தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவிப்பு
வடகிழக்கு பகுதி தமிழர்களுக்கே உரியது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். இலங்கையுடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடும் முன் இந்தியா தமிழர்களிடம் கேட்டிருக்க வேண்டும். கபடத்தனமாக சீனத் தொடர்புகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை புவிசார் அரசியலை விளையாட விரும்புகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தமிழர்களின் அனுமதியின்றி வடக்கு கிழக்கில் எவராலும் காணிகளையோ எண்ணெய் தாங்கிகளையோ கொள்வனவு செய்ய முடியாது
தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல எனத் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் நேற்று 1800வது நாளை எட்டுகின்றது.
இதனையடுத்து அவர்களால் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
இந்தியா தலைமைப் பாத்திரம் ஏற்று, ஐ.நா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தினால், தமிழர் தாயகத்தில் கச்சத்தீவு, திருகோணமலை துறைமுகம் மற்றும் பிற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குத் தமிழர்கள் தயாராக உள்ளனர்.
தமிழர் தாயகத்தில் இந்தியாவுக்கு ஏதாவது தேவையென்றால், இந்தியா பேச வேண்டியது தமிழர்களிடமே அன்றி சிங்களவர்களிடம் அல்ல. இந்தியா இலங்கையுடன் பேசினால், இந்தியா இலங்கையுடன் செய்து கொண்ட சொந்த ஒப்பந்தத்தை அது மீறும்.
இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பதையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அந்தஸ்து நிலுவையில் இருப்பதையும் நாம் அறிவோம்.
இந்தியாவின் தலைமைத்துவத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அது தனது ஒப்பந்தத்தை இலங்கையில் மீறியது என்பது குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்த போது, வடகிழக்கு தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், வடகிழக்கு தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு அது தமிழர்களுக்குச் சொந்தமானது என்றும் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் தமிழர்களுக்கு உரிமையானது, அவர்களது நிலத்தின் மீது அதிகாரம் உட்பட பல விடயங்கள் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியா வாங்கியது.
இது இந்தியாவின் உடன்படிக்கையின் தூய்மையான மீறலாகும், என தெரிவித்துள்ளனர்.