சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
சுயநலத்திற்காகச் செய்யப்படும் ஒரு செயல் மிக நீண்ட காலத்திற்கு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள் மிகவும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதிலும் குறிப்பாக, இந்த வகையான அரசியல் அநாகரீகம் தெற்காசிய அரசியல்(வியா)வாதிகளுக்குக் கைவந்த கலை. குடும்ப ஆட்சி, பதவி வெறி, முடிந்தவரை ஆட்சி காலத்தில் கொள்ளையடிப்பது, நாட்டை சொந்த தனியார் நிறுவனம் என்று கருதுவது, எதிர்பார்ப்பையும் மீறி ஆட்சி பறிபோனால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுடன் `டீல்` ஒன்றை ஏற்படுத்தி கொள்ளுவது அல்லது அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற அனைத்து வழிகளையும் கையாள்வது என்பது வளர்ந்துவரும் நாடுகளின் சாபக்கேடாகவே இருதுள்ளது. இதற்கு இலங்கை எவ்வகையிலும் விதிவிலக்கல்ல.
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பல்தரப்பில் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்துள்ளன. இதில் மிகவும் முக்கியமானதொரு விவாதப்பொருளாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது. அதுவே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் நிலவும் அவலநிலைக்கு காரணம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே ஒரு தீய உள்நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்பது கசப்பான உண்மையாகும்.
மிகவும் மோசமான அரசியல் சூதாட்டம் ஒன்று இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரங்கேறியது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மோசமான நிர்வாகம் காரணமாக நாட்டில் நிலவிய பிரச்சனைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் சிறிமாவோ தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி படுதொல்வியடைந்து, ஜெ ஆர் ஜெயவர்தன தலைமையேற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதுவும் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று `யானை` பலத்துடன் ஐ தே க ஆட்சியைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது. தமிழர் தாயக பகுதிகளில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி 21 இடங்களில் வென்றதை அடுத்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி அந்தஸ்தத்தை பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். இது தேசிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இனி எக்காலத்திலும் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வந்துவிடக் கூடாது என்பதில் `நரி` ஜெ ஆர் குறியாக இருந்தார். இதற்கு 14 மே 1976 அன்று நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ஒரு பின்புலமாக இருந்தது. தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, அது மறுக்கப்பட்டால் தனி நாடு என்ற தீர்மானம் ஜே ஆருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அதேவேளை எதிர்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருந்தால் பன்னாட்டுச் சமூகம் அவருடன் தொடர்பில் இருக்கும், தனிநாடு கோரிக்கை சர்வதேசமயமாக்கப்பட்டு வலுப்பெற கூடும் என்கிற அச்சம் ஜெ ஆரை தொற்றிக் கொண்டது. பின்னர் தனி நாடு என்ற எண்ணத்தை முறியடிக்க அரசியல் யாப்பின் 6 ஆவது திருத்தம் ஆவது திருத்தம் போன்றவை நடைமுறைக்கு வந்தன.
இன்றளவும் பெரும் பேசுபொருளாக இருக்கும் 13 ஆவது சட்டத் திருத்தமும் அதற்குக் காரணமான இந்திய – இலங்கை ஒப்பந்தமும் ஜே ஆர் ஆட்சிக் காலத்தில் தான் இடம்பெற்றது. அது ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பாதிப்புகள் உலமறிந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்த நிலையில் அதுவரை முதலாவது ஜனாதிபதி என்ற பெருமையைக் கொண்டிருந்த வில்லியம் கோபல்லாவ மறைமுகமாகப் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விழுந்த முதல் அடி.
ஜே.ஆர்.பிரதமராகப் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே, யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றை மையப்படுத்திப் பரவிய வதந்தி ஆகஸ்ட் 8 ஆம் திகதி நாடு முழுவதும் இனக்கலவரமாக வெடித்தது. சில நாட்கள் நீடித்த இந்தக் கலவரத்தில் ஏராளமான தமிழர்கள் தமது உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். இந்த கலவரம் காரணமாக மலையகப் பகுதியிலிருந்து 75,000க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் வடக்கு-கிழக்கில் குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். நாட்டில் நிலவும் சூழல் தேர்தல் நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என்று கூறிய ஜெ ஆர் புதிய அரசியல் யாப்பு மற்றும் ஜனாதிபதி முறை ஆட்சியை கொண்டுவந்த பிறகு தேர்தலே நடத்தாமல் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தனது மற்றும் நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலத்தை நீட்டித்துக் கொண்டார்.
அவரது புதிய அரசியல் யாப்பின் மூலம், நாடாளுமன்றத்தில் பரவியிருந்த அதிகாரம் ஜனாதிபதி எனும் தனிநபர் ஆதிக்கத்துக்கு செல்ல வழி வகுத்தது. இது `சுதந்திரமான ஜனநாயகத்துக்குச் சாவுமணி` என்று அப்போதே விமர்சனம் எழுந்தது.
ஜே.ஆரின். நரித்தனமான அரசியல் சிந்தனை அவர் கொண்டுவந்த அரசியல் யாப்பு மூலமாக அம்பலமானது. பயங்கரவாதத் தடைச்சட்டமும் இவரது ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது.
தனக்கு நாடாளுமன்றத்தில் இருந்த ‘யானை` பலம் கொண்ட அதிகார மமதை காரணமாக ஒரு கட்டத்தில் அன்றையத் தமிழ்த் தலைவர்களை நோக்கி, “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்று ஜே.ஆர்.சூளுரைத்தது தமிழர்கள் மனதில் ஆறாத வடுவாகவுள்ளது. அந்த சமயத்தில் ஜே.ஆர். “ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அனைத்து அதிகாரங்களையும் இந்த அரசியல் யாப்பு தந்துள்ளது” என்று கூறியது இச்சமயத்தில் நினைவுக்கு வருகிறது.
இன்றைய ஆட்சியாளர்கள் எவ்வகையிலிருந்து `அரசியல் நரி` ஜே ஆரிடமிருந்து மாறுபட்டவர்கள் அல்ல என்பதைக் காண முடிகிறது. சிறுபான்மை மக்கள் எந்த வகையிலும் வலுப்பெற்றுவிடக் கூடாது, அவர்களுக்கு உரிமைகள் என்ற பேச்சிற்கே இடம் கிடையாது, நாடு பெரும்பான்மையானவர்களுக்கே சொந்தம் என்கிற சித்தாந்தத்தில் ஜே ஆர் மற்றும் ஜி ஆர் ஆகியோரிடயே எந்த மாற்றமும் இல்லை.
இலங்கை போன்ற சிறிய ஏழை நாடுகளுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சரிப்பட்டு வராது. மேலும் அந்த முறைமையைக் கொண்ட நாடுகளில் பெரும்பாலும் சர்வாதிகாரம் அல்லது ஒருகட்சி ஆட்சியே நிலவுகிறது. இதில் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், ருவாண்டா, புரூண்டி, தெற்கு சுடான், தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, நிகராகுவா போன்று பல நாடுகளை உதாரணமாகக் காட்ட இயலும். இந்த வகை அரசாட்சியைக் கொண்ட நாடுகள் காலவோட்டத்தில் கொடுங்கோல் ஆட்சியை முன்னெடுத்து, மனித உரிமைகளை நசுக்கி, குடும்ப ஆட்சியை வளர்த்து, தம்மையும் குடும்பத்தாரையும் வளப்படுத்திக் கொண்டு நாட்டை திவாலாக்கியது போன்றவை வரலாற்று உண்மைகள்.
ஒரு தனி நபர் தான் நினைத்ததை, நினைக்கும் நேரத்தில், நினைக்கும் வகையில் செய்வதற்கு நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை வழிவகுக்கிறது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும்வரை அதைக் காரணம் காட்டி தொடர்ச்சியாக வந்த அரசுகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு நியாயம் கற்பித்தன. அதை ஒழிப்பதற்கு முதல் படியாக, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வழிசெய்யும் வகையில் 2015 ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க அரசு அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தது. எனினும் அடுத்து வந்த ராஜபக்சக்களின் ஆட்சி அந்த திருத்தத்தை ஒழித்துக் கட்டும் வகையில் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தது.
சிங்கள மக்கள் போர் என்ற மாயையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறியாமல் ஆதரித்தனர். ஆனால் போருக்கு பின்னர் ராஜபக்சக்களின் ஆட்சி அதன் கோர முகம் தெரிய ஆரம்பித்தது. போர்க்காலத்தில் மகிந்த ராஜபக்ச எடுத்த நிலைப்பாட்டைவிட இப்போது கோட்டாபய ராஜபக்ச எடுக்கும் நிலைப்பாடு மிகவும் கடும்போக்குத் தன்மை கொண்டதாகவுள்ளது.
அதன் விளைவை இப்போது அனுபவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்பதால் ஆட்சியாளர்களின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் சென்றது. ஊடகச் சுதந்திரம் நசுக்கப்படுவது, அரசுக்கு எதிரானவை என்று கருதப்படும் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்று பல்துறையினரை அச்சுறுத்துவது, அவர்கள் தேச பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தனர் என்று கூறி கைது செய்வது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் சிறையில் அடைத்து வைப்பது என்கிற நடைமுறை இன்றளவும் இலங்கையில் தொடருகிறது. இது போன்ற செயல்பாடுகள் நிறைவேற்று அதிகார முறையின் காரணமாகக் கட்டுக்கடங்காத அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதே காரணம்.
நீதித்துறைக்கே களங்கம் என்கிற விமர்சனத்திற்கு ஆளான மொஹான் பீரிஸ் போன்றவர்களை நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு வழி செய்தது ஜெ ஆர் கொண்டுவந்த ஆட்சி முறை. அதாவது ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் நாடாளுமன்றத்தை செல்லாக்காசாக்கி அதை தான் விரும்பியபடி தமது அடிவருடிகளைக் கொண்டு ஆட்டி வைத்து அதன் குரல்வளையை நசுக்க வழி செய்தது ஜே ஆரால் முன்னெடுக்கப்பட்ட நரித்தனமான சிந்தனை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முடிவுக்குக் கொண்டுவர ராஜபக்சக்களுக்கு விருப்பமில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாட்டின் தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளை அவர்கள் தொடர்ந்து தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களால் நேரடி வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் போது ஒரு நிறுவனத்தைவிட ஒரு தனி நபரிடம் அதிகாரங்கள் குவிந்திருப்பது நாட்டின் அவல நிலைக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. ஜனாதிபதி தான் விரும்பிய நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்த 19 ஆவது திருத்தத்தின் மூலம் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் அதை ஒழித்துக் கட்டியது 20 ஆவது திருத்தம்.
அமெரிக்கா மற்றும் சீனா இரண்டு பெரிய நாடுகளுமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் ஆட்சி செய்யப்படுகின்றன. ஆனால், அமெரிக்காவில் ஜனாதிபதியின் நியமனங்கள் அனைத்திற்கும் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் சீனாவில் அப்படியல்ல. ஏனென்றால் அங்கு ஒரு கட்சி. இலங்கை தாராளவாத முதலாளித்துவ கொள்கையை முன்னெடுக்கும் அமெரிக்காவையும் பின்பற்றாமலும், சீனா போன்ற ஒரு கட்சி ஆட்சி என்கிற வகையிலும் இல்லாமாலுள்ளது. அதேவேளை சீனாவைப் போல ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இலங்கை நகர்கின்றது என்கிற கவலையும் எழுந்துள்ளது.
ஜனநாயகம் என்பது அதிகாரப் பரவலாக்கமே தவிர அதிகார குவிப்பு அல்ல. தனி நபர்களிடம் அதிகாரக் குவிப்பு நாட்டிற்கு நல்லதல்ல.