(15-01-2022)
இடம்பெயர்வு, யுத்தம், மீள்குடியேற்றம் என அனைத்து காலங்களிலும் கிளிநொச்சியில் மக்களையும் மாவட்டத்தையும் நேசித்த மருத்துவராக அா்ப்பணிப்புடன் பணியாற்றிவர் வைத்தியர் சிதரம்பரநாதன் அவர்களின் மறைவு மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என கிளிநொச்சி ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சிஊடக அமையம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கிளிநொச்சியின் மூத்த வைத்தியர் திரு சிதம்பரநாதன் அவர்கள் இன்று (15.01.2022) அவரது 91வது அகவையில் அமரரானார். அவர் மிகவும் நேசித்த கிளிநொச்சி வைத்திசாலையில் காலை 6.30 மணியளவில் அமைதியாக அவரது உயிர் பிரிந்தது.
இலங்கைத் தரைப்படையின் மருத்துவ அணியில் தொண்டர் படை அதிகாரியாக தமது மருத்துவ வாழ்வினை ஆரம்பித்த அவர் பின்னாளில் கிளிநொச்சி மருத்துவத்துறையின் உயிர்நாடியாக விளங்கினார்.
தமது சேவைக்காலத்தில் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி எனப் பல்வேறு மருத்துவ நிர்வாகப் பதவிகளை வகித்த அவர் தற்போதைய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக இருந்தபோது அதன் பொறுப்பதிகாரியாக கடமையாற்றினார். 90ம் ஆண்டுகளில் கிளிநொச்சி வைத்தியசாலை இடம்பெயர்ந்து அக்கராயன் வைத்தியசாலையில் இயங்;கிய காலப்பகுதியில் அன்னாரது சேவைகள் காரணமாக கடவுளுக்கு நிகராக மக்களால் கொண்டாடப்பட்டார்.
பின்னாளில் கிளிநொச்சி வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டு மாவட்டப் பொது வைத்தியசாலையாக மாறிய காலப்பகுதியில் அவ் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்தியராக பணிபுரிந்தார்.
2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி வைத்தியசாலை இடம்பெயர்ந்த காலப்பகுதியிலும். பின்னர் 2009 ல் ஆரம்பித்த மீள்குடியேற்ற காலத்திலும் வன்னிப் பிரதேசத்தின் பல வைத்தியசாலைகளில் வெளிநோயாளர பிரிவுகளில் கடமை செய்து மக்களைக் காத்தார்.
தாம் இளைப்பாறிய பின்னரும் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்பட்ட வைத்தியர் பற்றாக்குறையினை மனத்தில் கொண்டு தொடர்ந்து தமது பணியினைச் செவ்வையாக வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் செய்துவந்தார்.
மீள்குடியேற்ற காலப்பகுதியில் தமது நண்பரான காலஞ்சென்ற வைத்தியர் கோபாலபிள்ளை அவர்களுக்கு உதவியாக மல்லாவியிலிருந்து உருத்திரபுரம் வரை நோயாளர்களைப் பார்வையிட்ட வைத்தியர் சிதம்பரநாதன் வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடமாடும் மருத்துவ சேவைகளிலும் தமது சேவையினை வழங்கி உதவியவர் ஆவார்.
வைத்தியர் சிதம்பரநாதன் அவர்களது சேவையானது வன்னிப் பிரதேச மக்கள்சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார அமைச்சு மற்றும் மாகாண நிர்வாகத்தினர் ஆகியோரால் மெச்சப்பட்டமை வரலாறாகும்.
மருத்துவசேவைக்கு மேலதிகமாக ஆன்மீகத்துறையிலும் மிகுந்த நாட்டம் கொண்ட வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் சுகாதார சேவையாளர்களுக்கு ஊக்கியாகவும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
“ நீங்கள் நோயாளர்களுக்கான உங்களது கடமையைச் செய்யுங்கள் ஆனால் பலனை எதிர்பாராதீர்கள். பகவான் (சத்தியசாய் பாபா) உங்களைப் பாரத்துக் கொள்வார்” என்பதே சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர் எப்போதும் வழங்கும் ஆலோசனையாகும்.
கிளிநொச்சியில் பல மருத்துவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் உதாரண புருசராக விளங்கியவர் வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.