(மன்னார் நிருபர்)
(28-01-2022)
இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) மன்னார் பிரதான பாலத்தின் இரு கடற்கரையோரங்களில் பாரிய சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் கடந்த வாரம் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் பிரதான பாலத்தின் இரு கடற்கரை ஓரங்களிலும் சிரமதானப் பணியை மேற்கொண்டு தூய்மையாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 7 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்,சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) உதவியுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் குறித்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,மன்னார் பிரதேசச் செயலாளர், மாவட்டச் செயலகம், மன்னார் பிரதேச செயலக பணியாளர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த பகுதியில் சேகரிக்கப்பட்ட அதிக அளவான கழிவுப் பொருட்கள் மன்னார் நகர சபையின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளது.