(குரு அரவிந்தன்)
உலகில் மக்கள் வாழ்வதற்குச் சிறந்த முதல் 10 இடங்களில், 2022 ஆண்டு கனடாவும் ஒன்றாக சி.எஸ். குளோபல் பாட்னேஸ் என்ற நிறுவனம் தெரிவு செய்திருக்கின்றது. கனடாவுக்குத் தமிழ் மக்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து சுமார் 40 வருடங்கள்தான் ஆகின்றது. ஆனாலும் இந்த 40 வருடங்களில் அடைக்கலம் தந்த கனடிய மண்ணுக்கு நன்றிக்கடனாகத் தமிழ் மக்கள் கொடுத்த பங்களிப்பு அளப்பரியது. கனடாவில் அனேகமாக எல்லாத் துறைகளிலும் தமிழ் மக்கள் காலூன்றி விட்டார்கள். இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் நாடாளுமன்றத்திற்கு இன்னும் பல பிரதிநிதிகளை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை உண்டு. கோவிட்-19 பேரழிவின் தொடர்ச்சியாக 2022 ஆண்டும் தமிழர்களின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளான தைப்பொங்கல், மரபுத் திங்கள் நிகழ்வுகளும் பொதுமக்கள் நன்மைகருதி மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன.
கனடா நாடானது குடிவரவாளரின் நாடாகும். ஏனைய பல்லின மக்கள் போலவே கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து, எமது அடையாளத்தையும் இழக்காமல், எமது மரபுகளையும் பேணிக் காக்கக்கூடிய வசதிகள் இங்கே இருக்கின்றன. அவ்வகையில் நாமும் எமது மொழியையும், மரபுகளையும் பேணிக் காபப்பதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மரபுரிமைத் திங்களாகும். இதன் ஆரம்பத்தைப் பார்போமேயானால், 2003ம் ஆண்டில் கனடாத் தமிழ்க் கல்லூரியால் தமிழ் மொழி வாரம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்குள்ள சில அமைப்புகள் ஒன்றிணைந்து ‘தமிழ் மேம்பாட்டுக் கழகம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கினர். இவர்களுடன் இங்குள்ள தமிழ் நிறுவனங்களும் இணைந்து, தமிழ்மொழி மேம்பாடு, சிறுவர்களுக்கான தமிழ்க் கல்வி, தமிழியல் ஆய்வு போன்ற துறைகளில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் மொழி வார நிகழச்சிகளை ஒழுங்கு செய்தனர். பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பித்தல், அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தல், தொடர்பு சாதனங்களை இதற்காக இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கனடாவில் தமிழர் வாழும் இடங்களில் தமிழ் மொழியை முன்னிறுத்தி கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், இசை, நடன நிகழ்ச்சிகள், போன்றவை நடத்தப்பட்டன. 2009 ஆம் ஆண்டு தமிழ்க் கல்வியை கற்பிக்கும் அறிவகம் மற்றும் சில தமிழர் அமைப்புக்கள் இணைந்து ‘தமிழ் மரபுத் திங்கள்’ அமைப்பை உருவாக்கினர். 2010 ஆம் ஆண்டு முதலாவது தமிழ் மரபுத் திங்கள் விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டது. இக்கால கட்டத்தில் தற்போது கனடிய தேர்தலில் போட்டியிடும் நீதன் சண் அவர்களும் சங்கங்களை ஒன்றிணைப்பதில் முன்னின்று உழைத்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
2012 ஆம் ஆண்டு ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம், ஏஜெக்ஸ், பிக்கரிங் நகரங்களும் 2013 ஆம் ஆண்டு பிராம்ரன், ரொரன்ரோ, நகரங்களும், 2014 ஆம் ஆண்டு ஒட்டாவா நகரமும் தை மாதத்தை தமிழரின் மரபுரிமைத் திங்களாக அறிவித்தன. இதே ஆண்டு ஒன்ராரியோ மாநில அரசும் தமிழ் மரபுத் திங்களைச் சட்டவலுவுள்ளதாக நிறைவேற்றியது. ஹரி ஆனந்தசங்கரியின் முயற்சியால் 2016 ஆம் ஆண்டு கனடிய மத்திய அரசு தமிழ் மரபுத் திங்களை சட்டப்படி அஙகீகரித்தது. 2019ஆம் ஆண்டு தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, முதலாவது உலகத் தமிழியல் மாநாடு, ரொரன்ரோவில் நடைந்தேறியது. இம்மாநாட்டுக்கு, பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர் வருகை தந்திருந்தனர்.
2004 ஆம் ஆண்டில் இருந்து ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் ரொறன்ரோ கல்விச்சபையோடு இணைந்து ஜனவரி மாதத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கலை நிகழ்வுகளை கொண்டாடி வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட முன்பாகவே வருடந்தோறும் ரொறன்ரோ கல்விச் சபையால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 2011-2012 ஆம் ஆண்டுகளில் சுமார் 5000 தமிழ் மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக நான் இருந்த போது மிகச் சிறப்பாக மரபுத்திங்கள் நிகழ்வுகளைக் கொண்டாடினோம். ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, மற்றும் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த வருடம் ‘எமது வரலாறுகள், எமது மரபுகள், எமது தாயகங்கள்’ என்ற தலைப்பை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த நிகழ்ச்சிகளின் தொடர்பாக, பீல் பிரதேசத்தில் உள்ள சொப்கா குடும்ப மன்றத்தினர் தமிழர் மரபுத்திங்களை மிகச் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறார்கள்.
இதில் கனடாவில் பிறந்து வளர்ந்து தமிழில் பேசும் பிள்ளைகள் பேச்சு, பாடல், நாடகம், நடனம் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றி மிகவும் சிறப்பாகச் செய்து தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்தனர். இம்முறை கோவிட் பேரிடர் காரணமாக மொய்நிகர் வழியாகவே இந்த நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இது போல, இங்கே உள்ள பல மன்றங்கள் குறிப்பாக ரொரன்ரோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து கனடா தமிழ் காங்கிரஸ், தமிழ் இருக்கை போன்ற அமைப்புக்கள் தமிழர் மரபுரிமைத் திங்களைக் கொண்டாடுகின்றனர்.
சென்ற வருடம் 2021 தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுகள் தைமாதம் முழுவதும் இடம்பெற்றன. நிகழ்வின் ஆரம்பத்தில், ரொரன்ரோவில் உள்ள கனடிய தமிழ் கல்லூரியின் வளாகத் திறந்த வெளியில் கனடிய தேசியக் கீதத்துடன் கனடிய கொடியும், தமிழ்த் தாய் வாழ்த்துடன் மரபுத்திங்கள் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. இந்தக் கொடியில் உள்ள இலட்சனைகள் தமிழர்களின் மரபைச் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை, ஒரு சிலர், ஏனையோருடன் கலந்தாலோசிக்காமல் தங்களை முன்னிலைப் படுத்த அவசரமாகச் செய்த முடிவு இது என்ற ஒரு சாராரின் குற்றச் சாட்டும் அதைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. மரபுத்திங்கள் மாதத்தினை முன்னிட்டு கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகள் மெய்நிகர் ஊடாக நடைபெற்றன.
இந்த வருடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அங்கத்தவர்களும் தங்கள் பணிமனை அலுவலகத்தில் 2022 மரபுத் திங்களை இரண்டு நாட்கள் கொண்டாடினார்கள். நேரடி நிகழ்வுகள் தைப்பொங்கல் தினத்திலும், 15 ஆம் திகதி இணையவழியாகவும் நிகழ்வுகள் இடம் பெற்றன. கனடாத் தமிழ் மரபியல் நடுவம் ஒழுங்கு செய்த தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுகள் மெய்நிகர் வழியாக நடந்த நிகழ்வில் 9-1-2022; ‘வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணுவதில் வரலாற்றுத் தொன்மையின் பங்கு’ என்ற தலைப்பில் புலவர் செந்தலை ந. கௌதமன் அவர்கள் உரையாற்றினார்கள். 16-1-2022 அன்று பேராதனை பல்கலைக் கழக விரிவுரையாளர் க.ஜெகதீஸ்வரன் ‘தமிழர் வரலாற்றுத் தொன்மையில் தொல்லியல் ஆய்வுகளின் பங்கு’ என்ற தலைப்பிலும் 23-1-2022 அன்று ‘ஈழத்தில் தமிழர் வரலாற்றுத் தொன்மை’ என்ற தலைப்பில் யாழ்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரத்தினமும் உரையாற்ற உள்ளார்கள்.
‘தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபு மாதத்தையும் முன்னிட்டு தமிழர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தேசிய அடையாளத்தைப் பேணுவதற்கும், வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கப்படுவதையும், இனப்படுகொலையை எதிர்ப்பதற்கும் உங்களின் உறுதிப்பாடு ஊக்கமளிக்கிறது மற்றும் பாராட்டுக்குரியது என்று அரிஸ் பாபிகியன், ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற பிரதிநிதி அரிஸ் பாபிகியன் கனடா உதயன் பத்திகைக்குத் தெரிவித்திருந்தார். ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழர் மரபுரிமை மாதத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். ஒன்ராறியோவின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழர்களைத் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பாராட்டியிருந்தார்.
கனடா பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களும் வழமைபோல தைப்பொங்கலை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். ‘உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் அறுவடைத் திருநாளான தைப்பொங்கலை இவ்வாரம் கொண்டாடுகிறார்கள். இத்தினத்தில் பாரம்பரியமாக தமிழ் குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றுசேர்ந்து அமோகமான விளைச்சலுக்கு நன்றி தெரிவித்து இனிய பொங்கலையும் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்வார்கள். கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் மரபுரிமைத் திங்களாகவும் விளங்குவதால், தமிழ்ச் சமூகத்தின் செழிப்பான வரலாறு, மீண்டெழும் வல்லமை மற்றும் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறைகளில் வழங்கிவரும் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலமாகவும் இது அமைகிறது. நாம் ஒன்றுபடும் போது, மேம்பட்டதும், அதிக நியாயம் நிலவுவதும், அனைவரையும் அதிகளவு உள்ளடக்கியதுமாகக் கனடாவை மாற்றலாம். கனடாவிலும், உலகெங்கிலும், தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்தப் பண்டிகை மகிழ்ச்சியானதாக அமைவதற்கு எனது குடும்பம் சார்பாக சோஃபியும் நானும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.’