வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு மற்றும் பள்ளி வளாக அருகில் கிடந்த நாட்டு வெடி குண்டு மீது வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ளது தெற்கு கோட்டையூர் காலணி உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி அருகே அரசு ஆதிதிராவிடர் உயர்நிலை பாடசாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் மக்கள் நடமாட்டம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டரின் சக்கரம் ஏறியதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பெரும் சத்தம் கேட்டது.
உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்திராயிருப்பு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு வெடித்த இடத்தில் பார்வையிட்டபோது அதன் அருகிலேயே மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி ஆய்வு செய்து மேலும் ஏதேனும் குண்டு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த புதன்கிழமை வ.புதுப்பட்டி அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அதை சனிக்கிழமை செயலிழக்க செய்தனர். அதில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.