இலங்கை கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு விமானம் மூலும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததாக இலங்கை அரசின் தரப்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விமானம் மூலம் தமிழகம் அனுப்பப்பட்டனர். கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டிருந்த எஞ்சிய 47 மீனவர்களும் நேற்று முன்தினம் காலை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது