தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பள்ளிகளுக்கு நேரடி வகுப்புக்கள் தடை செய்யப்பட்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.
திரையரங்குகள், ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணாசாலையில் காரில் சென்று கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த சிலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பார்த்து வாகனத்தை நிறுத்தி அவர்கள் ஒவ்வொருவருக்கும் முகக்கவசத்தை வழங்கினார். அதில் ஒருவருக்கு அவரே முகக்கவசத்தை மாட்டிவிட்டார். இந்த சம்பவத்தால் 5 நிமிட நேரம் அண்ணாசாலை பரபரப்புக்குள்ளானது.