(மன்னார் நிருபர்)
(18-01-2022)
உள்நாட்டுப் போரின் வடுக்களினால் வறுமையில் இருக்கும் தாயக மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் குழந்தை பேறு தாமதமடைபவர்களுக்காக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கருவள சிகிச்சை நிலைய உபகரணங்கள்’ கையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் நிதி உதவியுடன், நிறுவப்பட்ட குழந்தைப் பேறு தாமதமடைபவர்களுக்கான கருவள சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுடன் இணைந்து ஓர் அலகாக குறித்த நிலையம் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் க.செந்தூர் பதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்த நிலையில் குறித்த நிலையம் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எ.யோ.புஸ்பகாந்தன் மற்றும் பொறுப்பு தாதிய சகோதரி ரி.விமலேஸ்வரன் ஆகியோரிடம் வைபவ ரீதியாக பயனாளர் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
-குறித்த கருவளர்ச்சி நிலைய அங்குரார்ப்பணம் மன்னார் மாவட்டத்தில் குழந்தை பேறு தாமதமாவதற்கு தகுந்த சிகிச்சை வசதி இல்லாத குறையை நீக்குவதற்கும், வறுமை மற்றும் போக்கு வரத்துப் பிரச்சினைகளால் பிற மாவட்டங்களுக்கு சென்று தகுந்த சிகிச்சை பெற முடியாத குழந்தைப் பேறு தாமதமடைந்த தம்பதிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது.
-குறித்த நிலையத்தில் ஆண்களுக்கான விந்துப் பரிசோதனை, பெண்களுக்கான ஸ்கான் பரிசோதனை,லேப்ராஸ்கோபி (கேமரா) பரிசோதனை, மற்றும் முட்டை வளர்ச்சி சிகிச்சை என்பன இலவச சேவையாக வழங்கப்பட உள்ளது.
-மேலும் விந்தை சுத்தப்படுத்தி செறிவாக்கி கருப்பையில் செலுத்தி கருத்தரித்தலை வேகப்படுத்தும் சிகிச்சை முறையும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
-குறித்த சிகிச்சை முறையானது குழந்தைப் பேறு தாமதமடைந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை அதிகரிக்கின்றது.
-உள் நாட்டுப் போரின் வடுக்களினால் வறுமையில் இருக்கும் தாயக மக்களின் நலனை கருதி சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த உபகரண தொகுதிகளை புலம்பெயர் தமிழ் கூட்டமைப்பு எனும் அமைப்பு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.