(மன்னார் நிருபர்)
(27-12-2021)
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் இன்று திங்கட்கிழமை (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டமானது இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஹாஜிர் தலைமையில் இடம்பெற்றது.
தவிசாளரின் தலைமை உரையைத் தொடர்ந்து பிரதேச சபையின் செயலாளரினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையினை வாசிக்க முற்பட்ட போது வரவு செலவு திட்ட அறிக்கையை தாங்கள் எதிர்ப்பதாக மன்னார் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பிரேரணையை சபையில் கொண்டு வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன் மொழிந்து வழி மொழிந்தனர்.
இதேவேளை இவ் வரவு செலவு திட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர் முன்மொழிய அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சபையின் தவிசாளரினால் வரவு செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன் போது தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களுமாக மொத்தம் 11 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தலா ஒருவர் வீதம் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இவ் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக ஒரு மேலதிக வாக்கு வித்தியாசத்தில் இவ் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.