இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தாலும் தங்களை நல்லவர்களாகவே சித்தரிக்க முயலுகின்றார்கள். அத்துடன் அவர்கள் செய்யும் தவறுகளை விமர்சிப்பவர்களை தவறானவர்களாக காண்பிப்பதோடு. அவர்களை கைது செய்யவும் பொலிஸ் அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்கின்றார்கள். அத்துடன் உண்மையாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யும் படி தமது சகாக்களான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றார்கள்.
தவறிழைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் உலகில் எங்கும் இடம்பெறுவதில்லை.
தென் ஆபிரிக்காவைப் போன்ற அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்று இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 19 ஆம் திகதி புதன்கிழமை அழைக்கப்பட்டிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் செயற்படுத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்வதற்காக தான் அழைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் பிரிவில் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்து , நாட்டை சீரழித்து விட்டு அவர்கள் சிறந்தவர்களாக முயற்சிக்கின்றனர். அவர்களது தவறுகளைப் பற்றி கூறுபவர்களை தவறானவர்களாகக் காண்பிக்கின்றனர்.
உலகில் எந்தவொரு இடத்திலும் எவரேனும் தவறிழைத்தால் , அது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ள அல்லது செய்ய தயாராகும் போது , அவ்வாறான நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தவர்களை கைது செய்கின்றனர்.
உலகில் எங்கும் இது போன்று இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்கா போன்ற அறியாமையுடைய சர்வாதிகார நாடுகளைத் தவிர வேறு எங்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை.
சந்திரிக்கா என்ன செய்தார் என்று கேள்வியெழுப்பும் ராஜபக்ஷாக்களுக்கு நினைவுபடுத்துவதற்காக இதனைக் கூறுகின்றேன்.
1994 இல் நான் ஆட்சியை பொறுப்பேற்கும் போது உலகிலுள்ள மொத்த நாடுகளில் வறுமைக் கோட்டிலுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 25 ஆவது இடத்தில் காணப்பட்டது. 11 ஆண்டுகள் எனது ஆட்சி நிறைவடைந்த போது , போசாக்குள்ள 72 நாடுகளுக்குள் இலங்கையையும் கொண்டு சென்றேன்.
அது மாத்திரமின்றி தனிநபர் வருமானத்தை மூன்று மடங்காக அதிகரித்து , தேசிய உற்பத்திகளையும் மூன்று மடங்காக அதிகரிக்க எனது ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டது. சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டிருந்த கல்வி துறை 2006 இன் பின்னர் முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிலைமைகள் முற்றாக மாற்றமடைந்துள்ளன. இந்த நாட்டில் சிறந்த எதிர்காலமொன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்.