“ரொறன்ரோ மேயர் ஜோன் றோரி யாழ்ப்பாண நகருக்கு வருகை தந்து எமது மக்களை மகிழ்விக்க வேண்டும்” என்று யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் அவர்களும் ” யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் எமது ரொறன்ரோ நகருக்கு வருகை தந்து எமது நகரத்தின் சிறப்புக்களையும் அழகையையும் காணவேண்டும்’ என்று மேயர் ஜோன் றோரியும் பரஸ்பர அழைப்பு விடுத்ததை இணையவழிக் கலந்துரையாடலின் போது பார்த்த அனைவரும் பரவசம் அடைந்த நிகழ்வு கடந்த 25-01-2022 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.
அன்றைய தினம் ரொறன்ரோ-யாழ்ப்பாண நகரங்கள் சார்ந்த தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்ட நிகழ்வு ரொறன்ரொ மாநகர சபையில் உறுப்பினர் Jennifer McKellvie அவர்களதும் கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டிலும் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி இணையவழி கொண்டாட்ட நிகழ்வில் யாழ் மேயர் மணிவண்ணன் மற்றும் ரொறன்ரோ மேயர் ஜோன் றோரி ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டார்கள்.
ஆரம்ப உரையை நகர சபை உறுப்பினர் Jennifer McKellvie அவர்கள் ஆற்றினார்கள். அவர் தனது உரையில் ரொறன்ரோ வாழ் தமிழ் மக்கள் கனடாவின் வளர்ச்சியிலும் ரொறன்ரோ நகரின் வளர்ச்சியிலும் அதிக பங்கெடுத்து வருகின்றார்கள் என்றும் அத்துடன் இந்த நாட்டிலும் எமது நகரத்திலும் தங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து பேணுவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அன்றைய நிகழ்வை பிரகால் அவர்கள் அழகாகத் தொகுத்து வழங்கினார். கனடிய தமிழர் பேரரைவயின் தலைவர் சிவன் இளங்கோ அவர்களும் அங்கு சிறப்புரையாற்றினார்
அங்கு சிறப்புரை வழங்கிய யாழ்ப்பாண மேயர் ரொறன்ரோ நகரமும் யாழ்ப்பாணம் நகரமும் இணைந்து தமிழர் மரபுரிமை மாதத்தின் சிறப்பைக் கொண்டாடும் வைபவத்தை ரொறன்ரோ மாநகரத்தின் உறுப்பினரும் தமிழர்கள் பலர் வாழ்ந்துவரும் ரொறன்ரோ ரூஜ்பார்க் வட்டாரத்தின் அங்கத்தவருமான Jennifer McKellvie அவர்கள் ஏற்பாடு செய்துள்ளதை அறிந்து புளாங்கிதம் அடைவதாகவும் தொடர்ந்து இந்த நகரங்களின் இணைந்த செயற்பாடுகளின் மூலம் யாழ்ப்பாண நகர மக்கள் வியக்கும் வண்ணம் ஆக்கபூர்வமான விடயங்கள் இடம்பெற வேண்டும் என்றும். மேயர் ஜோன் றோரி அவர்கள் தனது நகரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளதைக் கண்டு தான் வியப்படைந்ததாகவும் இந்த நட்பு ரொறன்ரோ வாழ் தமிழ் மக்களுக்கு கிட்டியது போல தமது யாழ்ப்பாண நகரத்தில் வாழும் மக்களுக்கும் கிட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.