எதிர்க்கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புகின்றார்
இலங்கை மக்கள் பட்டியின் விளிம்பில் நிற்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இலவச உணவுத் திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதா?
என்று இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரான ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உணவு விடுதியில் உணவுக்கு அதிக நிதி செலவிடப்படுவதாகவும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.ஹேஷா விதனாகே சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றம் 19 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே இதனை வலியுறுத்திய ஹேஷா விதனாகே எம்.பி.மேலும் கூறுகையில்,
நாட்டில் தற்போது மக்கள் பட்டினி நிலையில் இருக்கும்போது பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு இந்தளவுக்கு உணவுக்கு நிதி செலவிடப்படுகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த உணவு விடயத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
அது மட்டுமன்றி பாராளுமன்ற உணவு விடுதியில் உணவுக்கு அதிக நிதி செலவிடப்படுவதாகவும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றார்.