மற்றொரு பெரும் தொற்று ஆண்டு கடந்து போகிறது.உலகில் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைத் தீவும் வைரஸை எதிர்கொள்கிறது. எனினும் அண்மையில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் ருவீட் பண்ணியது போல இலங்கைத்தீவு அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் வேகமாக தடுப்பூசிகளை போட்டு முன்னணியில் நிற்கிறது. இது விடயத்தில் மட்டும்தான் ராஜபக்சவின் ராணுவ மயமாக்கல் வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற எல்லா விடயங்களிலும் இந்த அரசாங்கம் தோற்றுக் கொண்டிருக்கிறது.
வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு ஒரு கெட்ட ஆண்டு மட்டுமல்ல தோல்வியை ஒப்புக் கொண்டு நிலைப்பாட்டை மாற்ற வேண்டி வந்த ஒரு ஆண்டுதான். குறிப்பாக டெல்டா திரிபு வைரஸ் நாட்டை உலுப்பிய பொழுது அரசாங்கம் அதன் நிலைப்பாடுகளை மாற்ற வேண்டி வந்தது. வெளியுலகத்துக்கு ஒரு மாற்றம் நடக்கிறது என்று காட்டும் விதத்தில் அரசாங்கம் பசில் ராஜபக்சவை முன்னிறுத்தி மாற்றங்களை காட்டியது. இந்த மாற்றங்களின் வழியாக அரசாங்கம் அதன் வெளியுறவு அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இறுக்கத்தை தளர்த்தியது. எனினும் கொள்கை என்று பார்த்தால் அது அரசாங்கத்தை பொறுத்தவரை பின்னடைவுதான்.
ஏனென்றால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சிங்கள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் யாவும் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் எதிரானவை. ஆனால் covid-19 இன் விளைவுகள் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தன. அதன் விளைவாக தன் நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் கீழே இறங்க வேண்டி வந்தது. எந்த அமெரிக்காவின் மில்லீனியம் சலேன்ச் உடன்படிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்ததோ, எந்த அமெரிக்காவின் சோபா உடன்படிக்கை, குறுக்குச் சேவை உடன்படிக்கை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்ததோ, எந்த அமெரிக்கா ராணுவ தளபதிக்கு பயணத் தடை விதித்ததோ, அதே அமெரிக்காவின் இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்து அதன் மூலம் அரசாங்கம் தன் முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து தளர்வுப் போக்கை காட்டியது. அதைத்தொடர்ந்து ஜி.எல்.பீரிஸ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். மகிந்த சமரசிங்க அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டார். ஐநாக் கூட்டத்தொடரில் அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளூர் வடிவிலான ஒரு பொறிமுறைக்கு தயார் என்று அறிவித்தது.
இவ்வாறாக மேற்கு நாடுகளுடனும் ஐநாவுடனும், இந்தியாவுடனும் ஒருவித சுதாகரிப்பைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இப்படிப் பார்த்தால் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தன் வெளியுறவு நிலைப்பாடுகளில் தளர்வைக் காட்டிய ஒரு ஆண்டு இதுவெனலாம். எனினும் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளிலிருந்து நாட்டை மீட்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகளில் ஒன்றாக இந்த ஆண்டு கருதப்படும். இலங்கை தீவு முன்னெப்பொழுதும் சந்தித்திராத வித்தியாசமான பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்த ஓராண்டு இது. சாதாரண சனங்களை பொறுத்தவரை அரசாங்கம் ஏறக்குறைய தோல்வியடைந்துவிட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதன் மினுமினுப்பை இழந்த ஓர் ஆண்டு. இது அரசாங்கத்தின் நோக்கு நிலையிலிருந்து.
அதேசமயம் தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் இந்த ஆண்டு முன்னைய ஆண்டுகளைப் போன்று திருப்திகரமான வெற்றிகள் எதையும் பெறாத ஒரு ஆண்டுதான். எனினும் இந்த ஆண்டில் மூன்றுமுக்கிய விடயங்கள் கவனிப்புக்குரியவை.
முதலாவது கடந்த மார்ச் மாதம் ஐநா கூட்டத்தொடரையொட்டி மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொதுக் கடிதத்தை அனுப்பின. அது ஒரு முக்கிய அடைவு. 2009க்கு பின் தமிழ் கட்சிகள் அவ்வாறு ஐக்கியப்பட்டு ஐநாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது என்பது திருப்பகரமானது. அக்கடிதத்தில் மூன்று கட்சிகளும் ஜெனிவாவை தாண்டிப் போக வேண்டிய இலக்குகள் குறித்து ஒற்றுமைபட்டிருந்தன. அதுவும் ஓர் அடைவு.
அதன்பின் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐநா கூட்டத் தொடரையொட்டி ஐந்து கட்சிகள் ஒற்றுமைப்பட்டன. அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியும் இணையவில்லை. ஐநா வை நோக்கி ஒரு பொதுக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்ற மற்றொரு எத்தனம் இது. இந்த ஒருங்கிணைப்பு முயற்சியை டெலோ இயக்கம் முன்னெடுத்தது.
மூன்றாவது ஒருங்கிணைப்பு முயற்சியும் டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவை நோக்கி பெரும்பாலான தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டாக ஒரு கோரிக்கையை முன்வைக்கும் முயற்சியிது. அக்கோரிக்கை தொடர்பான வாதப் பிரதிவாதங்களை தனியாக எழுத வேண்டும். இந்த நடவடிக்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது.எனினும் ஒப்பீட்டளவில் அதிகளவு கட்சிகள் அதில் ஒன்றிணைந்துள்ளன.
இந்தியாவை நோக்கி அல்லது அமெரிக்காவை நோக்கி அல்லது ஐநாவை நோக்கி கோரிக்கைகளை முன்வைப்பது என்பது தனிய வேண்டுகோள்கள் என்பதற்கும் அப்பால் அவற்றின் ஆழமான பொருளில் ராஜதந்திர நகர்வுகளே. வெளியுறவு நகர்வுகளே. இந்த அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் இந்த ஆண்டு மூன்று வெளியுறவு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மூன்று நகர்வுககளிலும் காணப்படும் பிரதானமான பலம் தமிழ் கட்சிகளை ஆகக் கூடிய பட்சம் ஒருங்கிணைந்தமைதான். இவற்றில் உள்ள அடிப்படை பலவீனம் என்னவென்றால் இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் கட்சி நலன்களை முழுமையாக கடக்கவில்லை என்பதுதான்.
முதலாவது முயற்சியில் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் இரு கடிதங்கள் அனுப்பப்பட இருந்தன.ஆனால் அது நடக்கவில்லை.அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட கட்சிகளில் ஒன்று தனியோட்டம் ஒடியமைதான். சிவில் சமூகங்களின் தலையீட்டால் அப்படி ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தில் கேட்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் அடுத்தடுத்த கட்ட கட்டமைப்பு சார் வளர்ச்சிகளுக்கு போவதற்கு சிவில் சமூகத்திடமும் பலம் இருக்கவில்லை. கட்சிகளும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு கூட்டு கோரிக்கை அனுப்பப்பட்ட பின்னர்தான் கட்சிகளுக்கு இடையேயான முரண்பாடுகள் அதிகரித்த அளவிலும் அசிங்கமான விதங்களிலும் வெளிப்பட்டன.
அதுமட்டுமல்ல ஜெனிவாவை கடந்து போக வேண்டும் என்று கூறும் கட்சிகள் எவையும் அதற்குரிய கட்டமைப்பு சார் தயாரிப்புகளோடு இல்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த 12 ஆண்டுகளில் அவ்வாறான கட்டமைப்புக்கள் எவையும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
இப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தில்தான் அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் மாதம் வந்தது. அதில் கட்சிகள் வேறு ஓர் ஒருங்கிணைப்புக்கு போயின. அம்முயற்சியை டெலோ இயக்கம் முன்னெடுத்தது. அங்கேயும் ஐநா வுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அங்கேயும் கடிதங்களுக்கு முன்னும் பின்னும் சர்ச்சைகளும் சண்டைகளும் இடம்பெற்றன.
அடுத்த கட்டமாக இப்போது இந்தியாவுக்கு கூட்டாக ஒரு கோரிக்கையை முன் வைக்க முயற்சிக்கப்படுகிறது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையவில்லை.தொடக்கத்தில் இணையப் பின்னடித்த தமிழரசுக் கட்சி அமெரிக்காவை நோக்கி ஒரு குழுவை அனுப்பியது.எனினும் அண்மையில் அக்கட்சி டெலோவின் முன்னெடுப்புகளில் இணைந்து கூட்டுக் கோரிக்கையை மாற்றியமைத்தது.
எனவே தொகுத்துப் பார்த்தால் இந்த ஆண்டு தமிழ்கட்சிகள் பிராந்திய பேரரசை நோக்கியும், ஐநாவை நோக்கியும், உலக சமூகத்தை நோக்கியும் கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்ற முனைப்போடு ஏதோ ஒரு விதத்தில் ஐக்கியப்பட்டு, ஏதோ ஒரு கோரிக்கையை முன்வைத்து உழைத்த ஆண்டு எனலாம். ஆனால் இக்கோரிக்கைகளுக்கிடையே தொடர்ச்சி இல்லை, மட்டுமல்ல இக்கோரிக்கைகளுக்கிடையே முரண்பாடுகளும் உண்டு. அதைவிட முக்கியமாக இக்கோரிக்கைகளை செய்முறைக்கு கொண்டுபோக தேவையான வெளியுறவு கட்டமைப்புகள் கட்சிகளிடம் உண்டா?
வெளியுறவு அணுகுமுறை எனப்படுவது அரசியல் விமர்சகர்களின் விருப்பம் மட்டுமல்ல.கட்சிகளின் தனி ஓட்டம் அல்ல. அல்லது கட்சிகளுக்கிடையே உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு விடயப் பரப்பும் அல்ல. வெளிவிவகாரம் எனப்படுவது அரசற்ற ஒரு மக்கள் கூட்டத்தைப் பொறுத்தவரை தேச நிர்மாணத்தின் இன்றியமையாத ஒரு பகுதி. அது தூய இலட்சியவாதம் அல்ல. கற்பனாவாதம் அல்ல. அது யதார்த்தமாயுள்ள சாத்தியக்கூறுகளை கையாளும் ஒரு கலை. வாய்ப்புக்களை கையாளும் ஒரு கலை. வாய்ப்புகளைக் கெட்டித்தனமாக கையாள்வதன்மூலம் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை கனிய வைக்கும் ஒரு கலை. அதற்கு பொருத்தமான ஒரு பொதுக் கட்டமைப்பும் ,பொருத்தமான வெளியுறவுக் தரிசனமும் தேவை.
எனவே தொகுத்துப் பார்த்தால் கடந்து செல்லும் ஆண்டில் தமிழ் கட்சிகள் மூன்று ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. இம்மூன்று ஒருங்கிணைப்பு முயற்சிகளின் விளைவாக இதுவரை இரண்டு கூட்டுக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முயற்சி இன்னமும் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு மூன்று வெவ்வேறு ஒருங்கிணைப்பு முயற்சிகளினூடாக மூன்று வெவ்வேறு வெளியுறவு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு ஒரு முக்கியமான தொடக்க ஆண்டு. இவற்றுடன் சுமந்திரன் குழுவினரின் அமெரிக்கப் பயணத்தையும் சேர்க்கலாம். இந்நான்கு வெளியுறவு நகர்வுகளும் உரிய துறைசார் நிபுணத்துவத்துடன் விசுவாசமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்க்கப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் அடுத்த ஆண்டிலாவது ஒரு பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை வரையவேண்டும். ஒரு பொருத்தமான வெளியுறவு கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டும்.