கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ உல்லாச விடுதியில் இரவு உணவுடன் நடந்த அச்சந்திப்பில் புத்திஜீவிகள் மன்றத்தைச் சேர்ந்த பேராதனை பல்கலைக் கழகத்துப் புத்திஜீவிகள். வந்திருந்தார்கள். அவர்களுடைய நண்பர்களான யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையைச் சேர்ந்த புலமையாளர்களும் அதில் பங்குபற்றினார்கள்.
சஜித் பிரேமதாச தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தியே முதலில் உரையாடினார். ஐக்கிய மக்கள் சக்தியை அவர் ஒரு புதிய கூட்டணியாக ஒரு புதிய தொடக்கமாக உருவகித்தார்.அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் இனப்பிரச்சினைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்வு என்ன என்று கேட்ட போது சஜித் 13வது திருத்தத்தை முன்வைத்தார். 13வது திருத்தம் தோல்வியுற்று விட்டது என்பதனை யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையைச் சேர்ந்த ஒரு புலமையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழ் மக்கள் 13ஐக் கடந்து சமஸ்டி போன்ற தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்து விட்டார்கள். என்று மேற்படி புலமையாளர் சுட்டிக்காட்டிய போது இனங்களுக்கிடையே நம்பிக்கையின்மைதான் பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் அந்த நம்பிக்கையை கட்டியெழுப்பினால் சரி என்றும் சஜித் கூறியிருக்கிறார். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உரையாடலின் போக்கில் அவர் 13ஆவது திருத்தத்தை பற்றித் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் உரிய பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய ஒரு வழியாக அதை அவர் முன்வைப்பதாகத் தெரிகிறது என்று அச்சந்திப்பில் பங்குபற்றிய ஒருவர் கூறினார்.
இதற்கும் சில கிழமைகளுக்கு முன்பு சம்பிக்க ரணவக்க வடபகுதிக்கு வந்திருந்தார். கிளிநொச்சியில் கைக்கடக்கமான ஆட்களோடு நடந்த ஒரு தேனீர் சந்திப்பில் அவர் கூறியிருக்கிறார் சமஸ்டி என்ற சொல் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கூடியது என்று. ஆனால் ஒரு சமஸ்டி தீர்வை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். சமஸ்ரி என்று தலைப்பு வைக்காமல் ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்கலாம் என்ற தொனிப்பட கருத்துக் கூறியுள்ளார்.
அவர் வருவதற்கு சில கிழமைகளுக்கு முன்பு உதய கமன்பில யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். “கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய நிகழ்வுகளை மறக்க முடியாவிட்டாலும், அவற்றை மறந்து அவற்றிற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.
சஜித் பிரேமதாச, உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க, அனுரகுமார திஸாநாயக்க போன்றோர் ராஜபக்சேவுக்கு எதிராக முன்னிறுத்தப்படக்கூடிய எதிர்த்தரப்பு ஆளுமைகளாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களிடம் ராஜபக்சவுக்கு எதிராக மூவினத்து மக்கள் ஆணையைப் பெறத்தக்க வழிவரைபடங்கள் எவையும் கிடையாது என்பதைத்தான் இனப்பிரச்சினை தொடர்பான அவர்களுடைய தீர்வுகள் நமக்கு காட்டுகின்றன. சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தை பகைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தர அவர்கள் தயாரில்லை. அதற்காக சிங்கள வாக்காளர்கள் மத்தியில் இறங்கி வேலை செய்யவும் அவர்கள் தயாரில்லை. எனவே அவர்களால் ராஜபக்சக்களுக்கு எதிராக நின்றுபிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி தெரிவித்த ஒரு கருத்தை இங்கு கவனிக்க வேண்டும்… “நான் கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.” கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார் ” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “ கண்டி தலதாமாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றவேளை நான் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவ்வேளை இளைஞர் ஒருவர் முன்வந்து சேர் நீங்கள் கொவிட்டினால் இரண்டு வருடங்களை இழந்துள்ளீர்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஏன் அதனை பெற்றுக்கொள்ள முடியாது என கேள்வி எழுப்பினார்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதாவது நாடு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான பழியை வைரஸின் மீது போட்டுவிட்டு மீண்டும் ஒரு ஆட்சிக்காலத்தை பெறுவதற்கு கோத்தாபய தயாராக இருக்கிறாரா என்று அவரை எதிர்ப்பவர்கள் சந்தேகிக்கிறார்கள். ஜெயவர்த்தன செய்ததைப் போல ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்தி அவர் தன்னுடைய ஆட்சிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் தென்னிலங்கையில் ஊகிக்கப்படுகிறது.
நாடு இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை சமாளித்து விட்டு அதன்பின் சீனாவிடமிருந்து உதவியை பெற்று பொருளாதாரத்தை நிமிர்த்தி விட்டால் மக்கள் தாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்று ராஜபக்சக்கள் எதிர்பார்க்கிறார்கள்.அந்த அடிப்படையில் அடுத்த தேர்தலை நோக்கி அவர்களிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கக்கூடும் என்ற ஒரு விளக்கமும் ஒரு பகுதி விமர்சகர்களால் முன் வைக்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரம் மிகவும் சிறியது. சீனா போன்ற ஒரு பெரிய நாடு உதவுமாக இருந்தால் இலங்கைத் தீவு வெகு சுலபமாக இப்போது எதிர் கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து நிமிர்ந்து விடும். எனவே கோத்தாபய ராஜபக்ச தன்னுடைய அடுத்த பதவி காலத்திலும் கண் வைத்திருப்பதாக ஊகிக்கப்படுகிறது.
இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில் எதிர்க்கட்சிகள் மேலும் துடிப்பாகவும் ஒன்று திரண்டும் செய்யற்பட வேண்டி இருக்கிறது. ஆனால் அண்மை வாரங்களாக வடக்குக்கு வருகை தந்த தென்னிலங்கைத் தலைவர்கள் தெரிவிக்கும் தகவல்களை தொகுத்துப் பார்த்தால் மூன்று இனத்தவர்களையும் கவரத்தக்க ஜனவசியம் எதிர்க் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இனப்பிரச்சினைக்கு துணிச்சலான ஒரு தீர்வை முன்வைத்து அதற்காக சிங்கள மக்கள் மத்தியில் ரிஸ்க் எடுத்து உழைக்க தயாரற்ற எல்லா சிங்கள தலைவர்களும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதுகாப்பவர்கள்தான். சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தை பாதுகாப்பதுதான் அவர்களுடைய அரசியல் இலக்கு என்றால் அவர்களால் ராஜபக்சக்களை எதிர்கொள்வது கடினம்.
ஏனென்றால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் 2009க்கு பின்னரான வளர்ச்சிதான் யுத்த வெற்றி வாதமாகும்.2018 ஈஸ்டர் குண்டுவெடிப்போடு அது தன்னை அடுத்த கட்டத்துக்கு முஸ்லீம்களுக்கு எதிரானதாகவும் அப்டேட் செய்துவிட்டது. எனவே யுத்த வெற்றி வாதத்தை எதிர்கொள்வதற்கு ஒப்பீட்டளவில் மூன்று இனத்தவரின் வாக்குகளையும் கவரத்தக்க ஒரு தலைவர் தேவை. தனிச் சிங்கள வாக்குகளால் அதை சாதிக்க அதை நன்கு விளங்கி வைத்திருக்கும் காரணத்தால்தான் சஜித்தும் உதய கமன்பிலவும் சம்பிக்க ரணவக்கவும் வடக்கை நோக்கி வருகிறார்கள்.சரிக்கும் பிழைக்கும் அப்பால் ரணில் விக்கிரமசிங்க 2015இல் அப்படி ஒரு தலைவராக தோன்றினார். ஆனால் அவர் தானும் தோற்று தான் பெற்றெடுத்த குழந்தையான நிலைமாறுகால நீதியையும் தோற்கடித்து விட்டார்.
இப்பொழுது சஜித் பிரேமதாசவும் உதய கம்மன்பிலவும் சம்பிக்க ரணவக்கவும் தமிழ் வாக்காளர்களை குறிவைத்து வடக்கு கிழக்கிற்கு வந்து போகிறார்கள். அவர்கள் மறுபடியும் ஒரு தேர்தல் நாடகத்தை ஆடப் போகிறார்கள் என்று தெரிகிறது. சஜித்தின் வடக்கு விஜயத்தின் போது தமிழ் மக்களை கவர்வதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் ஏற்கனவே கடந்த பொதுத் தேர்தலின்போது அங்கஜன் பயன்படுத்திய உத்திகள்தான். வடமராட்சியில் கூட்டத்தில் பங்கு பற்றுமாறு ஒலிபெருக்கியில் ஊர்ஊராக அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின் போது பொங்கல் பொதி ஒன்று தரப்படும் என்று உறுதி கூறப்பட்டிருக்கிறது. அதேபோல சில கிராமங்களில் வீடுகள் தோறும் ஆண்களுக்கான சேர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. பொங்கல் பொதியோடு வந்த சஜித் பிரேமதாச இனப்பிரச்சினைக்கான தீர்வு பொதியோடு வரவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். பொங்கல் பொதியைக் காட்டி தமிழ் மக்களை கவரலாம் என்று அவர் நம்புகிறாரா? இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவரிடம் விசுவாசமான திட்டங்கள் உண்டு என்பதனை அவர் இன்றுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை.
அவரைப் போன்று யாரோ ஒருவரை முன்னிறுத்தி தமிழ்.சிங்கள.முஸ்லிம், மலையக வாக்குகளை திரட்டுவதன்மூலம் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று சில மேற்கு நாடுகளும் நம்பக்கூடும். ஆனால் தமிழ் மக்களுக்கு தேவையாக இருப்பது ஆட்சி மாற்றம் அல்ல. இலங்கைத்தீவின் நான்கு தேசிய இனங்களின் இருப்பையும் ஏற்றுக்கொண்டு ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பை வாக்குறுதி அளிக்கத் தேவையான துணிச்சலை கொண்ட ஒரு சிங்களத் தலைவர்தான் ராஜபக்ஷக்களுக்கு எதிராக இப்பொழுது தேவை. மூன்று ஆண்டுகளில் தோல்வுயுற்ற 2015இன் ஆட்சி மாற்றம் அதைத்தான் தமிழ் மக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.