(4-1-2022)
பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு பின்னர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தை அவதானித்த அவருடைய மருமகன் அதனை தடுத்து நிறுத்தச் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருந்த நிலையில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் சடலம் கை அளிக்கப்பட்டிருந்தது.
சடலத்தை சுமந்து வந்த உறவினர்கள் இன்று காலை பரந்தன் சந்தியில் சடலத்தை வைத்து ஏ – 09 நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பரந்தன் சந்திப் பகுதியில் பெரும் குழப்ப நிலை நீடித்தது.
இதனால் ஏ – 09 நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேவேளை மக்களுடன் சமரசத்தில் ஈடுபடுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று மக்களிடம் கலந்துரையாடிய போதிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வரும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், குடும்பத்தினரிடமும் கலந்துரையாடி இருந்தனர்.
குறித்த குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பரந்தன் சந்தியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதேவேளை குறித்த விடயங்களை உள்ளடக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஒப்பத்துடன் கடிதம் ஒன்றும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த விடயங்களை உடனடியாக நடை முறைப்படுத்துவதாக தெரிவித்து பொலிஸ் அத்தியட்சகர் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்று உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.