(மன்னார் நிருபர்)
(24-01-2022)
உண்மையை காணவும் அதனை பேசவும் அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என இன்று திங்கட்கிழமை (24) காலை மன்னாரில் நடைபெற்ற சர்வ மத தலைவர்களுடன் விசேட கருத்து பகிர்வு நிகழ்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் மெடோசன் பெரேரா தலைமையில் இன்று திங்கட்கிழமை (24) காலை மன்னாரில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத நிகழ்வின் போது சர்வமததலைவர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத சக வாழ்வை பலப் படுத்துவதன் ஊடாக ‘பன்மைத்துவ சமூகத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் தொடர்பாடலுக்கான நிலையம்( CCT) அமைப்பின் ஒழுங்கமைப்பில் மன்னார் பிரதேச சர்வ மத குழு வினரின் ஏற்பாட்டில் ‘உண்மையை காணவும் பேசவும் முன்னே வாருங்கள்’ எனும் தொனிப் பொருளில் விசேட கருத்தமர்வு மன்னார் தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் மெடோசன் பெரேரா மேற்பார்வையில் தொடர்பாடலுக்கான நிலையத்தின் இணைப்பாளர் ஜோண்சன் தலைமையில் இன்று (24) திங்கட்கிழமை மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மத ரீதியான பிளவு மற்றும் இன மத முரண்பாடுகள் தொடர்பாக மதத் தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் அவர்களின் ஆலோசனைகளை வெளிக் கொண்டு வரும் முகமாக குறித்த விசேட கருத்தமர்வு மற்றும் விவாத நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச ரீதியாக இடம் பெறும் சிலை உடைப்புகள், மத சின்னங்கள் புறக்கணிக்கப் படுகின்றமை,மத தலைவர்கள் மத்தியில் முரண்பாடுகள் ,வெறுப்பு பேச்சு, சமூக ஊடகங்களின் தற்போதைய நிலை போன்றவை தொடர்பான விடயங்களில் மத தலைவர்கள் மற்றும் சர்வ மத குழுவினரின் வகிபாகம் தொடர்பாக பூரண தெளிவு படுத்தல் குறித்த நிகழ்வின் ஊடாக பகிரப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் சர்வ மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மத குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.