அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை வலியுறுத்துகின்றது
அண்மையில் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை யின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்களை அது வலியுறுத்துகின்றது
ஒற்றையாட்சி முறையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை:
இலங்கையின் ஒற்றையாட்சி குடியரசு அரசியலமைப்பு, முதலில் 1972 இல் உருவாக்கப்பட்டு 1978 இல் அனைத்து திருத்தங்களுடனும் அமுல்படுத்துப்பட்டது. இந்த அரசியல் அமைப்பானது தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இயற்றப்பட்டது. 1947 இல் கொண்டுவரப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு ஈழத் தமிழர்களின் ஆணையைக் கொண்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், இது குறைந்தபட்சப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விதியைத் (பிரிவு 29) தமிழர்களுக்கு வழங்கியது. மேலும் இந்த அரசியலமைப்பால் வழங்கப்படும் பாதுகாப்புக்கள் மீறப்பட்டால், ஐக்கியராச்சியத்தில் உள்ள கோமறை மன்றத்தில் (Privy Council) மேன் முறையிடும் உரித்தை தமிழர்களுக்கு வழங்கியிருந்தது. இலங்கைக் குடியரசின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு பிரித்தானிய முடி அரசுடனான உறவுகளைத் துண்டித்ததோடு இங்கிலாந்தில் உள்ள கோமறை மன்றத்தில் (Privy Council) தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அத்துமீறல்களிற்கும் மேல்முறையீடு செய்யும் தமிழ் மக்களின் உரிமையைப் பறித்தெடுத்தது.
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டமானது இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியம் இருப்பதை முறையாக அங்கீகரிக்கத் தவறிவிட்டது. சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் அரசு முதன்மைப்படுத்தியதனூடாக, சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கான அடிப்படையை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தியது. பல் தேசிய இனங்களின் உண்மையான சமத்துவத்தை உறுதி செய்யாத அரசியலமைப்பாகும். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியத்தின் இருப்பை சிதைக்கும் நோக்கிலான கொள்கையை முன்னெடுத்து வருகின்றன. தமிழர்களைத் துன்புறுத்துதல், பாகுபாடு காட்டுதல், அரச வன்முறை, அரசால் கட்டவிழ்த்து விடப்படும் குழு வன்முறைகள், இனப்படுகொலைகள், நில அபகரிப்புகள், மறுதலிக்கப்பட்டு வரும் தமிழர் உரிமைகள் என்பன திட்டமிட்டு தொடர்ந்து இடம் பெறுகின்றது. எனவே, தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்காத எந்த ஒரு தீர்வுத்திட்டத்தாலும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியாது.
13வது திருத்தச் சட்டம்:
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து பெறப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கான தொடக்கப் புள்ளியாகக் கூடக் கருத முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. 13வது திருத்தம் ஈழத் தமிழர் தேசத்தின் அத்தியாவசிய கூறுகளை சிதைக்கும் மாகாண சபை முறைமையை வழங்குவதோடு இந்த சட்டமூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தை நிரந்தரமாகப் பிரிப்பதோடு அர்த்தமுள்ள சுயாட்சி முறையை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கம் கொண்டது. சிக்கல் நிறைந்த பரிமாணங்களைக் கொண்ட தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு எந்த வகையிலும் செம்மையான தீர்வை வழங்காத 13வது சட்டத் திருத்தம் நிரந்தர அரசியல் தீர்வாக என்றுமே அமையாது. சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கைகள் தமிழ்த் தேசத்தை அடிபணியச் செய்ய அனுமதிக்கும் அரசியலமைப்பு அம்சங்கள் இன்னமும் இலங்கையின் அரசியலமைப்பில் வேரூன்றியுள்ளன.
பாரம்பரியமாக நாம் வாழ்ந்து வரும் எமது தாய் மண், தனித்துவச் சிறப்புடைய எமது கலாச்சாரம், மகத்துவமானதும் பழமையானதுமான எமது தாய்மொழி, தமிழருக்கே உரித்தான வாழ்க்கை முறை, 2600 வருடங்களுக்கு மேற்பட்ட எமது வரலாறு, இந்தப் பண்புகளால் ஒரு தனித்துவமான தேசிய இனமாக நாம் அமையப் பெற்றிருக்கிறோம். ஒரு அர்த்தமுள்ள தீர்வு என்பது தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்பதாக இருக்கவேண்டும். பொருளாதார விவகாரங்கள், நிதி விவகாரங்கள், நீதித்துறை விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள் உட்பட, தமிழரின் பாரம்பரிய தாயகத்தில் உள்ள அனைத்து நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் பணியாளர்கள் மீதான கட்டுப்பாட்டை நாமே உறுதிசெய்வதோடு, உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளின் வளர்ச்சி. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் நிலம் மற்றும் கடல் அனைத்துக்கும் அதிகாரம் இருக்கவேண்டும்.
தமிழ்த் தேசியத்தை அடிப்படையாக ஏற்று, தமிழ் மக்களிடன் ஆணை பெற்று, தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், 13 ஒரு ஆரம்பப்புள்ளியாகக்கூட இல்லை என்பதை உணர்ந்து, தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வை அனைத்துலகத்திடம் முன் வைக்கவேண்டும்.
அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு வெறுமையாக உள்ள 13ல் மாகாணசபைக்கு கூட எந்த அதிகாரங்களும் இல்லை. அரைகுறையாக கொடுக்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கூட நடைமுறைப்படுத்தப்படாத 13ஐப் பெற்று தமிழர்களால் எந்த அரசியல் தீர்வுகளையும் பெறமுடியாது. பறிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் மிகுதியாக உள்ள அதிகாரங்கள் மகாகாணசபையில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்காமல் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுக் கூறவேண்டுமானால், ஒரு நகரசபைக்கு உள்ள சுயாதீன அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு இல்லை என்பதே உண்மை.
சர்வதேச சமூகத்தின் பொறுப்பு:
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வைக் காண்பதில் சர்வதேச சமூகம் தோல்வியடைந்தால் தமிழ் மக்கள் நிரந்தரமாக சகல உரிமைகளையும் இழக்க வைக்கும் திசையில் இலங்கை அரசாங்கத்தைச் செல்ல ஊக்குவிக்கும். இதன் மூலம் உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அசாதாரண நிலையை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படுத்த வழி வகுக்கும். இந்தோ-பசுபிக் பிராந்திய அரசியலில் இன்றும் தமிழர்கள் ஒரு முக்கிய புள்ளியாக இருப்பதால் சர்வதேசம் இனியாவது நேர்மையாக தமிழருக்கான நிரந்தர அரசியற் தீர்வை ஈட்டித்தர இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். சீனாவின் ஒரு பட்டி ஒரு வீதி முன்முயற்சி (Belt and Road Initiative) ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய நுழைவாயில் (Global Gateway) போன்ற சர்வதேசத்தின் பொருளாதார முன்னெடுப்புகளில் ஈழத்தமிழரின் பங்கு தவிர்க்க முடியாதது.
அர்த்தமுள்ள நிரந்தரத் தீர்வு:
எமது மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை இனவழிப்பாக உருவெடுத்த போது சிங்கள மற்றும் தமிழ்த் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி விரிசல் உண்டானபோது, ஒற்றையாட்சி முறையின் கீழ் ஐக்கியமாக வாழ முடியாது என்ற நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்ட போது, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில் தமிழர்கள் பிரிந்து செல்லும் கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். தமிழ் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சியமைத்த சிங்கள அரசுகளால் மனிதாபிமானமற்ற மகாபாதக அடக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும் அர்த்தமுள்ள தீர்வை சர்வதேச சமூகம் வழங்க முடியாவிட்டால், தமிழ்த் தேசம் தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான இறையாண்மை கொண்ட மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதற்கான அமோகமான மக்களாணை சனநாயக ரீதியாக முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
-அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை-