(மன்னார் நிருபர்)
(09-02-2022)
‘இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கான படிக்கல்’ எனும் கருப்பொருளில் மன்னார் கரித்தாஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் மிசறியோ அமைப்பின் நிதி உதவியுடன் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் நூறு (100) மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் கரித்தாஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ச.ஜேசுதாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் கரித்தாஸ்-வாழ்வுதயம் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் வேப்பங்குளம் பள்ளிவாசல் மௌளவி எம்.நதீர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வேப்பங்குளம் கிராமத்தின் சூழல் பாதுகாப்பு குழு , இளையோர் சூழல் பாதுகாப்புக் குழு, சிறுவர் சூழல் பாதுகாப்பு குழு ஆகிய குழுக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த பிரதேசத்தின் பொது இடங்களில் நடுகை செய்வதற்கான மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் வைபவ ரீதியாக பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.