31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வில் பலரும் புகழாரம்
” கனடாவில் நன்கு அறியப்பெற்ற வர்த்தகப் பிரமுகராகவும் மனிதநேயம் கொண்டவராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கிவரும் கணேசன் சுகுமார் அவர்களின் துணைவியார் ஷீலா சுகுமார் அவர்கள், கணக்கியதுறையில் ஆழமான அறிவும் அளவற்ற செல்வமும் அடுத்தவர்களுக்கு உதவிடும் பண்பையும் கொண்டிருந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்வை மேற்கொண்டவர் அவரது அற்புதமான வாழ்வின் காலம் ஈடு செய்ய முடியாதது””
இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் நடைபெற்ற ஷீலா சுகுமார் அவர்களது 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வில் பலரும் அஞ்சலி உரையாற்றியபோது புகழாரம் சூட்டினார்கள்.
ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களின் ஆரம்ப அஞ்சலி உரையொடு ஆரம்பமான இந்த நிகழ்வை வர்த்தகப் பிரமுகரும் கணேசன் சுகுமார் அவர்களின் நெருங்கிய நண்பருமான குலா செல்லத்துரை அவர்கள் உணர்வுபூர்வமாகத் தொகுத்து வழங்கினார்.
அங்கு உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள், வர்த்தக துறை சார்ந்த நண்பர்கள் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் றைந்த ஷீலா சுகுமார் அவர்களது மனித நேயப் பண்புகளையும் தனது கணவரின் வர்த்தக முயற்சிகளுக்கு பக்க பலமாக இருந்து பணியாற்றி ஆர்வத்தையும் எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக கணேசன் சுகுமார் அவர்களின் வர்த்தக நிறுவனங்களின் முக்கிய பணியாளராக விளங்குபவரும் திருமதி ஷீலா சுகுமார் அவர்களின் இறுதி நாட்களில் அவருக்கு ஓத்தாசையாக இருந்து கவனித்தும் தேற்றியுயும் அத்துடன் கணேசன் சுகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு ஆதரவுக் கரமாக விளங்கியவருமான திரு கணேஸ் உருக்கமான உரை ஒன்றை வழங்கினார்.
அன்றைய தினம் மறைந்த தமது அன்புக்குரிய அன்னையின் நினைவாக அவரது புத்திரச் செல்வங்கள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு ஐந்து மில்லியன் ரூபாய்;களை வழங்கும் அறிவிப்பை செய்து ஸ்காபுறோ வைத்தியசாலைகளுக்கும் நிதி அன்பளிப்புக்களை வழங்கினார்கள்.