அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாண நகரமான மட்டக்களப்பில் வீட்டு எசமானி ஒருவரை கூட்டுப் படுகொலை செய்து அவர் வீட்டில இருந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த தந்தை மற்றும் அவரது மகள் ஆகியோர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பார் வீதியில் பெண் ஓருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட வேலைக்காரப் பெண்ணையும் அவரது தந்தையையும் எதிர்வரும் 18 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் இன்று திங்கட்கிழமை (04) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு பார்வீதியிலுள்ள 48 வயதுடைய செல்வராசா தயாவதி என்ற பெண்ணை, அவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரப் பெண் ஒருவர் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு, அவரிடிமிருந்த 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற குறித்த வேலைக்காரப் பெண்ணையும், அவரது தந்தையையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, குறித்த இருவரையும் கைது செய்த பொலிசார் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை இன்று ஜனவரி 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டர்.
குறித்த வழக்கு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கொரோனா காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் அழைத்து வரமுடியாதையிட்டு காணொளி மூலம் தொடர்ந்து மேலும், 14 நாட்களுக்கு 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், எதிர்வரும், 11 ஆம் திகதி மரண விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.