கனடாவின் மொன்றியால் மாநகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘வெஸ்ட் ஐலண்ட் தமிழ்க் கலாச்சாரச் சங்கம்’ நடத்திய’தைப்பூசமும் வேலின் பெருமையும்’ என்னும் தலைப்பிலான இணையவழி கருத்தரங்கம் கடந்த 16-01-2022 ஞாயிற்றுக்கிழமையன்று இணையவழி ஊடாக சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி இணையவழி கருத்தரங்கில் ‘இலக்கியத்தில் முருக வழிபாடு’ என்னும் தலைப்பில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களும் ‘வேலின் மகத்துவம்’ என்னும் தலைப்பில் ஈழத்திலிருந்து சமயப் பேச்சாளர் பிரம்மஶ்ரீ பி. சிவானந்த சர்மா அவர்களும் ஈழத்திலிருந்து யோகக் கலை விரிவுரையாளர் ஶ்ரீ வியாச கல்யாணசுந்தரம் அவர்கள் ‘வரலாற்றில் முருகன்’ என்னும் தலைப்பிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்கள்.
கருத்தரங்கை தொகுதது வழங்கும் பொறுப்பை திருமதி சுபாங்கி சிவா ஏற்று சிறப்பாகச் செய்திருந்தார்.
முதலில் பண்ணிசையோடு கருத்தரங்கம் ஆரம்பமாகியது.
இணையவழி கருத்தரங்கின் தொடக்கத்தில் ‘வெஸ்ட் ஐலண்ட் தமிழ்க் கலாச்சாரச் சங்கம்’ அமைப்பின் தலைவர் திரு வாகீசன் நடராசா வரவேற்புரையாற்றினார்.
அங்கு உரையாற்றிய சமயப் பேச்சாளர் பிரம்மஶ்ரீ பி. சிவானந்த சர்மா அவர்கள் ‘வேலின் மகத்துவம்’ என்ற தலைப்பில் உரையாற்றுகையில் பல அரிய கருத்துக்களை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து விளக்கினார். உதாரணமாக வேலின் உருவ அமைப்பான தீபத்தைப் போன்று இருப்பது தொடர்பான விளக்கங்களை மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார். அத்துடன் முருகன் கையில் உள்ள ‘வேல்’ தமிழில் உள்ள எழுத்துக்களோடு எவ்விதம் தொடர்புடையாக உள்ளது என்பதைக் கூறி வேலானது எந்தளவிற்கு எமது மொழியோடும் எமது வாழ்வியலோடும் தொடர்புடையதாக இருக்கின்றது என்பதை அற்புதமாக விளக்கினார்.
அவருடைய உரையின் ஊடாக பல அர்த்தமுள்ள கருத்துக்கள் வெளிப்பட்டன என கலந்து கொண்ட பல அன்பர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் போது பகிர்ந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களும் யோகக் கலை விரிவுரையாளர் ஶ்ரீ வியாச கல்யாணசுந்தரம் அவர்களும் தங்கள் உரை நேரத்தின் போது தங்களுக்குத் தரப்பட்ட தலைப்புக்களில் சிறப்பாகவும் தகவல்களோடும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இறுதியில் அமைப்பின் தலைவர் திரு வாகீசன் நடராசா நன்றியுரையையும் ஆற்றினார்.