தீபச்செல்வன்
“ஆழக்கடல் எங்கும் சோழ மகாராஜன் ஆட்சி புரிந்தானே அன்று , தமிழீழ கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று..” ஈழச் சிறுவர்களின் முணுமுணுப்பிற்குரிய இந்தப் பாடல் சங்ககாலம் தொட்டு தமிழர் வரலாறு முழுவதும் படர்ந்திருந்த ஆழக்கடல் போன்ற வரலாற்றை எளிமையாகச் சொல்கிறது. உலகத்தின் வியப்பிற்குரிய விடயமாக தமிழர்களின் கடல் பற்றிய அணுகுமுறைகள் துவங்குகின்றன. வரலாற்றின் முதல் காலம் எனச் சொல்லப்படுகிற சங்க காலத்திலேயே தமிழரின் கடல் படை ஆற்றல் நிறைந்திருப்பதை பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களின் வழியாக வியப்புடன் அறிந்திருக்கிறோம். வரலாற்றில் தமிழர்கள் கடல் குறித்துக் கொண்டிருந்த வீரத்தின் உச்சமாகவே ஈழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கடற்படை வரலாற்றின் பக்கங்களில் தன்னை பதிவு செய்திருக்கிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்த சீனத் தூதுவர் குய் சென் ஹாங் யாழ் மற்றும் மன்னார் கடல்களின் வழியே இந்தியாவை காண முயற்சித்துள்ளார். “இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம்” என்று குய் சென் ஹாங் கேட்டிருப்பது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் மாத்திரமல்ல, ஈழத் தமிழர்களை சூழப் போகும் அப்பாயத்தின் வெளிப்பாடுமாகும். இதில் சிங்களவர்கள்மீதான இலக்கும் உள்ளடக்கமே. ஏற்கனவே யாழ்ப்பாணத் தீவுகளை சீனா பெற முயற்சி செய்ததும் அதற்கு இந்தியா வெளிப்படுத்திய அரசியல் நகர்வுகளையும் கண்டிருக்கிறோம். இனப்படுகொலைப் போருக்கு ஆதரவு அளித்த சீனா அதற்குப் பிறகும் ஐ.நா அவையிலும் ஸ்ரீலங்காவை பாதுகாப்பதில் முன்னணி நாடாக நின்று செயற்படுவதற்கு பின்னாலும் ஆக்கிரமிப்பு நோக்கம் ஒன்று மாத்திரமே இருக்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு நகரில் துறைமுக நகரம் என நாட்டின் பகுதிகள் தாரை வார்க்கப்பட்டு இலங்கை சீனாவின் மாநிலமாக மாறி வருகிறது. அல்லது இலங்கைக்குள் சீனா ஒரு மாநிலம் ஆகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றைக்கு தமிழர்களின் தாயகத்தை கேட்டுத்தான் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லி மாபெரும் இனப்படுகொலையுடன் ஒரு விடுதலை இயக்கத்தை அழித்த ஸ்ரீலங்கா அரசு இன்றைக்கு இலங்கையை துண்டாடி சீனாவுக்கு விற்றுப் பரிசளித்துக் கொண்டிருக்கிறது. தம் சொந்த நிலத்திற்காக போராடிய மக்களையும் போராளிகளையும் இனப்படுகொலை செய்த இலங்கை அரசு இன்று தமது நிலத்தை இன்னொரு நாட்டிற்குக் தாரை வார்ப்பதையே தேசப்பற்று என்கிறார்கள் ராஜபக்ச குடும்பத்தினர்.
தென்னிலங்கையை மெல்ல மெல்ல கைப்பற்றிய சீனா தற்போது வடக்கிலும் குறி வைத்திருப்பதன் வெளிப்பாடாகவே சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அவர்களின் வடக்கு விஜயம் அமைந்துள்ளது. அத்துடன் வடக்கில் மூன்று நாட்கள் தங்கியிருந்ததுடன் தமிழர்களின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எல்லாம் சென்று பார்த்துள்ளார். குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று அங்கு அந்த ஆலய விதிமுறைப்படி மேலாடையின்றி உட்சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டமை தமிழர்களின் மனங்களையும் ஆக்கிரமிக்கும் முயற்சி என்றே அரசியல் ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
சீனா கொழும்பையும் அம்பாந்தோட்டையும் ஆக்கிரமித்த போதே பிரபாகரன் இருந்திருந்தால் சீனா வந்திருக்காது என்றும் பிரபாகரன் தன் சொந்த நிலத்திற்காக போராடினார், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களோ சொந்த நிலத்தை அந்நிய நாடுகளில் தாரை வார்க்கின்றனர் என்று பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்குரோசமாகப் பேசினார்கள். வடக்கு கிழக்கின் பாதுகாப்புக்கு மாத்திரமல்ல தெற்கின் பாதுகாப்புக்கும் புலிகள்தான் தேவை என்றும் தலைவர் பிரகாரன் தான் தேவை என்றும் கோருகிற குரலாகவே இது அமைகிறது. விடுதலைப் புலிகள் இல்லாத ஸ்ரீலங்கா என்பது அபாயகரமாக மாறிவருகிறது. அன்றைக்கு வடக்கு கிழக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்தமாக இந்த தீவு முழுவதையும் புலிகள் பாதுகாத்திருந்தனர் என்ற உண்மையை சிங்களதேசமே இன்று உணர்கிறது. அதற்கு அடிப்படையாக விடுதலைப் புலிகளின் கடற்படை கட்டமைப்பு வலுக்கொண்டிருந்தது. தமிழர்களிடம் வரலாறு முழுவதும் பரவியிருந்த கடற்படை ஆற்றல் புலிகள் இயக்கத்திடம் நவீன கடற்படையாக பரிணமித்தது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஓசெர் மற்றும் மேனன் ஆகியோர் அண்மையில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு ஆய்வு நிகழ்வில் பங்கெடுத்தனர். அதன் போது சோழர் என்பது ஒரு குறிப்பிட்ட வம்சாவழி இல்லை என்றும் அதன் ஒரு நிலத்தின் பெயர் என்றும் தமது ஆய்வுகளின் வழி கருத்துரைத்துள்ளனர். ஈழம் போலவே சோழம் என்பது தமிழ் நிலத்தின் பெயர் என்று அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடற்படை ஆற்றலின் வழியாக சோழர்கள் இலங்கையை மாத்திரமின்றி இந்துனேசியா, கம்போடியா போன்ற நாடுகள் வரை தமது ஆட்சியை விரித்திருந்தனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சங்ககாலத்தில் காவிரிப்பூம் பட்டினம் என்ற கடல் நகரத்துடன் சோழர்களின் கடற்வழிப் பயணமும் கடற்படை கட்டமையும் துவங்குகிறது.
பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் தமது ஆட்சி எல்லைகளை இந்தியாவை விட்டு வெளியில் நகர்த்திய போது மக்களை பாதுகாக்கும் பலமான கடற்படை கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். கடலோரக் காவலர்கள், சுங்கப்படை, தனியார் படை முதலிய கடற்படை சார்ந்த பல்வேறு படைகளை உருவாக்கிய சோழர்கள் தாரணி, லூலா, வஜிரா போன்றபோர்க் கப்பல்களையும் பல்வேறு விதமான சிறிய ரகப் படகுகளையும் கொண்டிருந்தனர். அத்துடன் கடலில் போரிட பல்வேறு விதமான கடற்கலங்களையும் கடற்சமர் ஆயுதங்களையும் கண்டு பிடித்தனர். கடற்கொள்ளையினைத் தடுக்கும் சமாதான கால சுற்றுக்காவல் செய்தல், வாணிப கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், நட்பு கடற்கலங்களுக்கு பாதுகாப்பு அளித்தல், தாயக துறைமுகத்திற்கு அருகிலும் ஆழ்கடலிலும் கடற்சமர் புரிதல், கடற்கரை முகப்புக்களை உருவாக்குதல் அல்லது தேவையான நேரத்தில் படைக் குவிப்பைச் செய்தல், நேசநாட்டின் எதிரிகளுக்குப் பயணத் தடை ஏற்படுத்தல், எதிரியின் கடற்கலங்களை நாசப்படுத்தல் முதலிய இலக்குகளை சோழர் கடற்படை கொண்டிருந்தது.
சோழர்களின் இச் சாதனைகளின் பிறகு ஆயிரம் வருடங்களின் பின்னர் தலைவர் பிரபாகரன் ஈழ மண்ணில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கினார். 1984இல் துவங்கப்பட்ட கடற்புலிகள் அமைப்பு 1990களில் இருந்து கடற்சமர்களைத் துவங்கியது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கிய கடற்புலிகள் அமைப்பு அதன் உள்ளே பல போர் சார்ந்து நவீனக் கட்டமைப்புப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு, விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி, புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு என சோழர்களை விஞ்சிய கட்டமைப்பால் ஈழக் கடலை தமது பலமான பாதுகாப்பில் வைத்திருந்தது புலிகள் இயக்கம். அத்துடன் இந்துமா சமுத்திரத்திலேயே கடல் அமைதி நிலவ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பே ஆணிவேராக இருந்தது.
இத்தகைய வளமான கடற்படை பலத்தை சிதைத்தமையின் ஊடாகவே இன்றைக்கு சீனத் தூதுவர் வந்து நின்று அயல்நாட்டை போர் இலக்குடன் பார்ப்பதற்குரிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது சிங்கள தேசத்திற்குமான அச்சுறுத்தலே. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் இனப்படுகொலைப்போருக்காக ஸ்ரீலங்கா சில சர்வதேச நாடுகளிடம் பட்ட கடனுக்காகவும் இன்னும் பல அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்பதையே இந்த சமிக்ஞை உணர்த்துகிறது. அதே சமயத்தில் புலிகள் இருந்திருந்தால் அவர்களின் கடற்புலிகள் அமைப்பு சிங்கள மக்களுக்கும் இந்தியாவுக்கும் இப் பிராந்தியத்திற்கும் காவலாய் இருந்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.