தமிழ் இந்துவில் தீபச்செல்வன்
ஈழத் தீவு முழுவதும் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் நாற்புறமும் உள்ள சிவாலயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் எனப்படும் இந்தக் கோயில்கள் பல்லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றவை. அவற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முந்தைய தொன்மைக்கும் முந்தையவை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த இரவணன் என்ற தமிழ் மன்னன், சிவபக்தனாக இருந்திருப்பதும் தொன்மையின் ஆதாரமாகும். இப்படிப்பட்ட தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு தாம் எஞ்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையை, ஆட்சியுரிமையைக் கேட்டு மிகப் பெரும் தியாகங்களின் மத்தியில் போராடினார்கள். அந்தப் போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டம் என்று சொல்லி ஒடுக்கியது இலங்கை அரசு.
ஈழ மண்ணின் சொந்த மக்களை கொன்று அவர்களை புதைத்து தாய்நிலத்தை மயானமாக்கி இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசு இப்போது இலங்கைத் தீவைத் துண்டாடி கூபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறது. இலங்கையின் தலைநகரம் கொழும்புவில் உள்ள துறைமுக நகரம் சீனாவுக்கு குத்தகைக்கு என்ற பெயரில் தாரை வார்க்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரில் நுழைகையில் சீனாவின் மாநிலம் ஒன்றுக்குள் நுழையும் உணர்வைத்தான் தருகிறது. ஆம் இலங்கைக்குள் சீனா ஒரு மாநிலத்தை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க சீன மொழியிலான அந்த வர்த்தக நகரம் இலங்கையில் சீனா அகலமாகக் கால் ஊன்றி இருப்பதற்கான அடையாளமாகும்.
இலங்கையுடன் சீனா நெருங்குகிறது என்றும் இலங்கையில் பலமாக சீனா காலூன்ற முயல்கிறது என்றெல்லாம் சொன்ன போது இதெல்லாம் இந்தக் காலத்தில் எப்படிச் சாத்தியமாகும் என்றார்கள். இந்தக் காலத்திலும் காலனிய ஆட்சியை எப்படி கொண்டுவர முடியும் என்றும் கேட்டார்கள். இந்தக் காலத்திலும் ஒரு நாடு இன்னொரு நாட்டில் கால்பதித்து ஆக்கிரமுடியுமா என்றார்கள். ஆனால் சீனா அதைச் செய்திருக்கிறது. அது மாத்திரமல்லாமல் தென்னிலங்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் சீனா தன் வசப்படுத்தியிருப்பதாக தெற்கின் செய்திகள் கூறுகின்றன.
அடுத்த கட்டமாக சீனா வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தைக் குறி வைத்திருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்த சீனத் தூதுவர் குய் சென் ஹாங் அங்கு மூன்றுநாட்கள் தங்கியிருந்துள்ளார். அத்துடன் தமிழர்களின் பண்பாட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று சீனத் தூதுவர் ஆராய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். ஈழப் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற நல்லூர் ஆலயத்திற்குச் சென்று அங்கே ஆலய மரபுக்கு இணங்க மேல்சட்டை கழற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். இது ஈழத் தமிழர்களின் மனங்களை உடுருவும் முயற்சியாகும்.
அத்துடன் இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் ராமர் பாலத்தையும் சீனத் தூதுவர் குய் சென் ஹாங் பார்வையிட்டுள்ளார். அப்போது இலங்கை இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளை நோக்கி, “இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இந்தியா இருக்கிறது?” என்று அவர் கேட்டுள்ளார். இந்தியாவின் தலையைத் தொடும் தூரத்தில் வந்துவிட்டோம் என்ற தொனியில் சீனத் தூதுவர் கைகளை நீட்டி தூரத்தை விசாரித்திருப்பது, இந்தியா மீதான பகிரங்க போர் எச்சரிக்கையாகவே இதனைக் கருத வேண்டும். அத்துடன் அமைதியாக இருக்கும் தென்னிந்திய எல்லைகளில் அமைதியை குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தவே சீனா இந்தியாவின் கொல்லைப்புறம் வழி நுழைய முயற்சிக்கிறது.
இலங்கையில் இந்த நிகழ்வுகள் அரங்கேறிச் சில தினங்களில் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு விஜயம் செய்திருந்தார். ஈழத்தில் இந்து சைவ ஆலயங்களை அழித்தும் ஒடுக்கியும் வரும் நிலையில் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்” என்ற செயலில் ஈடுபடுகிறது இலங்கை. இப்போதும்கூட குருந்தூர் மலை என்ற இந்து சமய தொன்மை இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுகிறது. நீதிமன்றம் தடைவிதித்தும் கட்டுமானம் செய்யப்படுகிறது.முல்லைத்தீவில் இந்து ஆலய வளாகத்தில் சிங்கள பிக்குவின் உடலை எரித்து ஆலய பண்பாட்டு மரபுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.
திருகோணமலையில், இந்துசமய ஆலய உரிமைக்காய் போராடிய தமிழ் சித்தர் அகத்தியசுவாமிகள் மீது சிங்களக் காடையர்கள் வெந்நீர் ஊற்றி தாக்குதல் செய்தனர். இலங்கையில் 350 ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை ஒன்று கூறுகிறது. போரில் தமிழர்களுடன் அவர்கள் தஞ்மடைந்திருந்த ஆலயங்களும் அழிக்கப்பட்டன. இப்போதும் தமிழர்களின் ஆலயக் கடவுளர்களின் கர்ப்பக் கிரகங்களை கிண்டி அங்கே புத்தரை புதைக்க இலங்கை தொல்லியல் திணைக்களம் முற்படுகிறது.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால் அவர்களின் சமயம், பண்பாடு என அனைத்தையும் அழிக்க வேண்டும் என்ற கொள்கையில்தான் இதெல்லாம் நடக்கிறது. ஈழத்தில் இப்படி இந்துமதம் மீது இனப்பபோர் தொடுத்துக் கொண்டு இந்தியாவில் திருப்பதியில் சென்று தலையை முட்டுவது இரட்டைத்தமல்லவா? சீனாவின் வடக்கு விஜயத்தையும் அதன் கால் பதிப்பையும் பாதுகாக்கவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் இராஜதந்திரிகள் கூறுகின்றனர். இந்தியா தனக்குள்ள வரலாற்றுக் கடமையை செய்யத் தவறுகின்றமையினாலேயே இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளவரையில் சீனா இலங்கையில் கால்பதிக்கவில்லை. உண்மையில் விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமில்லாமல் சிங்கள மக்களுக்கும் தென்னிந்திய எல்லைகளுக்கும்கூட காவலாய் இருந்தார்கள். அவர்கள் இருந்திருந்தால் சீனா வடக்கில் வந்து நின்று கொண்டு இந்தியா எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கேட்க முடியுமா? இன்றைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சீனர்கள் இலங்கையில் குடியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிங்களவர்களின் ஆக்கிரமிப்பால் துடித்த ஈழநிலம் இப்போது சீனர்களின் ஆக்கிரமிப்பு இலக்கினாலும் பற்றம் கொள்கிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி 13ஆவது திருத்தச் சட்டத்தை குறைநிலையில் நடைமுறைப்படுத்தியே இப்படிச் சீனா உள்நுழைகிற வழி திறக்கப்பட்டுள்ளது. உண்மையில் 13ஆவது திருத்தம் இலங்கை மாகாணங்களுக்கு போதிய அதிகாரத்தை அளித்திருந்தால் வடக்கு கிழக்கில் சீனா கால்பதிக்க இடம் ஏற்பட்டிருக்காது. எனவே ஈழத்தின் அமைதியும் விடுதலையும் பலமான அரசியல் தீர்வும் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அரணாக இருக்கும்.
தீபச்செல்வன். ஈழக் கவிஞர் மற்றும் எழுத்தாளர்.