கதிரோட்டம்- 21-01-2022
இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர் பற்றிய வெறுப்பை விட ஒரு ‘பீதி’ யை ஏற்படுத்தும் நிலையே அந்த தீவின் நிலப்பரப்பில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளிலிருந்தும் தோன்றியுள்ளதை நாம் அனைவரும் அவதானிக்கும் வகையில் தகவல்களும் செய்திகளும் பரவி வருகின்றன. இலங்கையில் தமிழ் மக்களை அடக்கி ஒழிப்பதில் கங்கணம் கட்டியிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சி அமைந்திருந்த காலத்திலும் பார்க்க முழு இலங்கை மக்களையும் பாதாளத்தில் தள்ளும் ஆட்சி ஒன்றையே இந்த அரசாங்கம் தனது கைகளில் எடுத்துள்ளதாகவும் உள்நாட்டில் உள்ள தமிழ் சிங்கள விமர்சகர்கள் தங்கள் எழுத்துக்களில் வடித்து வருகின்றனர்.
ஆனாலும் தீவிரமாக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வர வேண்டிய வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து அழிவை நோக்கி ஆட்சி நடத்தும் தற்போதைய அரசு தொடர்பாக எதுவும் வரவில்லை என்ற வெற்றிடம் தொடர்பாகவும் அங்கு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இவ்வாறான ஆரோக்கியமற்ற ஆட்சி ஒன்று அங்கு தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதால் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட முழுதான இலங்கைக்கே ஆபத்து வரவுள்ளதை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான சந்திரிகா விஜயகுமாரணதுங்க தெரிவித்துள்ள செய்தியொன்று இவ்வாரத்தின் எமது பக்கங்களில் ஒன்றில் காணப்படுகின்றது.
இலங்கையில் ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தாலும் நல்லவர்களாகவே சித்தரிக்க முயலுகின்றார்கள் என்று தெரிவித்துள்ள அவர்
இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தாலும் தங்களை நல்லவர்களாகவே சித்தரிக்க முயலுகின்றார்கள். என்றும் அவர்கள் செய்யும் தவறுகளை விமர்சிப்பவர்களை தவறானவர்களாக காண்பிப்பதோடு. அவர்களை கைது செய்யவும் பொலிஸ் அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்கின்றார்கள். என்றும் உண்மையாக விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யும் படி தமது சகாக்களான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றார்கள் என்றும் பல விடங்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே இலங்கை அரசியலில் பழி தீர்க்கும் படலத்தில் கொலைகளைக் கூட செய்வதற்கு அஞ்சாத தற்போதைய ஆட்சித் தலைவர்கள் சந்திரிகாவின் கூற்றுக்கு என்ன பதிலைத் தரவுள்ளார்கள் என்பதோ அலலது எவ்வதையான பழிவாங்களை சந்திரிகாவின் மீது தொடுப்பார்களோ என்பதை பலர் கவனித்த வண்ணம் உள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் இலங்கை பற்றிய யதார்த்தமான ஒரு அறிக்கையை கனடிய வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளதையும் அதற்கு தனது எதிர்ப்பை அரசியல் நாகரீகம் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கை அரசின் வெளிநாட்டு அலுவல்கள் வெளியிட்டுள்ள செய்த்pயும் இன்னொரு பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.
மேற்படி செய்தியின் குறிப்பிட்டுள்ள வண்ணம் இலங்கையின் தற்போதைய நிலை பற்றி அண்மையில் கனடாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையானது தவறானது என்றும் அதில் உள்ள தகவல்கள் தவறான என்பதோடு மட்டுமல்லாது. காலாவதியான தகவல்களையும் உள்ளடக்கியுள்ளன என்றும் மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் கனடாவின் 2022 ஜனவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் இலங்கை அரசும் அதன் வெளிநாட்டு அமைச்சும் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய அரசின் அறிக்கையானது இலங்கைக்கு உல்லாசப் பயணிகளும் வர்த்தக முதலீட்டாளர்களும் வருவதற்கு அஞ்சுவார்கள் என்றும் இலங்கை தொடர்பாக ஏனைய நாடுகளும் இலங்கை பற்றிய பாதகமான விடயங்களை தங்கள் தங்கள் நாட்டுப் பிரஜைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்ற இலங்கையின் அச்சத்தை இந்த அறிக்கை வெளிப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உரைகளின் நேரத்தில் மாத்திரமல்ல. பொதுவெளியிலும் இலங்கை அரசின் பாதகமான ஆட்சி பற்றிய தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு வாக்களித்தவர்களின் வேண்டுகோளாக உள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டிதொன்றாகும்.