சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள், கதைகள் மற்றும் சம்பவங்கள் ஆகியவை பன்னெடுங்காலமாக மக்கள் மனதில் நீடித்து நிற்கின்றன. அப்படியாக படைப்பிலக்கியம் மற்றும் செவிவழிச் செய்திகளாகக் கூறப்படும் போது மிகவும் ருசிகரமாகவும், தனி நபர்கள் மற்றும் சமூகத்தின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில சம்பவங்கள் அல்லது கதைகள் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அவை கூறும் செய்தி என்னவோ மனதில் நிலைத்திருக்கும்.
இராமாணயத்தில் இராமர் சிறு வயதில் அரக்கர்களை வென்றதாகவும் பின்னர் இராவணனுடன் போர் புரிந்து அவரை வென்றதாகவும் கூறப்படுபவை, சீதையை கவர்ந்து செல்ல இராவணன் புஷ்பக விமானத்தில் பறந்து வந்தது, வானரப் படைகளுடன் இராமர் இந்தியா இலங்கை பாலம் அமைத்து போருக்குச் சென்றது ஆகியவை நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அப்படியான விஷயங்கள் எப்படிச் சாத்தியமாயிற்று என்பதை இன்றளவும் சிந்திக்க வைக்கிறது.
உலகின் மிகவும் நீண்ட காவியம் என்று அறியப்படும் மகாபாரதத்தில் முக்கிய கதையோட்டத்துடன் பல கிளைக் கதைகள் மிகவும் ருசிகரமானவை. அந்த காவியத்தில் கூறப்படும் மையநீரோட்டக் கதைகளும் உபகதைகளும் இராமாயணத்தைப் போலவே பல வாழ்க்கைப் பாடங்களைக் கொண்டது. இந்த இரு காவியங்களிலும் பிறன்மனை நோக்கியதும் ஆட்சியில் இருந்தவர்களின் அராஜகமும் பேரழிவை ஏற்படுத்தியது.
அது வெவேறு வடிவங்களில் வந்தது. இரண்டிலும் பிறன்மனை நோக்குதல் மற்றும் அதை கவர்வதற்குச் சூது ஒரு சூழ்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டது. இதைத் திருவள்ளுவர் இரண்டே அடிகளில் மிகவும் அற்புதமாக விளக்கியிருப்பார். அதே போன்று ஒரு அரசன் எப்படிச் செயல்பட வேண்டும் அவனுடைய குணாம்சங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் வள்ளுவர் விளக்கியுள்ளார்.
அரசாட்சி மற்றும் பிறன்மனை நோக்குதல் குறித்து திருவள்ளுவர் கூறியுள்ளவை எக்காலத்திற்கும் பொருந்தும்.
அந்தப் பெருந்தகை பொருட்பால், அரசியல்-இறைமாட்சியின் கீழ் 381 ஆவது குறளாகக் கூறியுள்ளதை இந்தக் கட்டுரையுடன் பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்குமென்று நான் கருதுகிறேன்.
”படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”
பெரியோர்கள் பலர் இந்தக் குறளுக்கு எழுதியுள்ள பொழிப்புரையில், `இந்தக் குறளில் நாட்டை இறையாண்மையுடன் பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட வீரர்களைக் கொண்ட படை, நல்ல குடிமக்கள், காத்திரமான பொருளாதார அடிப்படைகளை ஏற்படுத்தி ( நாட்டில் குறையாத செல்வம், மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது உட்பட) நாட்டிற்குச் சிறப்பு சேர்ப்பது, நாட்டை ஆளும் அரசனை அனைத்து விஷயங்களிலும் வழிநடத்தி அரசன் நேர்மையாக நன்னடத்தையுடன் பேதமின்றி அனைத்து குடிமக்களின் நலனை மையாக வைத்து செயல்பட்டு நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்து, இதர நாடுகள் நாட்டை ஆக்கிரமிக்காமல் செய்வதே சிறந்த அறம் அதற்கான முழுப் பொறுப்பு அரசனையே சாரும் என்று கூறியுள்ளனர்.
மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் (தருமர்) துரியோதனுடன் அறிந்தும் சூதாடச் சென்றது மிகவும் பேசப்பட்டு விவாதிக்கப்படும் ஒரு சம்பவம் அல்லது கதையாகும். ஒரு அரசனுக்குரிய நிலையிலிருந்து அவர் சிந்திக்காமல் சூதாடச் சென்றது, ஒவ்வொன்றாக பணயம் வைத்து இழந்து பின்னர் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் கட்டிய மனைவி திரௌபதியையும் அவர் சூதாட்டத்தில் இழந்து போது, இழந்த மனைவியை சபைக்கு அழைத்து வருமாறு துரியோதனன் கட்டளையிட அவரை அழைத்துச் செல்வதற்கான வந்தவனிடம் திரௌபதி கேட்ட கேள்வி மிகவும் சிந்திக்கத்தக்கது.
”தன்னை இழந்தபின் என்னை இழந்தாரா அல்லது என்னை இழந்தபின் தன்னை இழந்தாரா”
தருமர் தன்னையே இழந்திருந்தால், அவர் எப்படி திரௌபதியை இழக்க முடியும், அதாவது அவர் தன்னை இழந்தபிறகு -அவரின் ஒரு அங்கமான தன்னை- எப்படி தன்னை பணயம் வைக்க முடியும் என்பதே அவரின் கேள்வி. இதில் ஒரு தத்துவம் உள்ளது; அதாவது தனக்கு உரிமையில்லாத ஒருவரை அல்லது ஒரு பொருளை எப்படி ஒருவர் அடமானம் அல்லது பணயம் வைக்க முடியும் என்பதே? இது மிகவும் சரியான மற்றும் பொருத்தமான கேள்வியே.
அன்று திரௌபதி கேட்ட அதே கேள்வியைத்தான் இன்று இலங்கையின் மலையகத்திலுள்ளவர்கள் கேட்கிறார்கள். அதாவது இலங்கை அரசு இரானிடம் வாங்கிய கடனுக்காக மொத்த மலையக சமூகத்தையும் இப்போது இரான் அரசிடம் பணையம் வைத்துள்ளது பெரும் சர்ச்சை மற்றும் மனித உரிமை மீறல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் சிங்களவர், (இலங்கை) தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், வெத்தா என்றழைக்கப்படும் பழங்குடியினர், பர்கர்கள் என்று பல்லின சமூகத்தினர் இருக்கும் போது தொடர்ச்சியாக இலங்கை அரசு வாங்கிய கடன்களுக்கு மலையகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பணையம் வைத்து அவர்களை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கொத்தடிமைகளாக ராஜபக்சக்கள் தலைமையிலான இலங்கை அரசு எப்படி அடமானம் வைக்க முடியும் என்பதே கேள்வி.
இரானிடம் இலங்கை அரசு சுமார் 250 மில்லியன் டொலர் அளவுக்கு கச்சா எண்ணெயைப் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத அரசு இப்போது கடனை அடைக்க மலையக மக்களின் உழைப்பை பணையமாக வைத்துள்ளது.
வாங்கிய கடனுக்காக மாதம் ஒன்றிற்கு ஐந்து மில்லியன் டொலர் அளவுக்கான தேயிலையை இலங்கை இரானுக்கு அனுப்பி கடனை அடைப்பதாக இருநாட்டு அரசுகளும் கடந்த ஆண்டின் இறுதியில் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டன. அவ்வகையில் இரானின் எண்ணெய் கடனைத் தீர்க்க இலங்கைக்கு குறைந்தது 50 மாதங்கள் தேவைப்படும்.
ஒரு அரசு வாங்கிய கடனிற்கு ஒரு சமூகம் மட்டுமே உழைத்து அதை அடைக்க வேண்டும் என்கிற முடிவு ஏற்கெனவே நவகாலனித்துவ அடிமைகளாக இருக்கும் மலையக மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 251 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான கடனுக்கு மலையகப் பகுதியில் அன்றாடம் கூலித் தொழிலாளர்களாக எவ்விடமான அடிப்படை வசதிகளுமின்றி நாட்டிலுள்ள அனைத்து தரப்பினராலும் புறந்தள்ளப்பட்டு, லயம் எனப்படும் ஒரு அறையைக் கொண்ட வீடுகளில் அடிமைகளாகப் பிழைப்பதற்கு வேறு வழியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கும் சுமார் 18 லட்சம் மலையக இந்திய வம்சாவளித் தொழிலார்கள் மட்டும் எப்படிப் பொறுப்பாக முடியும் என்ற கேள்விக்கான அரசின் பதில் என்ன?
திரௌபதி கேட்ட அதி முக்கியமான கேள்வியைப் போன்று, இலங்கை அரசு இரானிடமிருந்து எண்ணெயை கடனாகப் பெற்ற போது அதற்கு ஈடாக தேயிலையை அளித்து கடனைச் செலுத்துவோம் என்று கூறியதா அல்லது 251 மில்லியன் டாலருக்கான பணத்திற்கு அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொறுப்பு என்று ஒப்பந்தம் செய்யப்பட்டதா என ஓராயிரம் வினாக்கள் இதிலுள்ளன.
மலையகத்தில் சந்தா அரசியலை முன்னெடுத்து வரும் அரசியல் கட்சிகளும் இதுவரை இந்த விடயத்தில் மௌனமே காத்துள்ளன.
இலங்கையின் வரலாற்றிலேயே வாங்கிய கடனிற்கு ஈடாக மற்றொரு பொருளைப் பண்டமாற்று முறையில் அளிக்கவுள்ளது. இது பண்டமாற்று முறையின் கீழ் வருகிறது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட அதற்கு ஒரு சாரார் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்பது எவ்வகையிலும் ஏற்க முடியாது.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் கொழும்பு துறைமுக கொள்கலன் விரிவாக்கம் மற்றும் அது தொடர்பிலான வர்த்தகத்தைப் பிரித்தளித்த இலங்கை அரசு, அதில் ஒரு பகுதி அபிவிருத்தி மற்றும் வர்த்தகத்தை இரானிடம் அளித்திருக்கலாமே என்பது போன்ற குரல்கள் எழுந்துள்ளன.
இதில் மேலுமொரு கேள்வி எழுந்துள்ளது. மலையக பெருந்தோட்ட உழைப்பாளிகளைச் சுரண்டு மாதம் தோறும் 5 மில்லியன் டாலர் அளவுக்கான தேயிலையை இரானுக்கு ஏற்றுமதி செய்துவிட்டால் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு குறைந்துவிடும். அதை எப்படி ராஜபக்ச அரசாங்கம் ஈடுசெய்யப் போகிறது?
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மிகவும் தேவையான அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்கு இந்த பண்டமாற்று ஏற்றுமதி உதவும் என்று அரசு கூறுகிறது. ஆனால் முதலாளிமார் சம்மேளனம் இந்த கருத்துடன் முரண்படுகிறது. பண்டமாற்று முறையில் எண்ணெய் கடனிற்கு தேயிலை எனும் நிலைப்பாடு பொருளாதார நெருக்கடிக்கு மேற்பூச்சாக இருக்குமே தவிர தீர்வாக அமையாது என்று கூறியுள்ளார்.
“சுதந்திரமான சந்தை வர்த்தகத்தில் அரசின் இந்த முடிவு ஏற்றுமதியாளர்களுக்குப் பயன்படாது ஏனென்றால் அந்த பணம் இலங்கை ரூபாயில் அளிக்கப்படும், அது எமக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது” என்று முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் கூறுகிறார்.
இலங்கை ஆண்டொன்றுக்கு 340 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்கிறது. அதில் 265 மில்லியன் கிலோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் மூலம் நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் 1.2 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கிறது என்றாலும், மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் எந்த வகையிலும் உயரவில்லை. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இலங்கை திருப்பியளிக்க வேண்டிய கடன்கள் மிக அதிகளவில் உள்ள நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 1.6 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
நாட்டின் தவறான பொருளாதார கொள்கைகள், ஆடம்பரமான செலவுகள், தேவைக்கும் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் மற்றும் அவர்களுக்கான செலவினங்கள், பித்தளை, வெற்றிலை, உப்பு, புளி, பருப்பு, உற்பத்தி செய்யப்படாத ரயில் பெட்டிகளைப் பராமரிக்க ஒரு துறை என்று 70க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கான `தண்டச் செலவுகள்` போன்றவற்றை அதிரடியாக குறைத்தால் கணிசமான அளவுக்கு பணத்தை மிச்சப்படுத்தலாம்.
எதிர்பாராத வகையில் காலநிலை மாற்றம் காரணமாகத் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டாலோ, அல்லது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டால் இரானுக்கு கொடுத்த வாக்குறுதி என்னவாகும் என்பதை அரசு சிந்தித்ததாகத் தெரியவில்லை.
சமூகத்தில் மிகவும் வறிய நிலையிலுள்ள மக்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டு அவர்களின் வாழ்க்கை சுரண்டப்பட்டால் அதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை இலங்கை அரசு உணர்ந்து கொண்டால் அது அவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லது.
திரௌபதியின் சாபம் ஏற்படுத்திய விளைவுகளை கடன் வாங்கியவர்கள் அறிந்திருந்தால் மோசமான இந்த முன்னெடுப்பைச் செய்திருக்க மாட்டார்கள்.
நாடு வாங்கிய கடனிற்காக ஒரு சமூகம் அடமானம் வைக்கப்படுவதை உலகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
“பலர் வாட வாட சில வாழ வாழ ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை”