-நக்கீரன்
கோலாலம்பூர், ஜன.24:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த நாள் விழா, அவர் பிறந்த நாளான ஜனவரி 23-இல் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்தவரும் அவர்தான். நேதாஜி, தன்னுடைய அரசியல் நகர்வுக்காகவும் இராணுவ நடவடிக்கைக்காகவும் மையமாகக் கொண்ட இடம் அன்றையா மலாயா; இன்றைய மலேசியா.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நாடு கடந்த இந்திய அரசாங்கத்தை நிறுவி, ஆண்டதும் சிங்கப்பூர் இணைந்திருந்த மலாயாவில்தான். மலாயாத் தமிழர்கள் இல்லையென்றால் இந்திய தேசிய இராணுவப் படையை நேதாஜியால் முறையாகக் கட்டமைத்திருக்க முடியாது. அதற்கேற்ப, நேதாஜியும் தமிழரின்பால் அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
மலேசியாவிற்கான இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நேதாஜியின் 125-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
கோலாலம்பூர், டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொடக்க விழாவிற்குப் பின், மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் இந்தியத் தூதர் பி.என். ரெட்டியும் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
இராணுவத்தை உருவாக்கி ஆயுதமேந்தி போராடிய சுபாஷ், திவிரவாத நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஒரு தேசத்தின் விடுதலைக்காகவே மரபுவழி இராணுவப்போராட்டத்தை அவர் முன்னெடுத்தார்.
அப்படிப்பட்டவரை இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியவில்லை. தமிழ்ப் பள்ளி பாட நூல்களில் நேதாஜி பற்றிய பாடத்தை இடம்பெறச் செய்ய வேண்டும். இது குறித்து, மஇகா முனைப்பு காட்டும் என்று சொன்ன விக்னேஸ்வரன், மஇகா தேசிய தலைமையக மண்டபம் நேதஜியின் பெயரில்தான் இருக்கிறது என்று பெருமையாக சொன்னார்.
மஇகாவிற்காக புதிய கட்டடம் எழுப்பப்படும்பொழுது, அங்கு நேதாஜியின் சிலை இடம்பெறும் என்றும் சொன்னார்.
தொடர்ந்து, பி.என். ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் நேதாஜியின் பெருமையைப் போற்றும் மலேசிய இந்தியர்களுக்கு தூதரகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக சொன்னார்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவரும் மலாயா இந்திய தேசிய இராணுவத்தில் லெப்டினண்ட் தகுதிக்கு உயர்ந்தவருமான டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், நேதாஜி சமூக நல இயக்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நேதாஜியின் மகள்வழி பெயரன் சந்திர குமார் போஸ் கல்கத்தாவில் இருந்து காணொளிவழி பேசினார்.
நேதாஜியின் பெருமைகளை அவர் எடுத்துரைத்தார். அதைப்போல ஐ.என்.ஏ.வில் இணைந்திருந்த பூச்சோங்கைச் சேர்ந்த லெப்டினண்ட் சுந்தரம் உட்பட பலரும் நேதாஜியின் பெருமை குறித்து பேசினர். கோலாலம்பூர் இந்திய தூதரகத்தின் கிளை அமைப்பான இந்திய கலாச்சார மையம்(ICC) நேதாஜி மையம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ஐசிசி ஒருங்கிணைப்பில் செம்மையாக நண்பகல் வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேதாஜி சமூக நல இயக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி நலம்சார்ந்த உதவி செய்யப்பட்டது. ஐசிசி – பொது உறவு அதிகாரியும் ஊடகப் பொறுப்பாளருமான ஹரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டார்.