ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னர்.
ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் க்ளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடியதையடுத்து, அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி அணி.
சமகாலத்தின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல், தமிழத்தை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை காதலித்துவந்த நிலையில், இவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் ஃபார்மஸி படித்தவர் வினி ராமன்.
அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் திருமணம் செய்யாமல் இருந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமணம் நடக்கவுள்ளது.
வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தமிழ் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழ் இணையத்தில் செம வைரலாகிவருகிறது. அதைக்கண்ட ரசிகர்கள், மேக்ஸ்வெல் – வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள்..