சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
ஒரு செய்தியாளரின் வாழ்வில் சில தருணங்கள், பேட்டிகள், நிகழ்வுகள், புகைப்படங்கள், நேர்முக வர்ணனை, குண்டு வெடிப்புகளை அடுத்து எழும் புகை மண்டலங்கள், அற்புதமான மற்றும் தனித்துவமான செய்தி என்று அவர் கருதிச் சேகரிக்கும் தகவலும் செய்தியும் ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சியால் புறந்தள்ளப்படுவது போன்றவை மறக்க முடியாதவை. அவை மகிழ்ச்சி மற்றும் வேதனைகள் நிறைந்தவை.
செய்தியாளரும் செய்தியும் வெவ்வேறானவை என்பது ஊடகத்துறையில் பாலபாடம். ஆனால் சில நிகழ்வுகள் செய்தியாளர் என்பதற்கு அப்பாற்பட்டு தனிமனிதனாய் அந்தச் செய்தியாளரை நெகிழச் செய்யும். அதை வார்த்தைகளால் கூற முடியாது. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் அனைவரும் வட கொரியாவின் அரச தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் போன்று `ஓவராக அழுவதும்-மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும்` போன்றவர்கள் அல்ல. செய்தியாளர்களும் உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப் பிறவிகள் தான். மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் சில விஷயங்கள் ஒரு செய்தியாளருக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்தை உணர்த்தக் கூடும்.
அப்படியான மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்தை ஏற்படுத்திய ஒரு தருணம் தான் பேராயர் டூட்டுவை நான் பேட்டி கண்டது. ஒவ்வொரு கதைக்கும் பின்னும் ஒரு கதை உண்டு என்று ஊடகத்துறையில் கூறப்படுவதுண்டு. பேராயர் டூட்டுவுடனான பேட்டி எப்படிச் சாத்தியமாயிற்று என்பதே ஒரு தனிக்கதை.
29 நவம்பர் 2009- ஞாயிற்றுக்கிழமை. நான் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்த காலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை எனக்கு விடுப்பு கொடுக்கப்படவில்லை. வெள்ளி, சனி ஆகிய வாராந்திர விடுப்பிற்குப் பிறகு எப்போதும் ஞாயிற்றுக்கிழமை பணி நாள். அடாவடித் தலைமையின் அராஜகமான செயற்பாடுகளில் அதுவும் ஒன்று. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அரச விடுமுறைகள், தமது பிள்ளைகளின் பாடசாலை விடுமுறைக்கு ஏற்ற வகையில் வருடாந்திர விடுப்பு, சொந்த காரியத்திற்காக இந்தியா செல்லும் போது, அதைச் சென்னை மற்றும் டில்லியில் இருந்த செய்தியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் என்று கூறி பிபிசி செலவில் ஊருக்குச் சென்று வந்தது போன்ற பல அராஜகங்களில் ஒன்றுதான் இந்த ஞாயிறு விடுப்பு என்பதும். அது தனிக்கதை.
அன்று காலை அலுவலகம் சென்ற போது லண்டனைத் தலைமையகமாக் கொண்டு இயங்கும் ` தி எல்டர்ஸ்` என்கிற அமைப்பு இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றி வெளியிடவுள்ளது என்கிற ஒரு செய்தி கிடைத்தது. அந்த அறிக்கை பேராயர் டூட்டு அவர்களால் தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியாகும் என்றும் தகவல் கசிந்தது. உடனடியாக எனக்குள் இருந்த ஊடக ஆர்வம் மேலோங்கியது. அறிக்கை வரும் முன்னரே நாம் அவரிடமே பேசினால் சிறப்பாக இருக்குமே என்று ஒரு எண்ணம்! ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு எப்படிப் பேசுவது, பேட்டி எடுப்பது, இதிலேயே கவனம் செலுத்தி நேரத்தை செலவிட்டு பிறகு அது சாத்தியப்படவில்லை என்றால் என்னவாகும் போன்ற பல கேள்விகள். இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.
சரி, அவரை எப்படித் தொடர்பு கொள்வது. உடனடியாக அடுத்த அறையிலிருந்த ஆப்பிரிக்க மொழி சேவைகளில் இருந்த நண்பர்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவ முடியுமா என்று கேட்டேன். முயல்கிறோம், முடிந்தால் தொடர்பு எண் எடுத்துத் தருகிறோம், ஆனால் அவரது தகுதியை வைத்து பார்க்கும் போது அவர் உனக்கு (ஆப்பிரிக்கர் அல்லாதவருக்கு) பேட்டியளிப்பாரா அதுவும் தொலைபேசி வழியே என்று ஒரு வினாவை எழுப்பினார்கள். நீங்கள் தொடர்புக்கான எண்ணை தாருங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி உடனடியாக கலையகம் சென்று எண்ணை சுழற்றினால் முதல் ஏமாற்றம்.” இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை, தயவு செய்து எண்ணை சரிபார்க்கவும்” என்ற பதிலே கிடைத்தது.
உடனடியாக அடுத்த செயலில் இறங்கி ஜொஹனஸ்பர்க்கிலுள்ள பேராயர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது, சிறிது நம்பிக்கை ஒளி பிறந்தது. அவர்கள் வேறொரு எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு கூறினர், அங்கிருந்து வேறொரு எண் பிறகு இதர வேலைகளை பார்ப்போம் என்ற முடிவுக்கு வரும் தருவாயில் வேறொரு எண் கிடைத்தது. அந்த எண்ணில்- “அவரது கைப்பேசி எண் இல்லை, வீட்டு எண் வேண்டுமானால் தருகிறோம் முயன்று பாருங்கள்” என்ற பதில் கிடைத்தது. எண்ணை சுழற்றினேன். அடித்தது அதிர்ஷ்டம். திருமதி டூட்டு அழைப்பை எடுத்தார். அவரிடம் விநயமாக எனது கோரிக்கையை வைத்தேன்.
“மகனே…..பேராயர் தேவாலயம் சென்றுள்ளார்……இன்னும் ஒரு மணி நேரத்தில் மதிய உணவிற்காக வீட்டிற்கு வருவார்…..அப்போது தொடர்பு கொள்ளுங்கள்…..பிறகு அது உங்களுக்கும் அவருக்குமான விடயம்…..கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்”
அந்த ஒரு மணி நேரம்- பிரசவ வேதனை. `அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை` ஆகிவிட்டால் என்ன செய்வது? இந்த சிந்தனைகளுக்கு இடையே அந்த பேட்டி சித்தியாகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இருந்த பல நண்பர்கள் அடிக்கடி `துக்கம் விசாரித்தபடி` இருந்தனர். இதில் மேலும் ஒரு சிக்கல் இருந்தது. அவரது பேட்டி ஆங்கிலத்தில் இருக்கும், அதைத் தமிழோசை வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்ப மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும், அதற்கும் நேரம் வேண்டுமே. அடுத்த மேசையில் அமர்ந்திருந்த பிபிசியின் சிங்கள சேவையான `சந்தேஷ்யவில்` இருந்த நண்பர்கள், “ சிவா….பேட்டி முடிந்தவுடன், எமக்கும் அதலிருந்து சில பகுதிகளை வெட்டித் தர முடியுமா?” இதேவேளை லண்டன் நேரம் மாலை 5.30 மணிக்கு பிபிசியின் உலகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி அழைப்பு.
ஒரு வழியாக ஒருமணி நேரத்திற்குப் பிறகு ஆண்டவனை பிரார்த்தித்துக் கொண்டு பேராயருக்கு அழைப்பெடுத்தேன். திருமதி டூட்டு எடுத்து ”காத்திருக்கவும்-அழைக்கிறேன்” என்றார். பேராயர் வந்தார், வணக்கம் கூறி வேண்டுகோளை முன்வைத்தேன். தேவாலயத்திலிருந்து மிகவும் களைப்பாக வந்துள்ளதாகக் கூறினார்.
“ஐயா, 2-3 நிமிடங்கள் நீங்கள் நேரம் அளித்தால் மிகவும் மகிழ்ச்சியளிக்கும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உங்கள் செய்தி ஆறுதலை அளிக்கும் என்று சற்று அழுத்தமாக வேண்டுகோளை வைத்தேன்.
“சரி, நான் வயதானவர், எனவே உங்கள் வேண்டுகோள்படி 2-3 நிமிடங்கள் பேசலாம்” என்றார்.
பேட்டி ஆரம்பித்தது……..நீண்டுகொண்டே சென்றது…….13 நிமிடங்களையும் தாண்டியது………
“நான் இன்னும் பகல் உணவு சாப்பிடவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்”
“மன்னிக்க வேண்டும் ஆயர் அவர்களே….இன்னும் ஒரேயொரு கேள்வி….உங்கள் ஆசியுடன் விடைபெறுவேன் என்று கூறி” அந்த கேள்வியைக் கேட்டேன். பொறுமையாக பதில் கூறியவர், “இந்த பேட்டியின் மூலம் தமிழர்களுக்கு நல்லது நடந்தால் நான் மகிழ்வேன்” என்று கூறியோடு, “நீங்கள் ஒரு மிகச்சிறந்த செய்தியாளர், 2-3 நிமிடங்கள் என்று கூறி 15 நிமிடங்கள் வரை உரையாடினீர்கள். மகிழ்ச்சி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று அவர் பகல் உணவிற்குச் செல்ல நான் எனது மேசைக்கு ஓடி வந்தேன். பிறகு பேட்டியை விட மிகப் பெரிய வேலையான `வெட்டி ஒட்டுவது` ( எடிட்டிங்) தொடங்கியது. அவர் கூறியதிலிருந்த முக்கிய விஷயங்களை துண்டு துண்டாக வெட்டி மொழிபெயர்ப்பைச் செய்து முடிந்தேன். மூச்சு வந்தது. அப்படியே சிங்கள சேவைக்கும் அதே பேட்டியின் துண்டுகளை அளிக்க அவர்களும் அதை மொழிபெயர்த்து எங்களை போலவே தலைப்புச் செய்தியாக்கினர்.
அவர் என்னுடன் உரையாடியதை ஒளிபரப்பி பிபிசியின் உலகத் தொலைக்காட்சி ஒளிபரப்பு என்னைப் பேட்டி கண்டது. அவர் கூறிய கருத்துக்கள், அது தொடர்பில் எனது எண்ணம், இலங்கை அரசு எப்படி இதற்கு பதிலளிக்கும் போன்றவை விவாதத்தில் இடம்பெற்றன.
அந்த பேட்டியில் அவர் கூறிய முக்கியமான விஷயம் இதுதான்.
“நம்பிக்கை இல்லையென்றால் நீடித்திருக்கும் சமாதானம் சாத்தியம் இல்லை. இராணுவ வெற்றி ஒன்றைப் பெற்றுள்ள இலங்கை அரசு, அதன் மூலம் பெற்ற ஆதாயங்களை விரயமாக்க கூடாது. தமிழ் மற்றும் இதர அனைத்து சிறுபான்மையினமக்களுக்குக் கடமையாற்ற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது”
“இலங்கைக்கு தற்போது தேவையான ஒன்று, தொலை நோக்குப் பார்வை கொண்ட உறுதியான தலைமையே. அந்தத் தலைமை கடந்த காலங்களில் இருந்த பிரிவினைகள் மற்றும் வேற்றுமைகளைக் களைந்து உண்மையான இணக்கப்பாடு, சமாதானம், கௌரவமான வாழ்க்கை ஆகியவை அனைத்து இலங்கையர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்”
”நீங்கள் நேரடியாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன?”
”ஒரு இனத்தை மற்றொரு இனம் நசுக்கி ஒடுக்குவதை இறைவன் பொறுக்க மாட்டார். அப்படியான நடவடிக்கை மனித குலத்திற்கு எதிரான குற்றமே” என்று கூறிய பேராயர் டூட்டுவில் குரலில் இருந்த ஆழமான வேதனையை என்னால் உணர முடிந்தது.
நிறவெறிக் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக ஈடுபட்டதற்காக 1984 ஆம் ஆண்டு அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக் கொள்கை கொண்ட ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அமைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிதல் மற்றும் இணக்கப்பாட்டைக் காண்பது குறித்த குழுவுக்குத் தலைவராகவும் அவர் இருந்தார்.
”போரில் பெற்ற வெற்றி கொண்டாடுவதற்கல்ல, வெற்றி பெற்றவர்கள் பரந்த மனதுடன் நடந்துகொள்ள வேண்டும். தோல்வியடைந்தவர்களைச் சிறுமைப்படுத்தாமல், அவர்களது நியாயமான அபிலாஷைகளைக் கண்டறிந்து அதை உணர்ந்து அதை நிறைவேற்ற வேண்டும். அதில் தான் அவர்கள் பெற்ற வெற்றி தங்கியுள்ளது”
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அவருக்குத் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமது நெருங்கிய உறவு ஒன்றை இழந்த சோகம் அவர்களிடம் காணப்படுகிறது. இதுவே அவர் தமிழர்கள் மீது எந்தளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாகும்.
பேராயர் டெஸ்மண்ட் டூட்டுவின் வார்த்தைகளுக்கு இனியாவது இலங்கை அரசு செவிமடுத்தால் அதுவே அவருக்கான மிகப்பெரும் அஞ்சலியாக இருக்கும்.