இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் எனப் பல வாக்குறுதிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட போதும் இலங்கை அரசாங்கம் இதுவரை எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சரின் இந்திய விஜயம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் பேசும் போது
“இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என தெரிவித்துள்ளார்.
ஆகவே இனப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை இந்தியா நேரடியாக வலியுறுத்தாமல் விட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக அதனை முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இந்தியாவினால் எவ்வளவு தூரத்திற்கு இலங்கைத் தமிழர்களின் அதிகாரங்களை பலப்படுத்த முடியுமோ அதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் கைகொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.