சீராளன்
இலங்கை என்னும் மாங்கனி வடிவான தீவானது அனைத்து இயற்கை வளங்களையும் கொண்டஒரு நாடாக விளங்கியதை பல வெளிநாட்டு அறிஞர்கள் தங்கள் பயணங்களின் இறுதியில் வெளிப்பாடையாகவே குறிப்பிட்டதை நாம் தற்போது ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். அந்தளவிற்கு வளமும் வனப்பும் கொண்ட ஒரு திருநாடாக திகழ்ந்தது இந்த அழகிய தீவு.
காலங்காலமாக இனப் பிரச்சனை காரணமாக கலங்களும் இனப்படுகொலைகளும் மிகுந்த ஒன்றாக காணப்பட்ட இலங்கையில் 2009ம் ஆண்டிற்கு பின்னர் யுத்தம் ஒன்று ஓய்ந்த நிலை நாட்டை கட்டியெழுப்புவோம் என்று கைகளை உயர்த்திய வண்ணம் ஆட்சியைப் பிடித்தார்கள் ராஜபக்சாக்கள்.
ஆனால் இந்த ராஜபக்சாக்களின் ‘அவசரப்புத்தி’யும் பேராசையும் தான் இலங்கை தற்பொழுது பாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கின்றது என்றே நாட்டு மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால் இலங்கை என்னும் அழகிய நாடு தன் வரலாற்றிலேயே காணாத கடும் அந்நிய செலாவணி குறைபாட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதாகவும் அதில் இருந்து மீள்வது மிகக் கடினமான ஒன்றாக இருக்கப் போவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். அது கடினமானதாகத்தான் இருக்கப் போகிறது என்பதை நாட்டு மக்களும் உணர்த்திருக்கிறார்கள். மக்கள் எதிர்பார்த்ததை விட வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்கிறது என்றால் மறுபுறம் அத்தியாவசிய பொருட்கள் சீராகக் கிடைப்பதில்லை. பொருட்களை தேடிச் சென்றும் வரிசையில் காத்திருந்தும் வாங்க வேண்டியிருக்கிறது. சதொச நிலையங்களைப் பற்றி வெளியே விளம்பரப்படுத்துவதற்கும் அங்கே கிடைக்க கூடிய பொருட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லையே என்பது பாவனையாளர் மத்தியில் உள்ள பொதுவான குற்றச்சாட்டு.
அவ்வாறானால் இப் பிரச்சினையில் இருந்து மீள்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது. சிலர் இந்த அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார்கள். வேறு சிலர் கடந்த அரசாங்கத்தின் மெத்தனமே இன்றைய கையறுந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள். இன்று சிலர், காரணம் இவை அல்ல நாட்டை ஆண்டவர்கள் தொடர்ச்சியாக நிதி கையாள்கையில் கொண்டிருந்த தவறான கொள்கைகளே இதற்குக் காரணம் எனச் சரியாகச் சொல்கிறார்கள். வெளிநாட்டு செலாவணி இருப்பை விரயம் செய்யாமல் அதை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளை உறுதியான முறைகளில் தொடர்ச்சியாக இந்த அரசுகள் கைக்கொள்ளவில்லை என்றும் வெறுமனே ஐந்தாண்டுகளுக்கான கொள்கை வகுப்புகளே மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றும் சில பொருளாதார துறை சார்ந்தோர் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஒரு வீடு கடனில் மூழ்கிவிடும் போது அவ்வீட்டுக்காரர் குடும்பத்தை நடத்துவதற்காக வெளியில் கடன் வாங்குவார். தன் ஆபரணங்களை அடகு வைப்பார். தன் வருமானத்தை மீறியதாக அவரது கடன்கள் அமையும் போது மீளவே முடியாத கடன் பொறியில் அவர் சிக்கிக் கொள்வார். இது போன்ற ஒரு நிலை தான் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது சமீப காலமாக வருமானத்துக்கு அதிகமான கடன்களை இந்நாடு பெற்று வந்திருக்கிறது. வருடா வருடம் நாம் செலுத்த வேண்டிய கடன் பளுவும் அதிகரித்து வந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் இந்நாடு திரும்பச் செலுத்த வேண்டிய கடன் தொகை 4.5 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் கடனில் மூழ்கும்போது அவன் தன் சுதந்திரத்தையும் இழப்பார் என்பது போல ஒரு நாடும் கடன் பெறும் நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட வேண்டிய அவசியம் எழும். அப்பிரச்சினையும் இலங்கை எதிர்கொண்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்றிருக்கும் மொத்தக்கடன் தொகை 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. சரியாகக் சொன்னால் இது ஜப்பானிடமிருந்து இலங்கை பெற்றிருக்கும் கடன் தொகைக்கு சமனானது. எனினும் இலங்கையின் மொத்தக் கடனில் சீனாவில் பங்கு 10 சதவீதம் மட்டுமே. இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 36 சதவீதம் சர்வதேச அரச கடன்களாகும்.
சீனா இலங்கைக்கு அளித்துள்ள கடன் பெறுமதி பத்து சதவீதமாகக் காணப்பட்டாலும் ஆசியாவில் தன் கடல் பட்டுப்பாதைத் திட்டத்துக்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் குழாய் பதித்தல், அதிவேக வீதிகள், அமைத்தல் என்பனவற்றில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. ஹம்பாந்தோட்டையில் சீனா அமைத்த துறைமுகம், விமான நிலையம் என்பன அபிவிருத்தித் திட்டங்கள் போலத் தோன்றினாலும் அவை பிற்காலத்தில் தனது கடல் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு பயன்படும் என்ற தூரநோக்குடன் செய்யப்பட்டவையாகவே அவதானிகளால் கருதப்படுகின்றது. இதைத்தான் சீனக் கடன் பொறி என்கிறார்கள்.
உதாரணத்துக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கான கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவது இலங்கையால் ஆகக் கூடியது அல்ல என்பது தெரிந்ததும், அதாவது வருமானம் தராத துறைமுகத்துக்காக கடனை செலுத்ததிக் கொண்டிருப்பது பொருளாதாரத்துக்கு பாதிப்பாகவே இருக்கும் என்ற நிலையில் அன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க துறைமுகத்தை சீனாவிடமே 99 வருட குத்தகைக்கு கொடுத்தார். சீனா எதிர்பார்த்தது இதையே. இதையடுத்து ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க இந்தியா முன் வந்தது. ஆனால் சீன அழுத்தம் காரணமாக அதில் இருந்து இலங்கை பின்வாங்க வேண்டியதாயிற்று. பெரும்பாலும் இவ்விமான நிலையமும் சீனாவின் கைகளுக்கு எப்போதாவது ஒரு சமயத்தில் செல்வதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன.
சீனாவின் ‘இலங்கைக்கான இவ் வரைபடத்தை’ விமர்சனம் செய்து பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ சமீபத்தில் சீன ஜனாதிபதிக்கு ஆறு பக்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். சீனாவின் அரசியல் செல்வாக்கை இலங்கையில் தீவிரப்படுத்தும் ஒரு உபாயமாகவே கடன் பொறித் திட்டத்தை அந்நாடு கைகொள்கிறது என்பது அவரது குற்றச்சாட்டாக இருக்கிறது. ‘இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு இப்போது உண்மையானதும் வெளிப்படையானதும் அல்ல. எமது அப்பாவி மக்களை வைத்து உலக சுப்பர் சக்தியாக உருவெடுப்பதற்கான முனைப்பில் எமது நட்றவை சீனா பயன்படுத்தி வருகிறது.
‘இது வெளிப்படையான ஒன்று’ என அவர் தனது கடிதத்தில் குறிப்பிடிருந்தார். இதேசமயம் இதை மறுக்கும் வகையில் சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தான் நடத்திய ஊடக சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக சகல உதவிகளையும் சீனா தொடர்ந்தும் வழங்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன் பாராளுமன்ற உரையில் அத்தியாவசிய இறக்குமதிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு அவசியமான வெளிநாட்டு செலாவணி போதியதாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருந்தார். இதையடுத்து, கடந்த ஜனவரியில் தன் புத்தாண்டு பயணத்தின் ஒரு கட்டமாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங்யீ கொழும்புக்கு வந்திருந்தார். சீனா வழங்கியுள்ள கடன்களை இலங்கைக்கு சாதகமான வகையில் மீளக் கட்டமைத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் சலுகைகளை ஏற்படுத்தல், இலங்கைக்கு வருவதற்கு சீன சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்குதல் என்பன தொடர்பில் இப் பயணத்தின்போது பேசப்பட்டதாக அறிய முடிகிறது.
மேலும் சீனாவின் பிரதான திட்டமாக அல்லது முதலீடாகக் கருதப்படுவது கொழும்பு துறைமுக நகரமாகும். 13 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந் நகரில் சர்வதேச நாடுகள் குறிப்பாக மேற்குலகம் தன் வர்த்தக நடவடிக்கைகளை இங்கே ஆரம்பிக்குமா என்ற ஒரு கேள்வி உள்ளது. ‘சீன நகர’த்தில் மேற்குலக நாடுகள் முதலீடுகளை மேற்கொள்ளாத பட்சத்தில் சீன நிறுவனங்களே அந்த இடத்தை நிரப்பப் போகின்றனவா என்ற கேள்வியும் உள்ளது.
இது இப்படி இருக்க, சீனாவுக்கு சமனான இலங்கையில் செல்வாக்கு செலுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது. வடக்கு – கிழக்கு தமிழர் அரசியல் தீர்வு தொடர்பான விவகாரத்தில் இந்தியா இலங்கையில் தீர்க்கமான ஒரு செல்வாக்கு செலுத்தும் நிலையில் உள்ளது. இந்த இடத்தை சீனாவினால் இட்டு நிரப்ப முடியும் என்பது சாத்தியம் அல்ல. சீனா கடன் பொறியை கையில் வைத்துள்ளது என்றால் அதைவிட சக்தி வாய்ந்த பொறியை தமிழர் பிரச்சினையை – இந்தியா கையில் வைத்துள்ளது.
எண்ணெய் விவகாரத்தில் இலங்கை நாட வேண்டிய ஒரே நாடாக இந்தியாவே காணப்படுகிறது. அடுத்த ஆறுமாத காலத்துக்கான எண்ணெய் தேவையை இந்தியாவிடமிருந்து பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. ஏற்கனவே இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறான கடன் சுமை அதிகரித்தும் அந்நிய நாடுகளின் .’அட்டகாசங்களும்’ அதிகரித்த நிலையில் அரசாங்கம் திணறிப் போயுள்ளது.
இன்றைய இலங்கை பொருளாதார சூழல் இவ்வருட இறுதியில் எங்கு போய் நிற்கும் என்பதை அனுமானிப்பதற்கில்லை. ஆனால், இத்தகைய ஒரு தவறை செய்யாதிருக்க இலங்கை அரசியல் தலைமைகள் இதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதே முக்கியமானது.