சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூரைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் – லதா தம்பதி. வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் லதா மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
வெள்ளிக்கிழமை காலை வினோத்குமார் வேலைக்கும் லதா கடைக்கும் சென்றுவிட்டனர். 60 வயதான வினோத்குமாரின் தாயார் லலிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியம் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவன், கத்தியைக் காட்டி மிரட்டி, லலிதா அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளான்.
அவன் சென்ற சில நிமிட இடைவெளியில் மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்த மருமகள் லதா, மாமியார் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து, என்ன ஆயிற்று என விசாரித்துள்ளார். நகைப் பறிப்பு சம்பவம் குறித்து லலிதா கூறவே, கணவரிடம் போனில் தெரிவித்துவிட்டு, நேராக காவல் நிலையம் சென்று லதா புகாரளித்துள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த நேரம் லதா ஒரு நபரை தனது ஸ்கூட்டரில் அழைத்து வந்து வீட்டிற்கு சில அடி தூரத்தில் இறக்கிவிட்டுச் சென்றது பதிவாகி இருந்தது.
இதனையடுத்து லதாவைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்தான் கொள்ளையனை ஏற்பாடு செய்து நகையைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன் தனது தங்கையின் மருத்துவ செலவுக்காக மாமியாரின் 3 சவரன் சங்கிலியை வாங்கி லதா அடகு வைத்துள்ளார் .
அதன் பின்னர் தனது நகைகளை விரைவாக மீட்டுத்தருமாறு மருமகள் லதாவுக்கு லலிதா டார்ச்சர் கொடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, லதாவும் பணத்தை புரட்டி அடகு கடையில் இருந்து நகையை மீட்டு லலிதாவிடம் கொடுத்துள்ளார்.
நகை தொடர்பாக மாமியாரின் அணுகுமுறையால் கோபத்தில் இருந்த லதா, அவரைப் பழிவாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி அயப்பாக்கத்தைச் சேர்ந்த தனது பள்ளித் தோழனான கார்த்திகேயன் என்பவனை ஏற்பாடு செய்து, மாமியாரிடம் இருந்து நகையைப் பறிக்கத் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தன்று கார்த்திகேயனை தனது ஸ்கூட்டரில் கொண்டு வந்து வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்ற லதா, நகையைப் பறித்து வந்து கார்த்திகேயன் தன்னிடம் ஒப்படைத்த பிறகு ஒன்றும் தெரியாதவர் போல் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குச் சென்றுள்ளார். லதாவை கைது செய்த போலீசார், கார்த்திகேயனை தொடர்ந்து தேடி வருகின்றனர்.