கோலாலம்பூர், அக்.26:
தமிழர்கள் (திராவிடர்கள்) மீதான அரசியல்-ஆன்மிக-பண்பாட்டுப் போரை ஆரியர்கள் (பிராமணர்கள்) மேற்கொண்டு வருவது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகவேத் தொடர்கிறது. இதற்கு தொல்காப்பியமே தக்க சான்று. இத்தகைய பண்பாட்டுப் போரில், தமிழர்கள் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவி வருகின்றனர்.; ஆரியம் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.
இதற்கு அடிப்படையான காரணம், தமிழர்களை ஆரியம் ஒருகாலும் நேரடியாக எதிர்ப்பதில்லை. மாறாக, தமிழர்களையே ஒருவருக்கொருவர் மோதவிட்டு காரியத்தை சாதித்து வருகிறது. இதை உணர்ந்தோ உணராமலோ ஒருசில தமிழன்பர்கள் இதற்குப் பலியாகி வருவது காலமெல்லாம் தொடர்கிறது.
இதில் ஆன்மிக எல்லையைப் பயன்படுத்திதான் பார்ப்பனர்கள் தங்களின் மேலாதிக்கத்தை அதிகமாக நிலைநிறுத்திக் கொண்டனர். அவர்கள் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்ற அரிச்சுவடே அற்றுவிட்டது.
ஆன்மிகம் சார்ந்து அவர்கள் படைத்த ஆயிரக் கணக்கான புனைகதைகளில் தேவர்கள் என்றால் அடுத்து அரக்கர்களும் சொல்லப்படுவார்கள். கதை இடம்பெறுவது வானுலகம் என்றால் இப்படி; நிலவுலகம் என்றால் நல்லவர்கள் மத்தியில் அசுரர்களும் காட்டப்படுவார்கள்.
இவ்வாறான கதைகளில், தேவர்களாகவும் நல்மாந்தராகவும் சுட்டப்படும் பாத்திரங்கள் ஆரியர்களை(பார்ப்பனர்களை) உருவகப்படுத்தியும் அசுரர்-களாகவும் அரக்கர்களாகவும் காட்டப்படுவோர் தமிழர்களை குறிவைத்தும் படைக்கப்பட்டிருக்கும்.
இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் ஒரு சில தமிழர்கள், கதைகளில் வரும் தீய கதாப்பாத்திரங்களை தமிழர்கள் அல்லது திராவிடர்கள்தான் என்று ஏன் கற்பிதம் செய்ய வேண்டும் என்று எளிதாகக் கேட்பர். அப்படிப்பட்டவர்களை தமிழ் என்னும் உரைக்கல்லில் உரசிப் பார்த்தால் ஒரு மெல்லிய அளவுக்காவது அவர்களிடம் ஏதோவொரு வகையில் மாசிருக்கும்.
புராண கதைகளில் வரும் தீய பாத்திரங்களை மனதில் அழுத்தமாக பதியவைப்பதற்காகவே அவர்களை அரக்கர்களாகக் குறிப்பிட்டு அவர்களின் குணநலன்களின் அடிப்படையில் அவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னொரு சாரார் வைக்கும் வாதம். அதை ஏற்றுக் கொண்டாலும்கூட நாடகங்களிலும் திரைப்படங்களிலும் காட்டப்படும் அரக்கர்கள் கறுத்த நிறத்தில் தடித்த உருவம், பெருத்த வயிறு, நீண்ட கோரைப் பற்கள் என்றுதான் காட்டப்பட வேண்டுமா?
ஓருவேளை, தேவலோகத்திலும் வெப்ப மண்டலம் என்ற பகுதி இருக்குமோ? இந்த அரக்கர்கள் எல்லாம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என்றும்(?) எண்ணிடத் தோன்றுகிறது. நாடகத்தில், திரைப் படங்களில் மட்டுமல்ல; பக்தி இலக்கியங்களில்கூட இந்தக் காட்சிகளும் உருவங்களும் சிந்தாமல் சிதறாமல் அவ்வண்ணமே சுட்டப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் வ.முரளி என்பார் தமிழகத்தின் தினமணி நாளேட்டில் எழுதிய கட்டுரையில் சிலப்பதிகாரத்திலேயே தீபாவளியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதில் ஒளி வழிப்பாட்டைப் பற்றி இளங்கோ அடிகளே பா புனைந்துள்ளார் என்றும் அதற்கு சான்றாக இரண்டு வரிகளையும் சிலப்பதிகாரத்திலிருந்து அவர் எடுத்து கையாண்டிருந்தார்.
தமிழர்களை அரக்கர்களாக காட்ட புனையப்பட்ட நரகாசுரன் கதையில், அவன் கொல்லப்பட்ட நாளில் அவனுக்காக திதி அல்லது திவசம் அனுசரிக்க வேண்டும்; அந்தக் கொடியவனின் மரணத்தை பட்டாசு கொளுத்தியும் புத்தாடை அணிந்தும் கொண்டாட வேண்டும் என்று 19-ஆம் நூற்றாண்டின் கடைசிக் கட்டத்திலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவின் சுதந்திர வேட்கையுடன் இதையும் இணைத்து திலகர் போன்றோரால் எடுக்கப்பட்ட முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது; இன்று தீபத் திருநாளாகவும் ஒளிவெள்ளப் பெருநாளாகவும் மாற்றம் கண்டுள்ளது நரகாசுரனுக்கான திதி என்னும் திவசம். சங்கம் மறுவிய காலத்தில் சேர இளவரசனாகத் தோன்றி சமணத் துறவியாக மாறிய இளங்கோ அடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை ஏறக்குறைய 1,800 ஆண்டுகளுக்குப் பின் உருவான தீபாவளிப் பண்டிகைக்கான கதைக்கு துணைகொள்ளும் அளவுக்கு இன்று ஆரியம் துணிந்துவிட்டது.
அதைப்போலவே, இராமாயணக் கதையில் வரும் இராவணனும் அசுரனாக சித்தரிக்கப்பட்டு அவனுக்கு பத்து தலை இருந்ததாகவும் புனையப்பட்டது. உலக வரலாற்றில் எந்த மனிதனுக்கு இரண்டு மூன்று தலைகள் இருந்ததாகக் கூட எந்த அறிவியலாளரும் சொன்னதில்லை.
ஆனால், இந்த 21-ஆம் நூற்றாண்டிலும்கூட, இந்த மலையகத் திருநாட்டில் தமிழ் மன்னனும் ஏழிசை வேந்தனுமான இராவணன், 10 பத்து தலை கொண்ட அரக்கனாகக் காட்டப்பட்டு நாடகம் படைக்கப்படுகிறது. இதைச் செய்பபவர்கள் ஆரியர்கள் இல்லை; தமிழர்கள்தான்.
கலை-பண்பாட்டு வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஓர் அறவாரியத்திடம் இருந்து பல்லாயிரக் கணக்கிலோ அல்லது இலட்சக் கணக்கிலோ நிதியைப் பெற்று வாலி கதைப் பாத்திரத்தின் பெயரில் படைக்கப்பட்ட அந்நாடகத்தில் தமிழர்கள் குரங்குக் கூட்டமாகவும் இராவணனுக்கு 10 தலைகள் இருந்ததாகவும் காட்சிகள் படைக்கப்பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன் தலைநகர் மாரியம்மன் கட்டடத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் சுமதி என்னும் தமிழக வழக்கறிஞர் சூர்ப்பனகையைப் பற்றி முடிந்தவரை இழிவாகவும் மகிழ்ச்சி பொங்கவும் பேசினார்.
அரக்கிப் பாத்திரமான சூர்ப்பனகையில் மார்பகம் அறுத்து வீசப்பட்ட காட்சியைக்கூட இவரும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு கொஞ்சமும் மனம் கூசாமல் பரவசமாக பேசினார்.
இது குறித்து ஒரு விமர்சன செய்தியை அப்போது நான் பணியாற்றிய நாளேட்டில் எழுதியதற்காக எவரோ ஒரு தமிழர் தொலைபேசியில் அழைத்து என்னை மிரட்டினார்.
‘அந்த மவனே’, ‘அந்த மவனே’ என்று என்னைத் திட்டினார். எல்லோரும் அதிலிருந்துதானே பிறக்கிறோம். அப்படிப்பார்த்தால் நீயும் அந்த மகன்தானே என்று மறுமொழி சொன்ன நான், நானும் நீயும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அத்தனை ஆண்களும் அந்த மகன்தான் என்றதும் அவர் இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
தற்பொழுது, இன்றைய ‘அமுதே தமிழே’ நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நாடகப் பாங்கைப் பற்றி பேசியவர், அனுமன் பாத்திரத்தைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார். மலேசிய அரசத் தமிழ் வானொலியான மின்னல் பண்பலை அலைவரிசையில் ஞாயிறுதோறும் காலை பத்தேகால் மணியளவில் படைக்கப்படும் இந்த இலக்கிய நிகழ்ச்சியில் இலக்கியத் தாக்கத்தைவிட சமய தாக்கத்தான் அதிகமாக இருக்கும்.
சிற்சில சமயங்கங்களில் இது, பக்தி இலக்கிய நிகழ்ச்சியோ என்றெண்ணும் அளவிற்கு நிகழ்ச்சிகள் அமையும்.
அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் பேசியவர், அனுமனைப் புகழ்ந்தமட்டில் நில்லாது, இராவணன், அசுரன் என்ற பிம்பத்தை முடிந்தவரை கட்டமைத்தார். ஒரு கட்டத்தில் அனுமனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த இராவணன், அனுமனின் வாலுக்கு தீ வைக்கும்படி தன் அசுரர் படைக்கு ஆணையிட்டதாகவும் அந்தப் பேச்சாளர் இனிமையாகப் பேசினார். இராவணனைச் சுற்றி இருந்த அத்தனைபேரும் அரக்கர் கூட்டத்தினர் என்பதாக அவரின் கருத்து அமைந்தது.
எப்போதோ வால்மீகியால் புனையப்பட்டு, அதன் அடிப்படையில் குலோத்துங்க மன்னன் கேட்டுக் கொண்டதற்காக பெருங்கவி கம்பன் இயற்றிய கம்ப இராமாயணம் என்னும் வழிநூல், தலைசிறந்த இலக்கியப் படைப்பு என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், பிராமணர்களை உயர்வாகவும் குறிப்பாக வைணவ சமய வழிபாட்டு நாயகனான கிருஷ்ணனின் அவதாரம் இராமன் என்பதாகவும் புனையப்பட்டுள்ள அந்தக் கதையில் தமிழர்கள் குரங்குக் கூட்டத்தினராகவும் அசுரர்களாகவுமே அந்தக் கதைநெடுகக் காட்டப்பட்டுள்ளனர்.
தேவ குலத்தினர், அசுரக் கூட்டத்தினர், அனுமன் வாலி உட்பட்ட குரங்குக் கூட்டத்தினர் ஆகிய முத்தரப்பினர்தான் அந்தக் கதையில் சொல்லப்பட்டு உள்ளனர். மொத்தத்தில் தமிழர்களை இழிவுப்படுத்தியும் திராவிட தொன்மைக்கூற்றை சிதைக்கவும் உருவகப்படுத்தப்பட்ட இந்தப் புனைகதையை ஆரியர்களைவிட தமிழர்கள்தான் பெரும்பாலும் ஆதரித்து வருகின்றனர்.
இன்றைய மின்னல் பண்பலை வானொலியில் இதை மீண்டும் கேட்டு வருந்திய நிலையில், மலேசியாவில் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமையாளர்-களுள் ஒருவரிடம் ‘அரக்கர், அரக்கியர்’ என்றால் யார் என்று சுற்றி வளைக்காமல் நறுக்கென்று கேட்டேன்.
என்பால் அக்கறையும் மிகுந்த ஈடுபாடும் கொண்ட அவர், ஒருவித சிரிப்பை சிந்திவிட்டு, பேசத் தொடர்ந்தார்.
“இதைப் பற்றி யெல்லாம் எழுதி மற்றவர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டாம்; உங்களின் வருமானத்திற்கான வழிகுறித்து சிந்தித்து அந்த இலக்கை நோக்கி எழுதுவது நலம்; “எல்லாவற்றுக்கும் மேலாக, கதையை கதையாகத்தான் பார்க்க வேண்டும்; அதற்கும் மேலாக ஒரு படைப்பைப் பொறுத்தவரை, எழுதப்பட்டுள்ளது எதைப் பற்றி என்பதைவிட எழுதியிருப்பது யார் என்று பார்க்கும் உலகம் இது; அதனால் இதைப்பற்றி எழுதி காலத்தை விரயமாக்க வேண்டாம்” என்று தூய்மையான உள்ளத்துடன் அவர் சொன்னதும். .. ,
“ஏற்றுக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, மனம் பொறுக்கமாட்டாமல் இதை எழுதுகிறேன்.
‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் சகத்தினையே அழித்துடுவோம்’ என்றார் வீரகவியும் மாகவியுமான பாரதி;
‘ஒரு மனிதன் இரந்து வாழ வேண்டிய நிலையில் இருந்தால், அவனைப் படைத்த இறைவனே அழிந்து ஒழியட்டும்’ என்று சாபம் இட்டுள்ளார் வள்ளுவர்.
வயிற்றுப் பாட்டுக்கே இந்த மாமனிதர்கள் இப்படி பொங்கி எழுந்துள்ளனர்; அப்படியானால், ஒர் இனத்தையே இழிவுப் படுத்தவும் அதன்வழி அவர்களை பலவீனப்படுத்தவும் வெற்றிகொள்ளவும் முனைப்பு காட்டியுள்ளதைக் கண்டு மனம் பொறுமுகிற உள்ளப்பாட்டிற்கு எப்படி பொங்கி எழ வேண்டும்?
தவிர, ஒரு கதையை கதையாகப் பார்க்க வேண்டும் என்பது சரிதான்; ஆனால், எந்தக் கதையை எப்படிப் பார்க்க வேண்டும் என்னும் பாங்கு இருக்கிறதல்லவா?
அண்மையில் மம்முட்டியின் மகன் தயாரித்த ஒரு மலையாள படத்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கப்பட்டது.
அது ஒரு திரைப்படம்; அதில் நாயும் நடித்துள்ளது. அதற்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது; அவ்வளவுதான் என்றமட்டில் அதைக் கடந்துபோக வேண்டும் என்றால் அது எப்படி சரியாகும்?
ஆனால், தமிழர்கள் உணர்வின்றி வெறுமனே நமர்த்துக் கிடக்கின்றனரே ஏன் தமிழ்த் தாயே?
தமிழன்னையே, காலங்காலமாக தொடரும் இந்நிலை உனக்கும் ஏற்புடையதோ?
-நக்கீரன்