பார்த்தீபன்
வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்பார்க்கும் இலங்கையர்கள் ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சிலிருந்து “பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்” தேவை என்ற அறிவிப்பு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய இச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டவர்கள் ஸ்ரீலங்காவில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே ஜனவரி 01 முதல் இச் சட்டம் நடைமுறைக்கு வருவதாக ஸ்ரீலங்காவின் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் ஸ்ரீலங்கா அதளபாளத்தை நோக்கி தள்ளப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பசியினால் மடிய வேண்டிய நிலை ஏற்படுமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்படியொரு நெருக்கடி நிலையிலும் ஏன் “பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்” என்ற இராணுவ நடவடிக்கைக்கான அறிவிப்பு?
ஈழத்தில் இனவிடுதலைக்காக போராடிய மக்களை மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி ஒடுக்கியது இலங்கை அரசு. மக்களின் சுதந்திரத்திற்காகவும் தனித் தேசத்திற்காகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மௌனிக்கச் செய்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்தியது சிங்கள தேசம். அதற்குப் பிறகு முழுமையான சிங்கள இராணுவ அடக்குமுறை ஆட்சியை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா அரசு, ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகள் குறித்தோ, தம்மீதான ஒடுக்குமுறைகளைக் குறித்தோ குரல் எழுப்ப முடியாத சர்வாதிகார இனவொடுக்குமுறை ஆட்சியில் வடக்கு கிழக்கு தமிழர் தேசத்தை அமுங்க வைத்திருக்கிறது.
எனினும் மிகத் தெளிவாக வெளித்தெரியும் வகையில் ஈழம் எரியும் பிரச்சினைகளை இன்னும் சுமந்தபடியிருக்கிறது. நிலத்திற்கான போராட்டமும், தொன்மங்களை சிதைப்பதற்கு எதிரான போராட்டமும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான போராட்டமும், இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டமும் தமிழ் சனங்களில் நெஞ்சில் தீயாய் எரிகின்றது. சாத்வீக வெகுசனப் போராட்டங்களை பெருமெடுப்பில் மேற்கொள்ள முடியாத நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் ஈழ மண்ணை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தாம் எப்படியான அடக்குமுறையில் வாழ்கிறோம் என்பதைக்கூட சொல்ல முடியாத பேரினவாத அடக்குமுறை நிலவுகிறது.
இந்த நிலையில் ஈழ நிலத்திற்காக குரல் கொடுக்கும் உன்னத பணியை புலம்பெயர் தேசம் மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை தேவை என்ற ஈழ மக்களின் குரலை சர்வதேச அரங்கில் அதிர்வுடன் கொண்டு சேர்க்கும் பணியில் புலம்பெயர் சமூகம் உழைக்கிறது. இனவழிப்புப் போரினால் புலம்பெயர்க்கப்பட்ட இம் மக்களே அதற்கு எதிராக சர்வதேச அரங்கில் குரல் எழுப்ப வேண்டிய தார்மீகப் பணியை ஆற்றுகின்றனர். ஈழத்தில் மக்கள் எத்தகைய அடக்குமுறை சூழலில் வாழ்கிறார்கள் என்றும் உண்மையில் இன்று ஈழ மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுதான் என்ன வென்றும் புலம்பெயர் மக்கள் குரல் கொடுக்கின்றனர். ஈழத்தின் ஆத்மாகவும் மனசாட்சியாகவும் குரலாகவும் புலம்பெயர் தேச மக்களின் முகங்களும் குரல்களும் ஒலிக்கின்றன.
இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தின் குரலை முறியடிக்க ஸ்ரீலங்கா அரசு பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகின்றது. அதற்காக பல்வேறு அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது. சில ஆண்டுகளின் முன்னர் பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் அதிகாரியாக கடமையாற்றும் சிங்கள இராணுவத்தின் பிரிக்கேடியர் பிரியங்க பெர்ணான்டொ “தமிழர்களின் கழுத்தறுப்பேன்“ என்று உடல்மொழியில் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயற்பட்டமை சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் நோக்கையும் போக்கையும் குறித்த செயலின் வாயிலாக பிரியங்க பெர்னாண்டோ வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டில் புலம்பெயர் தமிழர்கள் பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு நாட்டிற்குள் நுழையத் தடைவிதித்திருந்தது. வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கையில் ஈழத் தீவின் சொந்த மக்களுக்கே உள்நுழைவதற்கான தடை அரச சட்டமாக விதிக்கப்பட்ட கொடுமை ஸ்ரீலங்காவில் நடந்தது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் உரிமை மற்றும் அவர்கள்மீதான மீறல்களை சுட்டிக்காட்டி செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீதே இத்தகைய தடையை ஸ்ரீலங்கா அரசு விடுத்திருந்தது.
அத்துடன் புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்களையும் ஈழப் போராட்டச் செயற்பாட்டாளர்களையும் குழப்பும் வகையில் பல்வேறு அரசியல் இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்ற போர்வையில் சிலர் களமிறக்கப்பட்டு தமிழ் தேசத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன. அத்துடன் இத்தகைய நபர்களை வைத்து இனவழிப்புக்கான நீதிக்காக போராடுபவர்களை பின்னால் இழுக்கும் சூழ்ச்சிகளையும் புலம்பெயர் தேசம் கண்டு முறித்து வருகிறது.
ஈழத்தில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டு இருந்த போதும் புலம்பெயர் தேசம் உரத்துக் குரல் கொடுப்பது சிங்கள தேசத்திற்குச் சிக்கலாக இருக்கின்றது. இதனால் புலத்தை அடக்க எல்லை கடந்த இராணுவ நடவடிக்கையை அல்லது எல்லை கடந்த இனவழிப்பை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முனைகின்றது. அத்துடன் ஈழத்தில் இனவிகிதாரத்தை வீழச்சியுறச் செய்வதில் வெற்றி காணப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேச தமிழ் இளைஞர்கள் யுவதிகள் தாயக உறவுகளை திருமணம் செய்யத் தடுப்பதன் வாயிலாக புலம்பெயர் தேசத்திலும் இனவிகிதாசாரத்தை வீழச்சியுறச் செய்யலாம் என ஸ்ரீலங்கா திட்டமிடுகிறது. அதற்காகவே “பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்” எனும் ஒப்பிரேஷன் டயஸ்போரா.
ஈழத்தில் இனவழிப்புப் போரினால் தமிழர்கள் சிதறிப் பரந்துள்ள போதும் இன்றைக்கு புலம்பெயர் தேச மக்கள் இலங்கைத் தீவின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்கை அளிக்கின்றனர். அங்கிருந்து தாயக உறவுகளுக்காக அனுப்பப்படும் நிதி இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனலாம். ஈழத் தமிழர்களின் உரிமையை வழங்கி அவர்களின் தனித்தேசப் போராட்டத்தை அங்கீகரித்திருந்தால் இன்றைக்கு ஸ்ரீலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு தமிழீழ தேசம் அள்ளியள்ளி நிதிக்கொடையை வழங்கியிருக்கும். ஆனால் ஸ்ரீலங்கா அரசோ ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி ஈழ மண்ணில் நிலைத்திருந்த தமிழீழப் பொருளாதார வளத்தையும் பூச்சியத்திற்குச் செல்லும் அளவுக்கு அழித்திருந்தது.
ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலையில் இருந்து மீண்டெழ பொருளாதார ரீதியாக புலம்பெயர் தேச மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கியதுடன் ஈழ இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்துவதில் சர்வதேச அரங்கில் களமாடுகின்ற பணியையும் செய்து வருகின்றனர். இன்றைக்கு புலம்பெயர் நாடுகளில் கணிசமான அளவுக்கு தமிழ் மக்கள் வாழ்ந்து அங்கு அரசியல் மற்றும் நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையில், அவர்களின் எண்ணிக்கையை வீழ்ச்சியடைய வைத்து ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதுவே சிங்கள அரசின் நோக்கமாகும்.