழ்ந்த அம்மக்கள் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக வாழ்ந்தார்கள்.
மேலும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்தனர். இத்தகைய இக்கட்டான சூழலில் கிறிஸ்து என்னும் தன் மகன் வழியாக மீட்பு உண்டு என்று இறைவன் கூறினார்.
நீங்கள் என்னை விட்டு விலகிச் சென்றாலும் நான் உங்களைத் தேடி வந்து விடுவிப்பேன் அதுவும், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று வாக்குறுதியும் கொடுக்கின்றார்.
தன்னுடைய அன்புப் பிள்ளைகள் கொத்தடிமைகளாக வாழ்வதைக் கண்ட கடவுள் மனமிரங்குகின்றார்.
ஒரு நொடி கூட தன் மக்களை மறக்காமல் மீட்பின் ஒளியினை, விடுதலை என்னும் ஒளியை தன் மக்களுக்கு அளிக்க தானே முன்வந்து குழந்தை வடிவில் எளிய முறையில் பிறக்கின்றார்.
குழந்தை வடிவில் பிறந்த கடவுள் இறந்தோரின் கடவுள் அன்று, மாறாக வாழ்வோரின் கடவுள். அவரிடம் இருக்கின்ற வாழ்வுதான் இன்று மனிதர்களாகிய நம் அனைவருக்கும் ஒளியாக இந்தச் சிறிய குடிலில் பிறந்துள்ளது.
கடவுள் மனிதனாக பிறந்தது மானிட குலத்தின் மாபெரும் கொடையாக அமைந்துள்ளது. பலமுறை பலவகைகளில் இந்த மீட்பு என்னும் ஒளியை, வாழ்வு என்னும் ஒளியை வழங்க முயன்ற கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அளிக்கின்றார். இது கடவுள் உலகின் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது. வசதியான குடும்பத்தில் பிறந்தால் வாழலாம் என்ற மனித கண்ணோட்டத்தை முறியடித்து அனைவராலும் மிகவும் சிறியதாக கருதப்பட்ட யூதா நாட்டில் இருந்த ஒரு சிறிய ஊரான பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தை தேர்ந்தெடுத்து தன்னுடைய அன்பு மக்களை மீட்க மடைமை என உலகம் கருதுபவற்றை கடவுள் தேர்ந்து கொண்டு மீட்பின் ஒளியை குழந்தை வடிவில் உலகிற்கு அளிக்கின்றார்.
கடவுளின் மீட்புக்கான ஞானிகள் பலர் வந்திருந்தனர் ஆனால் கடவுளோ சற்று வித்தியாசமாக சமுதாயத்தில் கடை நிலையில் உள்ளவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகின்றார்.
காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் என்ற ஏசாயாவின் வார்த்தைக்கேற்ப, இடையர்கள் கடவுளின் மாபெரும் மீட்பின் ஒளியைப் பெற்று கொள்கின்றனர்.
அன்று பாலனாக பிறந்த இயேசு தன் பணி வாழ்வில் பாவிகளையும் நோயாளிகளையும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் தானாகத் தேடினார்.
இதனால் அன்று ஏசாயா முன்னறிவித்த மீட்பின் பேரொளியை மக்கள் பெற்று புதுவாழ்வை பெற்றவர்களாய் புத்துயிர் பெற்றவர்களாய் கடவுளை தங்கள் உள்ளத்தில் ஏந்தியவர்களாய் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்தார்கள்.
இது இவ்வாறிருக்க, இன்றைய காலச் சூழ்நிலையில் நாம் எவ்வாறான நத்தார் விழாவைக் கொண்டாடுகிறோம் என சிந்திப்பது சாலச் சிறந்ததாகும். திருச்சபை வரலாற்றில் முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாடப் படவில்லை. கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவே கொண்டாடப்பட்டது. அக்காலகட்டத்தில் அதிகமான வேதகலாபனை ஏற்பட்டு பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து திருமறையை வேரூன்றச் செய்தனர்.
கிறிஸ்துவுக்குப் பின்னர் 325 இல் உரோம ராஜ்யத்தின் அரசமறையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே 4ஆம் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் படிப்படியாக வளர்ந்து வந்த நத்தார் விழா பதினெட்டாம் நூற்றாண்டில் நத்தார் விழா குடும்ப விழாவாக மாற்றம் கண்டது.
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் நுகர்வோர் கலாசாரத்தில் நத்தாரின் உண்மைத் தன்மை மறைந்து வெறும் ஆடம்பர விழாவாக, விளம்பரத்தின் விழாவாக வர்த்தக விழாவாக மாற்றம் கண்டுள்ளது. இதே நிலைதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது.
அன்று மாட்டுக் குடிலில் பிறந்த அதே இயேசு பாலன் இன்று பாழடைந்து போன நமது உள்ளம் என்னும் குடிலில் ஒளியேற்ற வருகின்றார். நாமோ கடவுளுக்கு இடம் கொடுக்க மறுக்கின்றோம். ஏனெனில் நாம் சமூக தொடர்பு சாதனங்களுக்குள் மூழ்கி கிடக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நாம் விடுபட்டு உண்மையான மகிழ்ச்சியான நத்தார் விழாவிற்குள் பிரவேசிப்போம்.
-அம்புறோஸ் பீற்றர்
(மறையாசிரியர்)