புத்தாண்டுத் திருமகளை வரவேற்போம்
விண்ணுலகத் தேவதைகள்
வெண்துகில்கள் பொடியாகி
மண்ணில் விழுந்தனவோ!
மண் சுமந்த பெருமானின்
வெண்சடையும் இது தானோ!
என வியப்புடனே
மாசகற்றி தூசகற்றி
மண்மகளை தூய்மை செய்யும்
பனிமகளை வரவேற்று
வாரத்தில் வெள்ளிதோறும்
விருப்புடன் விரியும் ‘உதயன்’
வெள்ளிவிழா ஆண்டு (2021) தனைக்
கொண்டாடி மகிழ்வுற்று
நல்லோர்கள் வாழ்த்தொலிக்க
நன்றியுடன் விடைபகிர்ந்து
விழிகள் குளமாக
கையசைத்துக் கண்ணசைத்துக்
காதலியை பிரிவது போல்
கனத்த இதயமுடன் போமகளே – என
வழிசொல்லி அனுப்பி நிற்க
‘வந்தாளே மகராசி’ 2022!
வருகின்ற புத்தாண்டு திருமகளை
இனித்தமுடன் வரவேற்போம்!
புதியவளாய் பூமகளாய்
பூமணக்கும் புத்தெழிலாள்
நாமனக்கும் தமிழெடுத்து
நாடும் ஏடும் வரவேற்க
காமணக்கும் பூங்காவில்
களித்திருக்கும் காதலர்போல்
பாமணக்க பாட்டெழுதி
நீடுதுயில் நீக்கவந்த
பாடுநிலா பாரதியையும்
எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
சங்கொலித்த தாசனையும்
வணங்கியே தான் பாவையுனை
வரவேற்போம் !
‘அது ஒரு குரோனா காலம்’, என
கதை சொல்லும் பாட்டிகளின்,
துன்பியல் நினைவுகளைத் துயரங்களை
சுட்டுப் பொசுக்கிவிட்டு
நாளெல்லாம் நோயின்றி
வாழ்விலே மகிழ்ச்சி பொங்கும்
இருபது இருபத்திரண்டே
உருமாறும் ஓமிக்கிரானை ஒழித்தழிக்க வாராயே!
காமத்துப் பால் பருகக்
கல்லூரி பெண்களுக்கு
வலைவிரிக்கும் கபோதிகளுக்கும்
காடையர்க்கும் ‘அந்நியன்’
வந்திங்கு கண்டிக்க ஆசிகூறு !
பூமிதான் சாமி; சாமிதான் பூமி
பூமித்தாய் மேனியெங்கும்
பசுமையை வளர்த்தெடுப்போம் !
தமிழீழ வட்டுக் கிராம
அரசடி வீதியெங்கும்
தலைவிரித்தாடும் சாதிக் கொடுமைகளைத்
தீயிட்டுகக் கொளுத்திடுவோம்!
உலகின் அழுகையொலி
உல்லாசச் சிரிப்பலையாய்
பாரெங்கும் ஒலிக்கட்டும்
வறுமை – பிணி – சாக்காடு
வராமல் தடுத்திடுவோம்
ஊழலற்ற தலைவர்கள்
நல்லாட்சி மலரட்டும் !
ஏர்பிடித்து உழுவோர்கள்
நெற்குவியல்; காய்கனிகள்
பசிபோக்கி குவியட்டும்!,
உண்மையொளி வாக்கினிலே ஓளிரட்டும்,
உலகத்து மாந்தரெல்லாம்
இதழ் சிந்தும் புன்னகையில்
கருணை – அன்பு – பாசமுடன்
கறுப்பென்றும் வெள்ளையென்றும்
நிறபேதம் இனபேதமில்லாது
ஆணவக் கொலைகளை
அரங்கேற்றம் செய்யாது;
ஒன்றே குலமென்றும்
உயர் தெய்வம் ஒன்றென்றும்
மனிதகுலம் மான்புறவே
மனித நேயம் பொங்கட்டும் !
– வீணைமைந்தன்