சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
எச்சரிக்கை: இந்த கட்டுரை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அதன் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலும் தொடர்புடையவர்களுடன் மேற்கொண்ட உரையாடல்கள், இதர தகவல்களின் அடிப்படையில் எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி எழுத்தப்பட்ட பகுப்பாய்வாகும்.
”நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்” என்று ஒரு தமிழ்த் திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அந்த திரைப்படம் படம் வர்த்தக ரீதியில் தோல்வியடைந்தது, ஆனாலும் ஒரு செய்தியைச் சொன்னது. அமைதியாகவும், நல்வழியிலும், முன்னேற்றப் பாதையிலும் செல்லும் ஒரு ஊர் இருக்குமாயின் அது பலருக்கு பொறுக்காது. அந்த அமைதியைக் குழப்பி, அந்த குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது சிலருக்கு பிடிக்கும். இறுதியில் ஒரு சிலரால் ஒரு நல்ல விஷயம் எப்படி நிலைகுலைய வைக்கப்படுகிறது என்பது புரியும்.
அந்தப் படத்தின் கதை அடிப்படையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளியான ஆங்கிலப் படம் ஒன்று மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சுவீடிஷ் திரைப்படம் ஒன்றின் கலவையாக இருந்தது. நல்ல கருவைக் கொண்ட கதை பாழாக்கப்பட்டது என்கிற விமர்சனம் அந்தப் படம் வெளியான போது எழுந்தது. மேலும் போட்ட காசையும் எடுக்க முடியாமல் சென்றது.
எனினும் அந்த திரைப்படம் ஒரு கருத்தை ஆழமாகக் கூறியது. ஒரு நல்ல முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அதற்குப் பல முட்டுக்கட்டைகள் ஏற்படும் அது அந்த நோக்கத்தையே சிதைத்துவிடும் என்பதாகும். மேலும் அந்த நோக்கத்தில் குறைகள் இருக்கலாம், ஆனால் அந்த குறைகள் அடையாளம் காணப்பட்டு களையப்பட வேண்டுமே தவிர, ஊரையே காலி செய்வதோ அல்லது நல்ல நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்ட காரியம் சீர்கெட்டுப் போகக் கூடாது என்பதே அந்தப் படம் சொல்ல வந்து, சரியாகச் சொல்லாமல் விட்ட பிழை.
அப்படித்தான் இலங்கையில் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது இப்போது குழப்பப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. கடந்த பல தசாப்தங்களாக, ஏன் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் சிறுபான்மை மக்கள் அதாவது தமிழ் பேசு மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவது தொடர்கதையான ஒன்று.தமிழ் பேசும் மக்களிடையே ஒற்றுமை இல்லாதது அல்லது அது ஏற்பட்டுவிடக் கூடாது என்று பலதரப்பினர் முனைப்பாகச் செயல்பட்டது ஆகியவை சாபக்கேடான ஒன்றாக இருந்துள்ளது. தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டால், அதன் மூலம் தமது அதிகார பலம் ஆட்டம் காணும் என்பதால் அந்த ஒற்றுமை ஏற்படக் கூடாது என்பதில் தொடர்ச்சியாக வந்த அரசுகள் கவனமாக இருந்துள்ளன. தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஒரு அணி அல்லது கட்சிக்கு விழுமாயின் அது தென்னிலங்கை அரசியலில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
`அரசியல் நரி` ஜெ ஆர் கொண்டுவந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மற்றும் புதிய அரசியல் யாப்பின் அடிப்படை நோக்கமும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் ஒருங்கிணைவதைத் தடுத்து, அவர்களில் ஒருவர் எதிர்க்கட்சித்தலைவராகக் கூட வந்துவிடக் கூடாது என்பதாகும். அவருக்குப் பிறகு வந்த எந்த அரசாலும் சிறுபான்மை மக்களுக்கு மனதளவில் கூட எதுவும் செய்துவிட முடியாமல் செய்தது அவர் கொண்டுவந்த அரசியல் யாப்பு. மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரான போது ஜெ ஆர் செய்த அரசியல் சித்து விளையாட்டுக்களை தமிழ் பேசும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள், அப்படிச் செய்திருந்தால் அது வருந்தத்தக்க ஒன்று.
இப்படியான பின்புலத்தில் தான் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலாந்தனின் முன்னெடுப்பில் கொழும்பு வெள்ளவத்தையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவருடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.தமிழ் பேசும் கட்சிகளை ஒருங்கிணைத்து அந்த மக்களின் அபிலாஷைகள் மற்றும் உரிமைகளை வென்றெடுக்க நாடு தழுவிய நோக்கில் செயல்படும் எண்ணத்திலேயே அந்த கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மனோ கணேசன், ராதாகிருஷ்ணன், திகாம்பரம் மற்றும் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளாட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா, தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி வி விக்னேஸ்வரன், முஸ்லிம் தரப்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் உட்பட பல தலைவர்கள் இரண்டு கட்டமாக நடைபெற்ற கூட்டத்தில் பங்குபெற்றனர். இதற்கு முன்னோடியாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கூட்டம் அமைந்திருந்தது.
நவம்பர் மாதம் யாழில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் காணப்பட வேண்டும் என்று ஒரு கருத்து உருப்பெற்றது.
முதலில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதுவது மற்றும் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தும்படி இந்தியாவைக் கோருவது என ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தது. பின்னர் கொழும்பில் நடைபெறும் கூட்டத்தில் மேலதிகமாக கலந்துரையாடவும் முடிவானது. 13 ஆவது திருத்தம் முழுமையான அரசியல் தீர்வல்ல, அதிகாரப் பரவலாக்கம் என்பதற்கு அப்பால் சென்று சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை என்பதும் வலியுறுத்தப்பட்ட அதேவேளை, குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தத்தில் கூறியவற்றையாவது முழுமையாகப் பெற்றுக்கொள்ள இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி ஆதரவு கோருவது என்றும், அதற்கான வரைவு கடிதம் ஒன்றை தயார் செய்து அடுத்த கூட்டத்தில் விவாதிப்பது என்றும் முடிவானது.
கொழும்பில் நடந்த அடுத்த கூட்டத்தில் வரைவு கடிதம் அதன் தலைப்பு ஆகியவை விவாதிக்கப்பட்டு ஓரளவுக்கு உடன்பாடு காணப்பட்டு டிசம்பர் பிற்பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி வடிவம் கொடுப்பது என்றும் முடிவான நிலையில், குழப்பங்களும் குழப்புவதும் அரங்கேறியது.
அந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சம்பந்தருடன் பங்குபெற்ற சுமந்திரன் மற்றும் மாவை ஆகியோர் முன்னர் உடன்பட்ட விஷயங்கள் மற்றும் வரைவு தீர்மானங்கள் தொடர்பில் குறுக்குச்சால் ஓட்டினர். அரசியல் தீர்வு குறித்து அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியைப் பெற வேண்டும், இந்தியாவை நம்பியோ அல்லது 13 ஆவது திருத்தமோ எந்த பலனையும் தராது என்கிற நிலைப்பாட்டில் சுமந்திரன் இருந்ததாக கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தரின் உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் சார்பாக அனைத்து முடிவுகளையும் சுமந்திரனே எடுக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இலங்கை தமிழரசு கட்சி மட்டுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயும் அவர் யாரையும் எது தொடர்பிலும் கலந்தாலோசிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்டகாலமாக நிலவி வருகிறது.
எனினும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகள் பெறப்படுவதில் இந்தியாவை உள்வாங்காமல் தீர்வு சாத்தியமில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். சுமந்திரன் நம்புவதாகக் கூறப்படும் அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா போன்ற தமிழ் பேசும் மக்களுக்கு ஆதரவு நாடுகளும் இந்தியாவை கலந்தாலோசித்தே முன்னரும் முடிவெடுத்துள்ளனர் இனியும் எடுப்பார்கள் என்பது உறுதி. அப்படியான யதார்த்த சூழலில், பல தசாப்தங்களுக்கு பிறகு தமிழ் பேசு கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முன்னெடுப்பைச் செய்யும் போது இலங்கை தமிழரசுக் கட்சி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொள்கிறது என இந்த கூட்டத்தில் பங்கு பெற்ற-கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட- அனைவரும் மிகவும் எரிச்சலும் மனக்கசப்பும் அடைந்துள்ளனர். பொதுவான அம்சங்களுக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றாக மூன்று சுற்றுக் கூட்டத்திற்கு ஒன்று கூட்டுவதே இன்றைய காலகட்டத்தில் சவாலான ஒரு விஷயம்.
நல்லதொரு முன்னெடுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி கட்டையைக் கொடுத்துக் குழப்புகிறது என வடக்கு கிழக்கிலுள்ள பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், கல்விமான்கள் என பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர். வடக்கில் சீனா கால்பதிக்க தீவிர முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இந்தியாவைக் கழற்றிவிடுவது அல்லது புறந்தள்ளுவது தமிழ் மக்களுக்கு பாதகமாகவே அமையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் நலன்களை முன்னெடுப்பது, நீடித்திருக்க கூடிய அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளுவது ஆகியவற்றில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது. தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் 13 ஆவது திருத்தம் மற்றும் இந்திய அனுசரணை பற்றிப் பேசும் போது, கூட்டமைப்பு தனி ஆவர்த்தனம் வாசிப்பது இந்தியாவை எரிச்சலடையச் செய்துள்ளது. புதுடில்லி இது குறித்து தீவிரமாகச் சிந்தித்து வருகிறது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் பேசும் கட்சிகள் ஒரே தளத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே இந்தியாவில் நிலைப்பாடாகவும் இருந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் `இந்தியா வேண்டாம்` என்கிற நிலையிலிருந்து அதை வெளிப்படுத்துவதை தாங்கள் அவதானித்துள்ளோம் என்பதற்கான சமிஞ்கைகள் இந்தியத் தரப்பிலிருந்து வெளியாகின்றன. கூட்டமைப்பு இந்தியா சென்று பிரதமர் மோடியைச் சந்திப்பதும்கேள்விக்குறியே. இலங்கை தொடர்பில் அதீத கரிசனை காட்டிய நோர்வேயின் சிறப்பு தூதராக இருந்த எரிக் சொல்ஹைம் ஒரு முறையல்ல பல முறை எனக்களித்த பேட்டியில் இந்தியா இல்லாமல் இலங்கையில் சமாதானமும் இல்லை, தீர்வும் இல்லை என்று கூறியதை நினைவுகூர்கிறேன்.
மேலும் ஒரு விஷயத்தை அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இலங்கையில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையும் மலையகம் மற்றும் கொழும்பிலுள்ள தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையும் தோரயமாக ஒரே அளவில் உள்ளது காணப்படுகிறது. வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும் யாவரும் அறிந்ததே. இதையும் இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது. மலையக மக்களின் நலன்களை முன்னெடுப்பதில் தமக்குத் தார்மீகக் கடமையுள்ளது என்பதையும் இந்தியா உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது.
நல்லதோர் முன்னெடுப்பை கூட்டமைப்பில் உள்ள சில குழப்பியுள்ளனர் என்பது தமிழ் பேசும் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை பலருடன் உரையாடும் போது என்னால் அறிய முடிகிறது.
அதேபோன்று கூட்டமைப்பு மந்தையிலிருந்து விலகிய ஆடு போலப் பயணிக்கிறது, இலக்கோ இலட்சியமோ இல்லாமல் பயணிக்கிறது, சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்கிறது என்று பலர் ஆதங்கப்படுவது போல் நானும் கவலைப்படுகிறேன்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு- நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே