பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்
(மன்னார் நிருபர்)
(04-1-2022)
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் கடந்த 3 நாட்களில் 2 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 36 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு மொத்தமாக 3161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.இவர்களில் 34 கொரோனா தொற்றாளர்கள் மரணித்துள்ளனர்.
இதேவேளை இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு முதல் மூன்று நாட்களில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த நவம்பர்,டிசம்பர் மாத ஆரம்ப பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு கடந்த நவம்பர் மாதத்தின் பின் மொத்தமாக 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
இவர்களில் இருவரை தவிர ஏனையவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட பின்னர் மூன்று மாதங்கள் கடந்தவர்க ளாக காணப்படுகின்றனர்.
தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் 2 வது தடுப்பூசி பெற்று 3 மாதங்கள் கடந்திருந்தால் கட்டாயம் மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு முதலாவது தடுப்பூசியை 20 வயதிற்கு மேற்பட்ட சுமார் 83 சத வீதமானவர்களும்,2 வது தடுப்பூசியை 20 வயதிற்கு மேற்பட்ட சுமார் 75 சத வீதமானவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும் இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை மொத்தமாக 30 சதவீதமானவர்கள் மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளனர்.
-மேலதிக வலுவூட்டல் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சங்கங்கள் போன்றவற்றிற்கு நேரடியாகச் சென்று தடுப்பூசியை வழங்க இருக்கிறோம்.
-இவ்வாறான தடுப்பூசி சேவை தேவையானவர்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையுடன் 0232222916 என்ற தொலைபேசி இலக்கத்துடன் காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
-இவ்வாறான நடவடிக்கைகள் நாளை புதன்கிழமை (5) முசலி பிரதேசச் செயலகத்திலும், எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை 2021 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. 360 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.2017 ஆம் ஆண்டு 543 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட மையினை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்த கட்ட அதிகரிப்பாக காணப்படுகின்றது.
-2022 ஆம் ஆண்டு மூன்று நாட்களில் 18 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பேசாலை பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த நிலையில் காணப்பட்ட போதும் தற்போது குறைவடைந்துள்ளது.
-தற்போது மன்னார் நகர பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று செவ்வாய்க்கிழமை (4) தொடக்கம் வியாழக்கிழமை (6) வரை டெங்கு தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
-இதன் போது பாதுகாப்பு துறையினர்,சுகாதார துறையினர்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் மக்களின் வீடுகளை தரிசிப்பதோடு,டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அடையாளம் காண்டு அழிப்பது அல்லது அகற்ற,சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
-குறிப்பாக நீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் குறித்த டெங்கு நுளம்புகள் வளரும் சாத்தியம் உள்ளதால் பொதுமக்கள் அவற்றை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.தேவையற்ற தொட்டிகளை அகற்ற வேண்டும்-என அவர் மேலும் தெரிவித்தார்.