உரும்பிராய் திரும்பும் முன் பார்க்கலாம்
பரந்த பெரு வீதி உள்ள ஆலயம் – அதையும்
திரும்பிப் பார்த்து வணங்கிவிட்டு – பின்
கிளம்புகின்றோம் பெரும் ஊக்கத்தோடு
வீதியின் மருங்குகளில் ஆங்காங்கு மரங்கள்
சோலை தரும் நோக்கோடு நிற்கின்றன – எனினும்
அவ்வூர்ப் பெயருக்குள்ள பொலிவில் அவை இருக்கவில்லை
முன்னோர் , வழிப்போக்கர் நலன் கருதி
தெருவோரம் வைத்தனராம் பராய் மரங்கள்
‘பெருஞ்சூலி மரம்’ என்ற பெயர் கொண்டு – அது
பெருவுருக் கொண்டு வளர்வதனால்
‘உரு’ என்ற அடைகொண்டு ‘ உரும்பராய்’ ஆகி – பின்
உரும்பிராய் ஆகிப் ஊருக்கும் ஆகியதாம்
இதுமட்டும் காரணமாய்க் கூறவில்லை
தமிழ் எண்ணின் சிறப்பாலும் வந்துவாம் , அன்று
மரங்களுக்கு எண்கள் பொறித்தனராம் தமிழில்
உரும்பிராய் இடத்தில் உள்ள மரத்தின் எண்
இருபத்தைந்தாக இருந்ததனால்
இப்படி எழுதினராம் ,
இரண்டிற்கு – உ(2-உ)
ஐந்திற்கு – ரு(5-ரு)
அதனாற் பிறந்ததாம் உரு (25)
அதனோடு இணைந்ததாம் பராய் மரம் ( 25 பராய்)
இதுவே உரும்பராய் மருவி உரும்பிராய் ஆனதாம்
பெருமளவு தமிழ் எழுத்து எண்கட்குப்
பரிட்சையமான மக்கள் வாழ்ந்த காலம் போலும்
இக்கால மக்களுக்கு அப்பகுதி பெரும்பாலும் தெரியாது
கற்ற தமிழ் வல்லோருக்கு இங்கு இது விதிவிலக்கு
உற்ற தமிழ் எண்கள் போலவே
வைத்த பெரு மரங்களும் அதிகளவில் அங்கில்லை
மாலைபோட்டு வரவேற்ற மக்களை
சாரைசாரையாய் சாயவைத்தவர்க்கு – அப்
பராய் மரங்களைஅழிப்பதென்ன கடினமா? – என்று
கேட்டவாறு தொடருவோம் அடுத்த ஊரை நோக்கி…..
(தொடரும்)
உமா மோகன்