கனடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சார்பில் அதன் இடைக்காலத் தலைவர் கேண்டிஸ் பெர்கன் அவர்கள் கூட தற்போது ஒட்டாவா பாராளுமன்றத்திற்கு அண்மையில் சட்டவிரோதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கனடியப் பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
ஒட்டாவா-இடைக்கால கன்சர்வேடிவ் தலைவர் கேண்டிஸ் பெர்கன், பல நாட்களாக ஒட்டாவா நகரத்தில் சாலைகளை அடைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை உடனடியாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீதிகளை விட்டு நீங்கி உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்.
ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி ஆணைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வேண்டுகோள்கள் தொடர்பாக தானும் தனது கட்சியும் கவனத்தில் தீவிரமாக எடுக்கவுள்ளதாக அவர் உறுதியளிக்கிறார்.
கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக அண்மையில் தெரிவான பெர்கன் அவர்கள் நேற்று வியாழன் அன்று ஓட்டாவா பாராளுமன்றத்தில். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இதனைத் தெரிவித்தார்.
இம்மாத இறுதிக்குள் கோவிட்-19 நடவடிக்கைகளை நீக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த ஆளும் லிபரல் அரசாங்கத்திற்கு பெர்கன் அழுத்தம் கொடுக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு செய்தியாக வெளியிட்டார்.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு எல்லை தாண்டி பயணிக்கும் கனரக வாகன சாரதிகளுக்கு கட்டாய தடுப்பூசி தேவைகள் குறித்து ஆத்திரமடைந்த சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் ஆரம்பித்த அவர்களின் போராட்டங்கள் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு அதிகமாகச் செல்வதை தானும் தனது கட்சியும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்றும் பெர்கன் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டிய நேரம் இது என்பதையும் மிகவும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர் தொடர்ச்சியாக விடாப்பிடியாக உள்ளதால் அவர்கள் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்குமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்
“ஒட்டாவாவில் எம்மை விமர்சித்து கருத்துக்களை தெரிவிக்கும் அரசியல்வாதிகளே. நீங்கள் ஒரு செய்தியைக் கொண்டு வந்தீர்கள். உங்களுக்காகவும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பும் அனைத்து ஒட்டாவா வாழ் மக்களுக்காகவும் கனடியர்களுக்காகவும் நாங்கள் நிற்போம். ஆனால் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம், ”என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் தரப்பில் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த அறிக்கைக்கு பதிலாக தெரிவித்துள்ள இடைக்கால கன்சர்வேடிவ் தலைவர் கேண்டிஸ் பெர்கன் “இன்றே, முற்றுகைகளை அகற்றுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அமைதியாகவும் சட்டப்பூர்வமாகவும் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் , ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை காத்துக்கொள்ளும் வகையில் தடைகளையும் கனரக வாகனங்களையும் லாரிகளையும் அகற்ற வேண்டிய நேரம் இது” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.