திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தனது கணவர் ஆனந்தனுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் மற்றும் பெரிய மகன் ராம்தாஸ் திருமணம் முடிந்த நிலையில், தனியாக வாழ்ந்து வரும் இளையமகன் ஜெயபால் வேலைக்குச் செல்லாமல் இவர்களுடன் வசித்து வந்துள்ளான்.
சனிக்கிழமை அன்று மல்லிகாவின் கணவர் வெளியூர் சென்றுவிட்டதால், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஊதாரியாக ஊரைச் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த மகன் ஜெயபாலிடம், வேலைக்குச் செல்லாமல் வீணாகச் சுற்றுகிறாயே, வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லையா? எனக் கூறி, தாய் மல்லிகா கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஊதாரி ஜெயபால், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் கழுத்தைக் கத்தியால் கொடூரமாக அறுத்துக் கொலை செய்துள்ளான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த குரூர சம்பவத்தை மறைக்கத் திட்டமிட்ட ஜெயபால், தாய் மல்லிகாவின் சடலத்தை வீட்டிற்குள்ளேயே குழிதோண்டிப் புதைக்கத் திட்டமிட்டுள்ளான்.
அதன்படி அந்த குடிசை வீட்டிற்குள்ளேயே குழியை தோன்டியுள்ளான். எப்போதும் வேலை செய்து பழக்கப்படாத ஜெயபாலுக்கு குழி தோண்டுவது கூட இயலாத காரியமாகி சோர்வடைந்துள்ளான். சோம்பேறித்தனத்தால் அந்த குழிக்கு அருகிலேயே ஜெயபால் படுத்து தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் கண்விழித்து மீண்டும் குழி தோண்டுவதைத் தொடர்ந்துள்ளான்.
எதிர்பாராத விதமாக அங்கு வந்த அவனது அண்ணன் ராமதாஸ் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வெள்ளவேடு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் தாயை கொன்று புதைக்க முயன்ற ஜெயபாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்
வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றிய மகனுக்கு புத்திமதி சொன்ன பாவத்துக்காக, பெற்ற மகனே தாயைக் கொன்று வீட்டிற்குள்ளேயே புதைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.