(மன்னார் நிருபர்)
(29-01-2022)
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சின் வழி காட்டுதலில் நாடு பூராகவும் கொவிட் நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியில் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (29) சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ‘கொவிட் தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதை’ எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு இன்று (29) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட ரீதியில் சிறப்பாக செயல்பட்ட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ உதவியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உட்பட சிறந்த மனித நேய பணியாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,ராணுவ அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்
கடந்த வருடம் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை பிரிவுக்கு என சுமார் பல இலட்சம் ரூபாய் பெறுமதியில் சிகிச்சை உபகரண தொகுதி மற்றும் மேலதிக சுகாதார உதவிகளை வழங்கிய மன்னார் மெசிடோ நிறுவனத்தினருக்கும் விசேட கௌரவிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.
-சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கலந்து கொண்டு குறித்த கௌரவத்தை பெற்றுக் கொண்டார்.
முழு உலகமும் கொவிட் தொற்று நோய்க்கு எதிராக போராட தொடங்கிய போது எமது நாட்டில் அதனை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வருடம் இதே நாளில் 29.01.2021 கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்குவதற்கான பணியினை சுகாதார துறையினர் முப்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் ஆரம்பித்திருந்தனர்.
அதேபோன்று வடக்கிலும் கொவிட் -19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மிகப் பாரிய பங்களிப்பினை வகித்திருந்ததுடன் மாவட்டத்தின் கொவிட் நிலையினையும் கட்டுப்படுத்தவும் முடிந்திருந்தது.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.