கொழும்புத் துறை முகத்திற்கு அருகில் கடலின் ஒரு பகுதியை நிரப்பி உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் என்பது கொழும்பின் வணிக மையமான மத்திய வர்த்தக மாவட்டத்தின் நீட்டிப்பாக, கடலில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட 269 ஹெக்டேயர் பரப்பளவில் வியாபித்துள்ளது. சீனாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ள இலங்கைக்குச் சொந்தமான ஒரு புதிய ஓரு நிலப்பரப்பு தற்போது ஓரு உல்லாசபுரியாகவும் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன். உலகத்தரம் வாய்ந்த நகரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் வாழ்வதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக கொழும்பின் நிலத்தோற்றத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளது.
சர்வதேசமயமாக்கலை விரைவுபடுத்துவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார எதிர்காலத்தை உறுதிசெய்ய திறமைசாலிகளையும் முதலீட்டையும் ஈர்ப்பதை துறைமுக நகரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்மையில் இயற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பல சேவை சிறப்புப் பொருளாதார வலய அந்தஸ்து, கிழக்கு மற்றும் மேற்கை இணைக்கும் இலங்கையின் புவியியல் இருப்பிடத்தை மேம்படுத்துவதற்கு கொழும்பை சிறந்த தளமாக மாற்றும்.
கொழும்பு துறைமுக நகரத்தின் கடற்கரை நடைபாதை ஜனவரி 10 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரை சுமார் 90,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதுடன், இது கொழும்பில் கட்டாயமாக பார்க்க வேண்டிய பிரபல இடமாக மாறியும் உள்ளது.
புதிய அழகிய நிலப்பரப்பை நோக்கி பெருவாரியாக மக்கள் வருகை தர ஆரம்பித்துள்ள நிலையில், காலிமுகத்திடலில் இருந்து பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட கதவுகளுக்கு வெளியே பெரும் வரிசையில் மக்கள் நிற்பதுடன், புதிய நிலப்பரப்பைப் பார்வையிட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அணிதிரள்வதை காணக்கூடியதாகவும் உள்ளது.
குறிப்பாக பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட முதல் வாரமான ஜனவரி 10 முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை நாட்களில் எப்போதும் இல்லாத அளவில் மக்கள் பெருமளவில் ஒன்றுதிரண்டு பார்வையிட வருகை தந்துள்ளனர். கடற்கரை நடைபாதையானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோரால் ஜனவரி 9 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு துறைமுக நகரத்தின் கடற்கரை நடைபாதையானது பாரிய செயற்திட்டத்தில் பொதுமக்கள் செல்லக் கூடிய முக்கிய இடமாகும். இலங்கை மற்றும் சீனா இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளமை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இறப்பர்-_ அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளமை ஆகிய இரண்டு நிகழ்வுகளின் பூர்த்தியை ஒட்டியதாக இந்த திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
ஜனவரி 10 முதல் 17 வரையிலான வாரத்தில் மொத்தமாக 89,540 பேர் கடற்கரை நடைபாதைப் பகுதிக்கு வருகை தந்துள்ளனர். 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று 25,580 பேர் வருகை தந்துள்ளமை இதுவரை நாளொன்றில் வருகை தந்துள்ள அதிகூடிய எண்ணிக்கையிலான பார்வையாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த அதிகபட்ச எண்ணிக்கையாக வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரண்டு விடுமுறை நாட்களும் பதிவாகியுள்ளதுடன், முறையே 19,717 மற்றும் 21,665 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
கடற்கரை நடைபாதையானது 500 மீற்றர் நீளமான நடைபாதையைக் கொண்ட அழகிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக நகருக்குள் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பல பொதுப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 53 ஏக்கர் பசுமையான இடங்கள், 2 கி.மீ கடற்கரை மற்றும் மத்திய பூங்காவிற்கு 14 ஏக்கர் நிலம், நடைபாதைகள், நீர்வழிகள் மற்றும் பூங்கா இணைப்பு பாதைகள் என மொத்தம் 91 ஹெக்டேயர் நிலம் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடற்கரை நடைபாதையானது பொதுமக்களுக்காக காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும் என்பதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே அமைந்துள்ள விசேட நுழைவாயிலின் ஊடாக பொதுமக்கள் உள்நுழைய முடியும். தற்போது வாகனங்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதுடன், பொதுமக்கள் தங்கள் வருகையின் போது கொவிட்-19 தொடர்பான அனைத்து தடுப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்
பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும், பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், கடற்கரை நடைபாதையில் எந்த நேரத்திலும் அதிகபட்சமாக 700 பேர் மட்டுமே உட்செல்வதற்கு அனுமதி வழங்க இத்திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.