ஜனவரி 31, 2022 திங்கட்கிழமையன்று ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் கௌரவ ஸ்ரிபன். ல்ச்சே அவர்கள் தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வண்ணம் தமிழர் சமூகத்திற்கான நிதி ஒதுக்கீடாக ஒன்ராறியோ மாநில கல்வி அமைச்சிலிருந்து ஏறத்தாழ 50,000 டொலர்களை கனடா தமிழ்க் கல்லூரிக்கு ஒதுக்கியுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2021-2022 கல்வியாண்டுக்கான தமிழின அழிப்பு நினைவுகூரல் நிதியமாக இந்நிதி கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்களால் வழங்கப்பட்டது.
இதன்படி, ஒன்ராறியோவில் வாழும் தமிழ் மாணவர்கள் தமிழின அழிப்புத் தொடர்பான தகவல்கள், அதுதொடர்பான ஆதாரங்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கும், இன அழிப்புக்கு முகங்கொடுத்த சமுகம் என்ற வகையில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன அழுத்தங்களைக் கண்டறிந்து அவற்றைப் போக்குவதற்கும், சூழல் மாறுதலால் தமிழர் சமுகத்தினுள் ஏற்பட்டுள்ள தலைமுறையினர்களுக்கிடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் இந்நிதியானது கனடா தமிழ்க் கல்லூரியினால் பயன்படுத்தப்படும்.
கனடாவில் நீண்டகாலமாக இயங்கிவரும் கனடாத் தமிழ் கல்லூரியானது, கனடாவில் வளர்ந்து வரும் கனடிய இளம் தலைமுறையினரின் மேம்பாட்டுக்காக செயற்படுவதுடன் தமிழ் இளம் சந்ததியினர் தம் மொழி, வரலாறு, தமது இனத்துக்கு எதிராக சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கை போன்றவற்றைப் பயிலுவதற்கும் உறுதுணையாக விளங்குவதுடன், மேலும் அவர்களின் பல்வேறு அறிவுசார் வளர்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இது இவ்வாறிருக்க, கல்வி அமைச்சர் திரு. லெச்சே அவர்களும் அவர் சார்ந்துள்ள ஒன்ராறியோ கன்சர்வேட்டிவ் கட்சியும் தமிழர் நலன்சார்ந்த பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஒன்ராறியோ கன்சர்வேட்டிவ் கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்ட காலமாக தனது ஆதரவினை அளித்து வருகின்றது. அமைச்சர் திரு. செச்சே அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்களால் முன்மொழியப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டமூலம் 104ஐ ஆதரித்து ஒன்ராறியோ சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அத்துடன், 2013இல் சிறிலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை புறக்கணித்த முன்னாள் கனடிய பிரதமர் ஹாப்பர் அவர்களின் குழுவிலும் திரு. லெச்சே அங்கம் வகித்திருந்தார். அதுமட்டுமன்றி, நாம் இப்போது ஜனவரி மாதத்தில் கொண்டாடிவரும் தமிழ் மரபுத் திங்களுக்கான சட்டத்தினைக்கூட 2014ஆம் ஆண்டு பெப்ரவரியில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் திரு. டோட் ஸ்மித் அவர்களே ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் நடைபெற்றது தமிழர்கள் மீதான இன அழிப்பே என்பதை மேற்குலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. அக்கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனும் சட்டமூலத்தினை ஒன்ராறியோ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதனை இலங்கை அரசின் பலத்த அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சட்டமாகக் கொண்டுவந்தவர் ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்