பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பொ. ஐங்கரநேசன்
தமிழ் மக்கள் தங்கள் வாழ்வில் எத்தனையோ பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை மதம் சார்ந்தவையாகவும், அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. ஆனால், தைப்பொங்கல் மட்டும் சாதி, மத, பொருளாதார பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பொதுவான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் பண்டிகை அல்ல ; தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக்காப்பதற்கான வேட்கை என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்மக்கள் இயற்கையைக் கடவுளாகப் பூசித்த தொல்வழிபாட்டுப் பண்பாட்டைக் கொண்டிருந்தவர்கள். அதன் தொடர்ச்சியாகவே மாரி மழை ஓய்ந்து கோடை ஆரம்பிக்கும்போது முதல் அறுவடையில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கும் பண்பாட்டு வெளிப்படுத்துகையாகக் தைப்பொங்கல் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் தங்களைப் போன்றே இயற்கையை நேசிக்கும் பண்பாட்டு மரபைக் கொண்டிருந்தவர்கள். அதன் தொடர்ச்சியாகவே அவர்களோடு உணவு உற்பத்தியில் உழைத்த காளைகளுக்கும் பொங்கல் செய்து படைக்கும் பண்பாட்டு நீட்சியாகப் பட்டிப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். தமிழ் மக்கள் புறமணம் புரியும் பண்பாட்டு உறவைக் கொண்டுள்ளவர்கள். கிராமங்களை இணைப்பதற்கு வீதிகள் இல்லாத அக்காலப்பகுதியில் தைபிறந்தால் வழிபிறக்கும் என்று மாரி மழை ஓயும்வரை காத்திருந்து பாதைகள் தெரிய ஆரம்பித்ததும் அயற் கிராமங்களுக்கு மாப்பிள்ளை தேடிச் செல்வர்.
ஆனால், இன்று நயத்தகு பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் இந்தத் தையிலாவது பௌத்த – சிங்களப் பண்பாட்டு மேலாதிக்கத்தில் இருந்துவிடுபட வழிபிறக்காதா என்று அங்கலாய்த்திருக்கின்றனர். பொங்கல் வாழ்த்துச் செய்திகளை அடுத்தவர்களுக்குப் பரிமாறும் இவ்வேளையில் தமிழ் மக்களின் சுதந்திரமானதும் சுபீட்சமானதுமான வாழ்வுக்கு வழிபிறக்கச் செய்ய இயற்கை என்ற பேரிறைவனை வேண்டி நிற்போமாக என்றும் குறிப்பிட்டுள்ளார்.