சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
`போன மச்சான் திரும்பி வந்தான்` என்கிற கதை தான் ஜி எல் பீரிஸின் இந்தியப் பயணம். அவர் மூன்று நாள் பயணமாக இந்தியா செல்கிறார் என்று ஓரிரு இலங்கை பத்திரிகைகள் கூறின. ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெயசங்கரை முக்கியமாகச் சந்தித்தை தவிர அவர் புது டில்லியில் என்ன செய்தார் என்பதை யாரும் அறியவில்லை. இந்திய ஊடகங்கள் அவரது விஜயத்தை கண்டுகொண்டதாகக் கூட தெரியவில்லை.
இலங்கை அரசின் துதிபாடிகளாக இருக்கும் ஊடகங்கள் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஊடகச் செய்தியை அப்படியே `வெட்டி-படியெடுத்து-ஒட்டும்` வேலையை மட்டுமே செய்தன. அதாவது வந்த அறிக்கையை அப்படியே வெளியிட்டன.அந்த அறிக்கையை இலங்கை பத்திரிகைகளும் வெளியிட்டன. நானறிந்தவரையில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் அவரது இந்திய விஜயம் குறித்து அறிக்கை ஏதும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.
பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தற்போதிருக்கும் சூழலில் இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான கூட்டத்தை காணொளி உரையாடல் மூலமே முடித்திருக்க முடியும். எனினும் நேரில் சென்றார். அவர் இலங்கை ஜனாதிபதியிடமிருந்து மிகவும் முக்கியமானதொரு நேரடிச் செய்தியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எடுத்துச் சென்றார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் கசிந்துள்ளன.
எனினும் அவரால் இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடனான சந்திப்பு பற்றியும் எந்த செய்தியும் வெளியாகவில்லை. அப்படியென்றால் இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன? என்கிற கேள்வி யதார்த்தமாக எழுகிறது.கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கும் சூழலில் அவர் இந்தியா வந்துசென்றுள்ளார். பிச்சை பாத்திரத்துடன் அலைந்து கொண்டிருக்கும் இலங்கை அரசு, யார் எப்படியான நிபந்தனையின் கீழ் கடனோ அல்லது நிதியுதவியோ அளித்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது என்பது தான் யதார்த்தமான நிலை.
ஆனால் சிறிதளவு கூட மனசாட்சியே இல்லாமல், ”இலங்கையில் பொருளாதார பிரச்சனை என்று ஏதுமில்லை, நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யசில வெளிநாட்டு சக்திகள் முயல்கின்றன; அப்படியான வெளிநாட்டு உதவிகள் எமக்குத் தேவையில்லை” என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார். எனினும் அந்த வெளிநாட்டு சக்திகள் யார், அவர்கள் ஏன் அப்படியான நிலைப்பாட்டில் உள்ளதாக அவர் கூறுவதற்கான காரணம் என்ன என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கபரால் தனது டிவிட்டரில் கூறவில்லை. நாட்டின் பொருளாதார நிலை சரியில்லை என்பது உலகத்திற்கே தெரியும்.இந்தியாவை ராஜபக்ச அரசில் இருக்கும் பலர் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் இந்தியா அறிந்துள்ளது.
பசில் ராஜபக்ச அண்மையில் இந்தியாவிற்கு சென்ற போது சுமார் 900 மில்லியன் டாலர் உதவியும், நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும் மேலதிகமாக 1.5 பில்லியன் டாலர்களும் உதவியும் அளிக்கப்பட்டது. இது ஓரளவிற்கு சறுக்கி விழும் நிலையில் இருந்த மனிதரைச் சற்று தூக்கி நிறுத்தியது போல் அமைந்தது. ஜனவரியில் பசில் ராஜபக்ச சென்று பணத்தோடு வர, பிப்ரவரியில் பீரிஸ் வெறுங்கையோடு திரும்பியுள்ளார் என்பதே யதார்த்தம்.
கடந்த ஆண்டு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை சில உத்தரவாதங்களை அளித்தது. அதில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் தொடர்பில் நேர்மையான நியாயமான பதில் மற்றும் விளக்கங்களை அளிப்பது மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பது போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஐ நா மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து காலக்கெடுவைப் பெற்ற இலங்கைக்கு அடுத்த அதிர்ச்சியாக ஐரோப்பிய நாடாளுமன்ற தீர்மானம் வந்தது. அதில் முக்கியமாக இலங்கைக்கு வரிச்சலுகை அளிக்கும் ஜி எஸ் பி + மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று அந்த தீர்மானம் கூறியது. ஆனால் வழக்கம் போல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற காத்திரமான முயற்சிகளை எடுக்காமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களை அன்றாட வாழ்விற்கு அல்லாடும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளது கசப்பான உண்மை.
மீண்டும் இந்தண்டு பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 1ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் வரவுள்ள நிலையில் இலங்கை அரசு தனது வெளியுறவு அமைச்சரை இந்தியாவிற்கு அனுப்பி ஆதரவு கோரியுள்ளது என்று என்று தெரிய வருகிறது. கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்ற போது, இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்காமல், வாக்கெடுப்பில் பங்குபெறாமல் இருந்தது. இம்முறை அவ்வாறு செய்யாமல் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிற்க வேண்டும் என்பதே பேராசிரியர் பீரிஸ் புது டில்லிக்கு எடுத்துச் சென்ற சிறப்புச் செய்தி என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை இலங்கைக்கு அவகாசம் அளிக்க தயாராக இருந்த நாடுகளும் இப்போது அதற்கு தயாராக இல்லை. உலக அரங்கான ஐ நா மனித உரிமைகள் ஆணையத்திடம் சில வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை செயல்படுத்த உள்நாட்டில் நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இருக்கின்ற நிலையை மேலும் மோசமாக்கியதாக ராஜபக்ச அரசாங்கத்தின் மீது பன்னாட்டுச் சமூகம் மிகவும் எதிர்மறையான உணர்வைக் கொண்டுள்ளன. எனவே இந்தியா மூலம் சில நாடுகளை தமக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும்படி இலங்கை தனது வெளியுறவு அமைச்சரின் பயணத்தின் போது வேண்டுகோள் முன்வைத்துள்ளது என்று புதுடில்லி தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தற்போதுள்ள சூழலில் இந்தியாவால் அப்படியான உத்தரவாதம் எதையும் அளிக்க இயலாது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் பீரிஸ்-கலாநிதி ஜெயசங்கர் சந்திப்பிற்கு பிறகு கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பும் இடம்பெறவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் ஊடக அறிக்கை ஒன்று அவர்களது இணையதளத்தின் வெளியானது.அதில் இரு அமைச்சர்களும் பரந்துபட்டளவில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர், நெருக்கமான நட்புடன் கூடிய அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவெடுக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் வழமையான ஒரு வாசகமாகும். அதாவது அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதாக அதை புரிந்துகொள்ள வேண்டும்.
`அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம்` மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்கிற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கையின் அடிப்படையில் இந்தியா இலங்கைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் கூறும் அந்த அறிக்கை, இருதரப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும் திட்டங்களை விரைவாக முன்னெடுத்துச் செல்ல இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கிறது. கொழும்பு துறைமுக நகரம் விஷயத்தில் இலங்கை இந்தியாவிற்கு கொடுத்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்காமல், கிழக்கு முனையத்தை சீனாவிற்கு நீண்டகால அடிப்படையில் அளித்ததை இந்தியா இன்னும் மறக்கவில்லை. அழும் குழந்தைக்கு வாழைப்பழம் கொடுத்துச் சமாதானப்படுத்துவது போல, அதற்கு பதிலாக ஜப்பானுடன் இணைந்து மேற்கு முனையத்தை புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் கூட்டாக மேம்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது.
இரு நாடுகளும் தமது கடற் பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உடன்பட்டன என்று இந்தியத் தரப்பு கூறுகிறது. மிகவும் முக்கியமாக இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் இணக்கப்பாட்டை முன்னெடுக்கவும் தமது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சருக்கு எடுத்துக் கூறியதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதேவேளை இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவை குறித்தும் தாங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் சமமாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதன் மூலமே நாட்டில் சமாதானமும் தமிழ் மக்களின் கௌரவமும் பாதுகாக்கப்படும்; அதற்கு அதிகாரப் பகிர்வு முகவும் முக்கியமானது” என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் பல தமிழ் அரசியல் கட்சிகள் 13 ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வு விஷயத்தில் அதற்கும் மேலாகச் செல்ல வேண்டுமென்று இந்தியப் பிரதமருக்கு அண்மையில் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தனர். ஆனால் எவ்வித அதிகாரமும் இல்லாமல் இருக்கும் மாகாண சபை முறைமை ஒழித்துவிட இலங்கை அரசு துடிப்பாகச் செயல்படுவது அனைவரும் அறிந்ததே. புதிய அரசியல் யாப்பு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுவரும் ராஜபக்ச அரசு ஒற்றையாட்சி என்பதிலேயே குறியாகவுள்ளது.
13 ஐ ஒழிப்பதற்கு இந்தியா உடன்படாது என்கிற விஷயம் வெளியுறவு அமைச்சர் மூலம் இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று புது டில்லியில் இது விஷயம் தொடர்பில் உரையாடியபோது அறிய முடிந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு மீனவர்கள் விஷயம் முக்கியமாக பேசப்பட்டு காத்திரமான ஒரு முன்னெடுப்புச் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமான நோக்கோடு அணுக வேண்டும், இருதரப்பும் கூட்டுக் குழுவொன்றை அமைத்து பேச வேண்டும் என்கிற ஒற்றை வரியில் அந்த விஷயம் முடிக்கப்பட்டுவிட்டது.
இந்த மாதம் 28 ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் 49 ஆவது பொதுச்சபை அமர்வில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழல் என்ற தலைப்பில், ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கை ஏ/எச் ஆர் சி/ 49/9 என்ற தலைப்பில் இடம்பெறுகிறது. இதில் இந்தியா தமக்குப் பக்கபலமாக நிற்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்பில் இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
நம்பிக்கையுடன் சென்ற பிரீஸ் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார் என்பதே யதார்த்தம்.