தனது புலன் உறுப்புகளான கண், காது, மூக்கு , வாய் ஆகியவற்றைக் கொண்டு மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இலங்கையின் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதைச் சேர்ந்த எம். எஸ். எம். பர்ஸான் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் என்ற செய்திகள் இலங்கையெங்கும் பரவியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்ததாக உலகின் 26 நாடுகளில் வியாபித்திருக்கும் சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முன்னிலையில் சாதனை வீரன் எம்.எஸ்.எம். பர்ஸானாவின் புலனுறுப்புகளால் சாதனைகள் புரியப்பட்டன.
மேற்படி சாதனைகள் உலக சாதனையாளர்களை பதியும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக கிழக்குமாகாணத்தின் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் மருதூர் மெய்வல்லுனர் நட்சத்திர விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டன. பர்ஸானால் சாகச நிகழ்வு எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றது .
கண், காது, மூக்கு , வாய் ஆகிய புலனுறுப்புகளால் அபார சாதனையை மேற்கொண்ட பர்சான் காதினால் பலூனை ஊதி உடைத்தல், கண்களால் இரும்பு கம்பியை வளைத்தல், பல்லால் 5.7 கிலோ கிராம் சுமையை சங்கிலிகளின் உதவியுடன் உயர்த்துதல்,குளிர்பானத்தை மூக்குத்துவாரத்தினூடாக அருந்துதல், மூக்கு துவாரத்தினூடாக வயரை செலுத்தி வாயினூடாக எடுத்து மின்குமிழை எரியச் செய்தல், பல்லால் தேங்காய் உரித்தல் போன்ற செயற்பாடுகளை 12 நிமிடத்தில் மேற்கொண்டு உலக சாதனையை நிலைநாட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இதன்படி தனது பெயரை சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச சோழன் உலக சாதனை இலங்கைப் பிரதிநிதிகளால் இவருக்கான சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக சான்றிதழ், பதக்கம் என்பன வழங்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி இதன் போது கெளரவிக்கப்பட்டார் .
20 நிமிடங்களுக்குள் இச்சாதனை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அவர் 12 நிமிடங்களில் இச்சாதனையை நிகழ்த்தினார்.
இச்சாதனை மூலம் நாட்டுக்கும், கிழக்கு மாகாணத்துக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் அவர் பெருமை சேர்ததுள்ளார்.
இந்நிகழ்வில் அவரது சாதனைகளைக் நேரடியாகக் கண்டு களிக்கவும் சாட்சிகளாக விளங்கவும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். அவர்களில் அனைத்துமத போதகர்கள், சர்வதேச சோழன் சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளான எம்.தனராஜன், ரீ.இன்பராஜா, எஸ்.நிலக்ஸன், கல்முனை மாநகர முதல்வர் ஏ. எம். ரக்கீப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவேனேந்திரன், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம். ஐ . ஜாபிர், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ெடாக்டர் எம்.எச்.கே. சனூஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோத்தர்கள் , கிழக்கு மாகாண கராட்டி சம்மேளன தலைவர் முஹம்மட் இக்பால, மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மெளலானா, முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், யூத் அலியன்ஸ் ஸ்ரீ-லங்கா இளைஞர் அமைப்பின் தலைவருமான இஸட். எம் ஸாஜீத் மற்றும் ஊடகவியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.