(மன்னார் நிருபர்)
(06-01-2022)
வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாயிரம் மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் வழங்கி வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (6) காலை வலி வடக்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (MSEDO) ஏற்பட்டில் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாயிரம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பணியை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (6) வலி வடக்கு பகுதியில் மீள்குடியேறிய மயிலிட்டி , தையிட்டி , ஊரணி பகுதிகளைச் சேர்ந்த 151 மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிறாடோ தலைமையில், கிராம அலுவலகர்கள் மற்றும் மீனவ சங்க பிரதி நிதிகளினால் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மயிலிட்டி பொது மண்டபத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மீள் குடியேற்ற குழுத் தலைவர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் , மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
வறுமைக்கோட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் கடந்த வருடம் குறித்த அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடமாகாணத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு நபர் ஒருவருக்கு சுமார் 2600 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுகள் அடங்கிய பொதி வழங்கப்பட்டு வருகிறது.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த, வறுமை கோட்டிற்கு உட்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொருட்கள் மன்னார் சமூக பொருளாதார நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிறாடோ தலைமையில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.